Home அவசியம் படிக்க வேண்டியவை ஒபாமா – அன்வார் சந்திப்பு நிகழுமா? – மலேசிய அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான எதிர்பார்ப்பு

ஒபாமா – அன்வார் சந்திப்பு நிகழுமா? – மலேசிய அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான எதிர்பார்ப்பு

467
0
SHARE
Ad

85552563WM018_OBAMA_HOLDS_Nகோலாலம்பூர், ஏப்ரல் 24 – ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் முதன் முறையாக அமெரிக்காவின் அதிபர் ஒருவர் மலேசியாவுக்கு வருகை தருகின்றார் என்பதை விட,

#TamilSchoolmychoice

முக்கிய செய்தியாக மலேசிய அரசியல் வட்டாரங்களிலும் தகவல் ஊடகங்களிலும் பரபரப்பாகப் பேசப்படுவது, வருகின்ற அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, எதிர்க் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் தனிப்பட்ட சந்திப்பை நடத்துவரா என்பதுதான்!

ஒபாமா, அன்வாருடன் தனிப்பட்ட சந்திப்பு எதனையும் நடத்த மாட்டார் என வாஷிங்டன் ஏற்கனவே அறிவித்து  விட்டாலும் இந்த பரபரப்பு குறைந்த மாதிரி தெரியவில்லை.

ஜனநாயக நடைமுறை

வழக்கமாக வெளிநாடுகளுக்கு செல்லும் ஒரு நாட்டின் தலைவர் அந்தந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரையும் மரியாதை நிமித்தம் சந்தித்து எதிர்மறையான கருத்துக்களையும் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

குறிப்பாக இந்தியாவிற்கு, எந்த முக்கிய வெளிநாட்டுத் தலைவர் வந்தாலும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்து உரையாடுவது எப்போதும் தவறாமல் பின்பற்றப்படும் ஜனநாயக நடைமுறையாகும்.

ஆனால், மலேசியாவில் மட்டும் ஏனோ இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.

இந்நிலையில் ஒபாமா தனது மலேசிய வருகையின் போது அவருடன் தான் சந்திப்பு நடத்தினால் அது அமெரிக்காவின் ஜனநாயக மரபுகளுக்கு ஏற்ற ஒரு நடைமுறையாக கருதப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

ஏறத்தாழ கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்க அதிபர் ஒருவர் மலேசியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 1965 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் லிண்டன் ஜோன்சன்தான் மலேசியாவுக்கு வருகை புரிந்த கடைசி அமெரிக்க அதிபராவார்.

ஆனால் தன்னைச் சந்திக்காத காரணத்திற்காக ஒபாமாவைக் கண்டித்து அன்வார் எதனையும் கூறவில்லை.

அமெரிக்காவின் ஜனநாயகப் போக்கிற்கு ஏற்புடையதாக இருக்கும்

Anwar-Ibrahim_1568721cஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் அண்மையில் பேசிய அன்வார் இப்ராகிம், ஒபாமாவைச் சந்திப்பது தனது அரசியல் போராட்டங்களுக்கு உதவிகரமாக இருந்திருக்கும் என்பதோடு சுதந்திரத்தையும் நீதியையும் மேம்படுத்துவது என்பதை தனது வெளிநாட்டுக் கொள்கையாகக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் ஜனநாயக மரபுகளுக்கு ஏற்றதொரு நடவடிக்கையாகவும் இருந்திருக்கும் என்றும் கூறினார்.

ஆனால், அன்வார் உள்ளிட்ட அரசாங்கப் பதவிகளில் இல்லாத மற்ற தலைவர்களை குழுவாகவோ, தனியாக வேறு நிகழ்வுகளில் ஒபாமா சந்திக்கக் கூடும் என்ற சாத்தியத்தை அமெரிக்க அதிகாரிகள் நிராகரிக்கவில்லை.

எதிர்வரும் சனிக்கிழமை ஒபாமா தனது ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக மலேசியாவுக்கு மூன்று நாட்கள் வருகை மேற்கொள்ளவிருக்கின்றார்.

ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ் ஆகியவை ஒபாமா செல்லவிருக்கும் மற்ற ஆசிய நாடுகளாகும்.

அன்வார் மீது சுமத்தப்பட்டுள்ள நீதிமன்றக் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் அவரை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுபவை என நீண்ட காலமாக அமெரிக்க அரசாங்கம் கருத்து தெரிவித்து வந்துள்ளது.

அன்வாரும் அமெரிக்க அரசாங்கத்துடனும் அமெரிக்க அமைப்புகளுடனும் சிறந்த, நெருக்கமான நல்லுறவுகளைக் கொண்டிருக்கின்றார் என்பதும் மலேசியாவில் அரசியல் சீர்திருத்தங்களுக்காகக் கடுமையாகப் போராடி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒபாமாவுடனான தனது தனிப்பட்ட சந்திப்புக்கு மலேசிய அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது என்றும் அன்வார் குற்றம் சாட்டியுள்ளார்.

அன்வாரை ஒபாமா தனிப்பட்ட முறையில் சந்திப்பது சாத்தியமல்ல என்றாலும் ஒபாமாவின் வருகையின்போது மற்ற நிலைகளில் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் கூறியுள்ளார்.