Home கலை உலகம் திரை விமர்சனம்: ‘தெனாலிராமன்’ – ராஜா ராணிக் கதைக்குள் காணாமல் போன பழைய வடிவேலு!

திரை விமர்சனம்: ‘தெனாலிராமன்’ – ராஜா ராணிக் கதைக்குள் காணாமல் போன பழைய வடிவேலு!

1049
0
SHARE
Ad

Thenaliraman poster 440 x 215ஏப்ரல் 18 – வைகைப் புயல் மீண்டும் வருகின்றார் என ஏகப்பட்ட விளம்பர எகத்தாளங்களுடன் இன்று திரை கண்ட தெனாலிராமன் இரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையே தந்துள்ளது.

#TamilSchoolmychoice

நகைச்சுவையில் தனக்கென ஒரு பாணி அமைத்துக் கொண்டு தமிழ்த் திரையுலகையே சுமார் 15 ஆண்டுகள் கலக்கு கலக்கு என்று கலக்கிய பழைய வடிவேலுவைப் பார்க்கலாம் என்ற ஆவலுடன் திரையரங்கில் போய் உட்கார்ந்தால், அதே இம்சை அரசன் 23ஆம் புலிகேசி போன்ற தோற்றத்துடன் நம்மை வெகுவாக – அதுவும் இரட்டை வேடங்களில் சோதிக்கின்றார் வடிவேலு.

அவரது வழக்கமான உடல் மொழியைக் காணோம். நகைச்சுவைத் தோரணங்களாக வெடிக்கும் அவரது வழக்கமான வசன வெடிகளையும் பார்க்க முடியவில்லை.

தமிழ் திரையுலகில் அவர் உச்ச கட்டத்தில் இருந்த வேளையில் எடுக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் அதே சாயலில் இந்தப் படமும் எடுக்கப்பட்டுள்ளது.

முதல் பாதியில் தெனாலிராமனாக வரும் வடிவேலுவின் கதாபாத்திரமும், அந்த காட்சிகளில் காட்டப்படும் புத்திசாலித்தனங்களும் நம்மைக் கவரத்தான் செய்கின்றன. சின்னச் சின்னக் கதைகளாக நாம் காலமெல்லாம் படித்த தெனாலிராமன் கதைகள் படத்தின் முதல் பாதியில் காட்சிகளாக விரிகின்றன.

ஆனால், இடையிடையே மன்னனாக வரும் வடிவேலுவின் நீண்ட  வசனங்கள்-விளக்கங்கள் போரடிக்கின்றன. கொட்டாவியை வரவழைக்கின்றன.

திரைக்கதை

Thenaliraman Vadivelu 300 x200தெனாலிராமன் என்ற கதாபாத்திரத்தின் அறிமுகத்தோடு தொடங்கும் படம் ஆரம்பத்தில் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் தொடங்குகின்றது.

கதையின் பின்னணியில் சீன தேசத்தவர்கள் தமிழ் நாட்டில் நுழைந்து வணிகங்களை கைப்பற்ற முயல்கின்றார்கள் என்ற அம்சத்தை நுழைத்திருப்பது இயக்குநரின் சாமர்த்தியத்தைக் காட்டுகின்றது.

தெனாலிராமனாக தனது சமயோசிதத்தாலும், அறிவாற்றலாலும் மன்னரின் கவனத்தைக் கவரும் வடிவேலு, மன்னரின் ஒன்பது அமைச்சர்களில் ஒருவராக – வெளியுறவுத் துறை அமைச்சராக உயர்கின்றார்.

ஆனால், தெனாலிராமன் மன்னரைக் கொல்ல வந்திருக்கும் கிளர்ச்சிப் படைக்காரன் என்ற திருப்பம் கதையில் நேரும்போது படமும் நொண்டியடிக்க ஆரம்பித்து விடுகின்றது.

அதன் பின்னர் இரண்டாம் பாதியில் கிளர்ச்சிப் படைக்காரர்கள் வருகை –  மன்னரின் மாறுவேடப் பயணம் –  மன்னர் மக்களுடன் மக்களாக வாழ்ந்து உண்மை நிலையைக் கண்டறிவது – தெனாலிராமன் கதாபாத்திரம் எம்.ஜி.ஆர் அளவுக்கு கதாநாயக தோரணையோடு மக்களிடையே புரட்சிப் பாட்டுப் பாடுவது –  அழகான கதாநாயகியான இளவரசியுடன் தெனாலிராமன் காதல் பாட்டு பாடுவது – நரமாமிசம் தின்னும் காட்டு வாசிகள் – வில்லன்களாக சீன நாட்டவர்கள் என்றெல்லாம் திசை தெரியாமல் இலக்கில்லாமல் போகும் திரைக்கதையில் நமது அபிமானத்துக்குரிய – நாம் பெரிதும் எதிர்பார்த்துச் சென்ற வடிவேலுவும் காணாமல் தொலைந்து போய் விடுகின்றார்.

படத்தின் குறைகள்

Thenaliraman Vadivelu 440 x 215படம் முழுக்க இரண்டு வடிவேலுவும் மாறி மாறி வருவதை, இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் அவரைப் பார்க்கும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களாக என்பதை இயக்குநர் யுவராஜ் தயாளன் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும்.

சில இளமையான துணைக் கதாபாத்திரங்களை திரைக்கதைக்குள் நுழைத்திருந்தால் அவர்களோடு இணைந்து வடிவேலுவின் நகைச்சுவையையும் சேர்த்திருந்தால் – அப்படிப்பட்டதொரு திரைக்கதைக் கோர்வை  ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமைந்திருக்கக் கூடும்.

அப்படிச் செய்யாமல் இரண்டு வடிவேலு கதாபாத்திரங்களைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருப்பது படத்தின் மிகப் பெரிய பலவீனம்.

இன்று உச்சத்தில் இருக்கும் சந்தானம் கூட மூன்று கதாநாயகப் பாத்திரங்களுள் ஒருவராக வந்துதான் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்று வெற்றிக் கொடி நாட்டினார் என்பதையும் வடிவேலு மறந்திருக்கக் கூடாது.

படத்திற்கு வசனம் எழுதியிருப்பவர் 1960ஆம் ஆண்டுகளில் பல படங்களில் வசனம் எழுதி பிரபலமாக இருந்த ஆரூர்தாஸ்.அதனால்தானோ என்னவோ, வசனங்கள் நாடகத்தனமாக,  நீளமாக இருக்கின்றன. படத்தின் விறுவிறுப்பையும் வெகுவாகக் குறைத்திருக்கின்றன.

இரண்டாம் பகுதியில் நர மாமிசம் தின்னும் காட்டு வாசிகள் வருகையெல்லாம் படத்தின் மையக் கருத்திற்கு தேவையில்லாத போரடிப்பு திணிப்புகள்.

படத்தின் நிறைகள்

இன்றைக்கு தமிழ்ப் படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அனைத்து நகைச்சுவை நடிக, நடிகையருக்கும் ஓரிரு காட்சிகளிலாவது வருவது போன்று வாய்ப்பு கொடுத்திருக்கின்றார்கள்.

தெளிவான ஒளிப்பதிவு, பண்டையக் கால அரண்மனைக் காட்சிகள், எல்லாம் சிறப்பாக கையாளப்பட்டிருக்கின்றன. ஆனால், அத்தனையும் மோசமான திரைக்கதையால் வீணடிக்கப்பட்டிருக்கின்றன.

படத்தின் இசை சுமார்தான் என்றாலும், பழங்காலப் பாடல்களைப் போன்று மெட்டுப் போட்டு ரசிகர்களைக்  கவர முயற்சித்திருக்கின்றார் இசையமைப்பாளர்  டி.இமான்.

Thenaliraman Meenakshi Dixit 440 x 215படத்தில் வைத்த கண் வாங்காமல் நாம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரே அம்சம் கதாநாயகி மீனாட்சி தீட்சித்.

வட நாட்டு இறக்குமதி என்பதால் நல்ல நிறத்துடன், கவர்ச்சியான தோற்றத்துடன், கண்ணைக் கவரும் உடைகளுடன் அடிக்கடி வந்து போகின்றார். வடிவேலுவுக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லை என்றாலும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைப்பவர் அவர் ஒருவர்தான்.

வடிவேலுவுக்கு இன்றைக்கும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்க தமிழ்ப்பட ரசிகர்கள் தயாராகத்தான் இருக்கின்றார்கள். இன்றைக்கும் அவரது நகைச்சுவைக் காட்சிகள்தான் தொலைக்காட்சி அலைவரிசைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன – அவற்றை திரும்பத் திரும்ப ரசிகர்கள் பார்க்க விரும்புகின்ற காரணத்தால்!

ஆனால், ரசிகர்கள் காண விரும்புவது தெனாலிராமன் படத்தில் வருவது போன்ற வடிவேலுவின் கதாபாத்திரத்தை  அல்ல!

எனவே, இந்த தெனாலிராமன் படத்திற்குள் காணாமல் போன வடிவேலுவை யாராவது தெளிவான சிந்தனை கொண்ட இயக்குநர்கள் கண்டுபிடித்து வெளியே கொண்டு வந்தால் பரவாயில்லை.

நாம் காண விரும்புவது சாதாரண மதுரைக்கார வடிவேலுவை! அலம்பல்களோடும், அலட்டல்களோடும், எல்லாரையும் சீண்டிப் பார்க்கும் வழக்கமான வடிவேலுவை!

தெனாலிராமனில் வருவது போன்று ராஜாவாகவோ, கதாநாயகனாகவோ –இரட்டைக் கதாபாத்திரங்களிலோ அல்ல!

-இரா.முத்தரசன்