Home Featured நாடு ஏற்க முடியாததை செய்ததால் அமைச்சரவையில் இருந்து அன்வார் நீக்கப்பட்டார்: மகாதீர்

ஏற்க முடியாததை செய்ததால் அமைச்சரவையில் இருந்து அன்வார் நீக்கப்பட்டார்: மகாதீர்

549
0
SHARE
Ad

புத்ராஜெயா, ஆகஸ்ட் 2 – அமைச்சரவையில் இருந்து டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நீக்கப்பட்ட விதத்திற்கும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நீக்கப்பட்டதற்கும் வேறுபாடு உள்ளதாக துன் மகாதீர் தெரிவித்துள்ளார். ஏற்க முடியாத ஒன்றைச் செய்ததால்தான் அன்வார் இப்ராகிம் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் மகாதீர் கூறியுள்ளார்.

anwar-ibrahim-mahathir

அந்த நாள் ஞாபகம் – மகாதீரும், அன்வாரும், மகிழ்ச்சித் தருணங்களின்போது….

#TamilSchoolmychoice

கடந்த 1998ல் துணைப் பிரதமர் பதவியிலிருந்து அன்வார் நீக்கப்பட்டதும், தற்போது மொகிதின் நீக்கப்பட்டதும் ஒரே மாதிரியான நடவடிக்கை தானா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தபோதே, அவர் இவ்வாறு கூறினார்.

இதற்கு முன் தனது தலைமைத்துவத்தில் இரண்டு துணைப் பிரதமர்களை நீக்கிச் சாதனை படைத்தவர் மகாதீர். மூசா ஹீத்தாம், அன்வார் இப்ராகிம் இருவரையும் துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கியவர் மகாதீர்.

அதோடு, துணைத் தலைவராகவும், துணைப் பிரதமராகவும், இருந்த துன் கபார் பாபாவை, அன்வார் இப்ராகிமைக் கொண்டு, பதவியில் இருந்து வீழ்த்தியதிலும் மகாதீர் மறைமுகமாக முக்கிய பங்கு வகித்தார்.

“துணைத் தலைவர் என்னை ஆதரிக்காததால் அவரை நீக்கவில்லை. துன் மூசா ஹீத்தாம் கூட தாமாகவே பதவி விலகினாரே தவிர, நான் அவரை ராஜினாமா செய்யச் சொல்லவில்லை. ஏற்க முடியாத ஒன்றை செய்ததால்தான் நான் அன்வாரை நீக்கினேன்” என்று புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் மகாதீர்.

ஒருவேளை மொகிதின் யாசின் பெருங்குற்றம் செய்ததால் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

“மொகிதின் பெருங்குற்றம் இழைத்திருப்பார் என நினைக்கிறேன். எனவே அவர் நீக்கப்பட வேண்டும். அப்படியெனில் குற்றம் புரிந்த அனைவருமே நீக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் இந்த நாட்டை ஆளக்கூடாது,” என்றார் மகாதீர்.

இனி 1எம்டிபி குறித்து எழுதுவது தொடர்பில் தாம் தீவிரமாக சிந்திக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், ஏனெனில் அது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம் என்றார்.

தாம் சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதவில்லை என்று தெரிவித்த மகாதீர், ஒருவேளை விளக்கம் கேட்பதற்காக காவல்துறையினர் தன்னை அழைக்கக்கூடும் என்றார்.