Home இந்தியா ஐஎஸ் தீவிரவாதிகள் விடுவித்த பேராசிரியர் இருவரும் இந்தியா வந்து சேர்ந்தனர்!

ஐஎஸ் தீவிரவாதிகள் விடுவித்த பேராசிரியர் இருவரும் இந்தியா வந்து சேர்ந்தனர்!

466
0
SHARE
Ad

asஐதராபாத்,ஆகஸ்ட் 5- லிபியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுப் பின்பு விடுவிக்கப்பட்ட இந்தியப் பேராசிரியர்கள் இருவரும் இன்று காலை பத்திரமாக இந்தியா வந்து சேர்ந்தனர்.

லிபியாவில் சிர்தே பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இந்தியப் பேராசிரியர்களான கோபி கிருஷ்ணா, பலராம், விஜயகுமார், லட்சுமிகாந்த் ராமகிருஷ்ணா ஆகிய 4 பேரும் அண்டை நாடான துனிஷியா சென்று அங்கிருந்து கடந்த 29-ந்தேதி ஒரு பேருந்தில் தலைநகர் திரிபோலி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு சோதனைச் சாவடி அருகே ஐ.எஸ். தீவிரவாதிகள் சிலர் துப்பாக்கி முனையில் அவர்களைக் கடத்திச் சென்றனர்.

அவர்களைப் பத்திரமாக மீட்க இந்திய அரசு தீவிரமாக முயற்சி மேற்கொண்டதில், கடத்தப்பட்ட 4 பேரில் கர்நாடகாவைச் சேர்ந்த லட்சுமிகாந்த் ராமகிருஷ்ணா, விஜயகுமார் ஆகிய இருவரை மட்டும் தீவிரவாதிகள் விடுவித்தனர்.

#TamilSchoolmychoice

அவர்கள் இருவரும் லிபியாவிலிருந்து புறப்பட்டு ஐதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்களை அவர்களுடைய குடும்பத்தார் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பிப்பது என்பது செத்துப் பிழைப்பதற்குச் சமம். அவ்வகையில் இவ்விருவரும் அதிர்‌ஷ்டசாலிகள். ஆசிரியர்கள் என்று தெரிந்ததால் தான் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்ற இருவரும் தீவிரவாதிகளின் வசம் பத்திரமாக இருப்பதாகத் தப்பிப் பிழைத்து வந்த இருவரும் தெரிவித்தனர்.

இதுகுறித்து லக்ஷ்மிகாந்த் ராமகிருஷ்ணன் கூறியதாவது:.

“எங்கள் நால்வரையும் ஒரே இடத்தில் தான் வைத்திருந்தினர். எங்களை அவர்கள் எவ்விதத் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கவில்லை. எங்களை அவர்கள் மரியாதையாகவே நடத்தினர். எங்களைக் கடத்தியவர்கள் அனைவரும் மாணவர்கள். அவர்களுக்கு 13 வயதில் இருந்து 17 வயது வரை இருக்கும்.

நானும் விஜயகுமாரும் விடுதலையானது போல் மற்ற இருவரும் பத்திரமாக விடுதலையாக வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

எங்களைச் சிறைப்பிடித்த கும்பலின் தலைவன், அவர்கள் இரண்டு பேரும் நன்றாக இருக்கிறார்கள், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்று எங்களிடம் உறுதியளித்துள்ளார். அவ்வப்போது அவர்களைத் தொடர்பு கொள்ள எங்களுக்குக் சிறப்புத் தொலைபேசி எண் ஒன்றையும் தீவிரவாதிகள் கொடுத்துள்ளனர்.

அதில் அவ்வப்போது தொடர்பு கொண்டு அவர்களது பிடியில் இருக்கும் இருவரது நிலையையும் அறிந்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். எனவே இந்தியர்கள் கடத்தல் குறித்த செய்திகளை ஊடகங்கள் மிகுந்த பொறுப்புடன் வெளியிட வேண்டும்” என்றார்.

அங்கிருந்து அவர்கள் கர்நாடக மாநிலத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். தங்களை இவ்வளவு விரைவாக மீட்க நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கும், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் திரிபோலியில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கும் அவர்கள் நன்றி கூறினர்.