Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘நான் சிகப்பு மனிதன்’ – தூங்காமல் ஒருமுறை பார்க்கலாம்!

திரைவிமர்சனம்: ‘நான் சிகப்பு மனிதன்’ – தூங்காமல் ஒருமுறை பார்க்கலாம்!

616
0
SHARE
Ad

naan-sigappu-manithan-tracklistஏப்ரல் 11 – ‘நார்கொலாப்ஸி’ இது ஒரு மோசமான தூக்க வியாதி. அடிக்கடி கண்ணைக் கட்டிக் கொண்டு தூக்கம் வந்து விடும்.

என்ன டா இது இராத்திரி எல்லாம் தூக்கம் வராம அவனவன் பேஸ்புக்ல உட்கார்ந்து கிட்டு இருக்காய்ங்க. தூக்கம் வருவதெல்லாம் ஒரு வியாதியா? என்று குழப்பமாக இருக்கலாம்.

ஆனால் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷாலுக்கு உள்ள வியாதி எந்த அளவிற்கு மோசம் என்றால்? கண்ணுக்கு முன்னாடி அழகுச் சிலையாக நிற்கும் லட்சுமி மேனனை உணர்ச்சிவசப்பட்டு அணைக்க நினைக்கும் போது கூட பாழாய் போன இந்த தூக்கம் வந்து அப்படியே கண்கள் சொருகிவிடும்.

#TamilSchoolmychoice

எந்த ஒரு அதிர்ச்சியான சத்தத்தை கேட்டாலோ அல்லது உணர்ச்சிவசப் பட்டாலோ நடுரோட்டில் உச்சி வெயில் மண்டையைப் பிளந்தாலும் அந்த நேரத்தில் விஷாலுக்கு ஏசி ரூமில் பஞ்சு மெத்தையில் படுத்திருப்பது போல் தூக்கம் வந்து விடும். ஆனால் தூக்கத்திலும் மற்றவர்கள் பேசுவதை கேட்க முடியும்.

இப்படியாக மற்ற மனிதர்கள் சாதாரணமாக செய்யக் கூடிய சில விஷயங்களைக் கூட தம்மால் செய்ய முடியவில்லையே என்று விஷால் வருந்துகிறார். தனது ஆசைகளைப் பட்டியலிடுகிறார். ஷகிலா படத்திற்கு முதல் நாள் முதல் ஷோ சென்று பார்ப்பதும் அவரது 10 ஆசைகளில் ஒன்று.

இந்த வியாதியால் பெரும் அவதிப்படும் விஷாலை தெரிந்தே லட்சுமி மேனன் காதலிக்கிறார். ஷகிலா படத்திற்கு அழைத்துச் சென்று அவரது ஆசையை நிறைவேற்றுகிறார். (என்ன பொண்ணு டா இது…). விஷாலால் தனக்கு ஒரு பேரப்பிள்ளையை பெற்றுத் தர இயலாது என்பதை அறியும் லட்சுமி மேனனின் அப்பா ஜெயப்பிரகாஷ் அவர்களின் கல்யாணத்திற்குத் தடை விதிக்கிறார்.

தண்ணீரில் நனைந்தால் விஷாலுக்கு தூக்கம் வராது என்பதை கண்டுபிடிக்கும் லட்சுமி மேனன் விஷாலை விடாப்பிடியாக துரத்தி அவரது வாரிசை எப்படியோ வயிற்றில் சுமந்து விடுகிறார்.

இனி யாராலும் தங்களைப் பிரிக்க முடியாது என்று எண்ணி சந்தோஷப்படும் வேளையில், லட்சுமி மேனனுக்கு ஒரு அசம்பாவிதம் நடக்கிறது.

முதல் பாதியில் ஒவ்வொரு காட்சியும் அழகாக ரசிக்கும் படியாக நகரும் திரைக்கதை இரண்டாவது பாதியில் இடைவேளையோடு சற்றே சருக்கத் தொடங்குகிறது.

அந்த அசம்பாவிதம் நடப்பதற்குக் காரணமாக ஒரு பிளாஷ்பேக் பழிவாங்கும் கதையும் சொல்லப்படுகிறது. அங்கு தான் கதையின் தள்ளாட்டம் ஆரம்பமாகிறது.

இருந்தாலும், இரண்டாம் பாதியில் வரும் இனியா கதாப்பாத்திரம், ரசிகர்களின் மொத்த கவனத்தையும் ஈர்த்து சில நிமிடங்கள் கதையை நகர்த்துகிறது.

இதற்கு முன் விஷால் நடித்த சமர் படத்தை இயக்கிய அதே திரு தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நடிப்பு:vishal-krishna-

இயல்பாக நடிப்பதில் விஷாலின் திறமை அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சமீபகாலமாக ‘திமிரு’ தனமான நடிப்பை எல்லாம் விட்டுவிட்டு பாண்டிய நாட்டில் பயந்தாங்கொள்ளி, நான் சிகப்பு மனிதனில் தூக்க வியாதி என பல வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கிவிட்டார். நடிப்பில் நல்ல முதிர்ச்சி வெளிப்படத் தொடங்கியிருக்கிறது.

லட்சுமி மேனனுக்கு நேரும் கொடுமையை தன்னால் தடுக்க முடியவில்லையே என்று அவர் வருந்தும் காட்சிகளில் கைதட்ட வைக்கிறார்.

விஷாலின் அம்மாவாக வரும் சரண்யா வழக்கம் போல் அப்பாவி அம்மாவாக கலகலப்பை ஏற்படுத்தியிருக்கிறார். விஷாலின் நண்பராக வரும் ஜெகனுடன் அவர் அடிக்கும் காமெடி பஞ்ச் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன.

விஷாலின் இன்னொரு நண்பராக வரும் சுந்தர் (மயக்கம் என்ன, 3 புகழ்) தான் இரண்டாம் பாதியில் நடக்கும் கதையின் முக்கித் திருப்பத்திற்கு காரணமாக இருக்கிறார். ஆனாலும் நடிப்பில் சொதப்பியிருக்கிறார். வசனங்களை பேசும் பொழுது குளறுகிறார். அழுகையில் செயற்கைத் தனங்கள் தெரிகின்றது. இது போன்ற வலுவான கதாப்பாத்திரங்களை செய்வதற்கு இன்னும் மிகுந்த அனுபவம் தேவை என்பதை இயக்குநர் கவனிக்கவில்லையோ?

படத்தில் லட்சுமி மேனன், இனியா இரண்டு நாயகிகளும் அழகாக வந்து போகின்றனர். லட்சுமி மேனன் முதல் பாதியில் விஷாலுடன் இதழோடு இதழ் முத்தம் வைக்கும் காட்சியிலும் விஷாலை வம்படியாக நீச்சல் குளத்தில் தள்ளும் ‘அந்த’ காட்சியிலும் அவரது முகபாவனைகள் ஆபாசமாகத் தெரியவில்லை.

ஆனால் அதற்கு நேர்மாறாக இனியா வரும் ஒவ்வொரு காட்சியிலும் கவர்ச்சி தான். நல்ல நடிப்பு ஆற்றல் கொண்ட இனியா, தடாலென இப்படி ஒரு கதாப்பாத்திரத்தை சவாலாக ஏற்று செய்திருந்தாலும், இப்படியே தொடராமல் இருந்தால் கதாநாயகியாக தொடர்ந்து நிலைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

Naanஇசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு:

ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவு ஓகே ரகம் தான். பிரம்மிக்க வைக்கும் காட்சிகள் இல்லையென்றாலும் பாடல் காட்சிகள், படத்தில் தொடக்கத்தில் வரும் இரயில் காட்சிகள் போன்றவற்றை சிறப்பாக செய்திருக்கிறார்.

ஜீவி பிரகாஷ் பின்னணி இசையில் காதல் காட்சிகள் அற்புதம். அது அவருக்கே உரிய பாணி. பாடல்களை இன்னும் ரசிக்கும் படியாக அமைத்திருக்கலாம்.

படத்தின் எடிட்டிங்கை ஆண்டனி ரூபன் சிறப்பாக செய்திருக்கிறார்.

‘நார்கொலாப்ஸி’ என்ற நோய் பற்றியும், அதன் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் எந்த அளவிற்கு சக மனிதர்களிடமிருந்து வேறு படுத்தும் என்பதையும் கதையின் கருவாக வைத்து சொல்ல நினைத்த இயக்குநருக்கு பாராட்டுகள்.

அதே நேரத்தில், அந்த நோயில் இருந்து விஷால் தன்னை எப்படி மாற்றிக் கொண்டு வாழ்க்கையில் வெற்றியடைகிறார் என்பதை முழு நீளத் திரைக்கதையாக காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.  ஆனால் தேவையில்லாத பிளாஷ்பேக் பழி வாங்கும் படலம், கிளைமாக்ஸ் காட்சியில் திடீரென விஷாலின் அதிரடி சண்டை என பழைய மசாலாக்களை புகுத்தியதால் சலிப்பை ஏற்படுகின்றது.

‘நான் சிகப்பு மனிதன்’ – தூங்காமல் ஒருமுறை பார்க்கலாம்…

– செல்லியல் விமர்சனக் குழு