Home அவசியம் படிக்க வேண்டியவை ‘சினிமா டு ஹோம்’ – இயக்குநர் சேரனின் புதிய முயற்சி!

‘சினிமா டு ஹோம்’ – இயக்குநர் சேரனின் புதிய முயற்சி!

706
0
SHARE
Ad

Cheranசென்னை, ஜூலை 16 – இன்றைய நிலையில், மிகவும் கஷ்டப்பட்டு, பல கனவுகளுடன் சொத்துக்களையெல்லாம் விற்று, முதலீடு செய்து தயாரிக்கப்படும் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள், அவ்வளவு எளிதில் திரையரங்குகளில் வெளிவந்துவிடுகிறதா?

அப்படியே வெளிவந்தாலும், திரையரங்குகள் எங்கும் ரசிகர்கள் நிறைந்து அந்த படம் வெற்றி பெற்று லாபத்தை ஈட்டிவிடுகிறதா?

இந்த கேள்விகளுக்கு, முகத்தில் சோகம் வடிய, “இல்லை” என்பதே பல முன்னணி தயாரிப்பாளர்களின் பதிலாக இருக்கின்றது.

#TamilSchoolmychoice

காரணம், அப்படம் தணிக்கை உட்பட பல்வேறு காரணங்களுக்காக முடங்கி விடுகின்றது அல்லது திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியிடப்பட்டு இரண்டு நாட்கள் ஓடுவதற்குள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளிவந்துவிடுகிறது.

இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரு முடிவுகட்ட இயக்குநர் சேரன், ‘சினிமா டு ஹோம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் புதிய படங்கள் டிடிஎச், இண்டர்நெட், கேபிள் டிவி, டிவிடி என பல வழிகளில் நேரடியாக ரசிகர்களின் வீடுகளை அடைய இத்திட்டம் ஒரு பாலமாக இருக்கும் என்றும் சேரன் கூறியுள்ளார்.

இந்த திட்டத்திற்கான அறிமுக விழா, சென்னையில், கடந்த திங்கட்கிழமை (14-7-14), காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்கியராஜ், கேஸ் ரவிக்குமார், சீமான், அமீர் என பல முன்னணி இயக்குநர்களோடு, திரைத்துறையைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குநர் சேரன் பேசியதாவது:-

“கண்கள் நிறைய கனவுகளுடன் கோடம்பாக்கத்தை சுற்றிக் கொண்டிருக்கும் உதவி இயக்குநர்களும், சேரன், சமுத்திரக்கனி போல் சினிமாவில் சேர்ந்து வெற்றி பெற்றுவிட மாட்டோமா என்று எங்களைப் போல் கிராமத்தில் இருந்து கனவு கண்டுகொண்டிருக்கும் புதிய தலைமுறையும் இந்த சினிமாவிற்குள் வரும் பொழுது, அவர்களுக்கு இந்த சினிமாவின் கதவுகள் வசந்தகாலமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் கடந்த 8 மாதங்களாக இந்த திட்டத்தை உருவாக்க பல ஆராய்ச்சிகள் செய்து வந்தோம். அதில் நிறைய உண்மைகள் தெரிந்தது. இந்த திட்டம் நிச்சயம் சாத்தியப்படும் என்றும் தெரிந்தது”

“பணம் கொடுத்து பார்க்க மக்கள் தயாராகத் தான் இருக்கிறார்கள். ஆனால் மாசம் 24 படங்கள் வெளிவந்தால் அதை திரையரங்கில் சென்று பார்ப்பதற்கு மக்களுக்கு நேரமில்லை. அதை பயன்படுத்தி சிலர் திருட்டுத்தனமாக படங்களை இணையத்திலும், டிவிடிக்களாகவும் வெளியிட்டு தயாரிப்பாளர்களை நஷ்டத்திற்கு உள்ளாக்குகின்றனர். அதையெல்லாம் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த ‘சினிமா டு ஹோம்’ என்ற திட்டம்” இவ்வாறு சேரன் தெரிவித்தார்.

இந்த ‘சினிமா டு ஹோம்’ திட்டம் மூலமாக, புதிய திரைப்படங்கள் திரையரங்கில் வெளியிடப்படுவதோடு, ஒரு வாரம் கழித்து டிவிடி ஆகவும் வெளியிடப்படும். இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 7000 பேர் முகவர்களாக நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் மூலம் முதற்கட்டமாக, இயக்குநர் சேரனின் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, நடிகை ரோகினி இயக்கியிருக்கும் அப்பாவின் மீசை, ஆள், சிவப்பு எனக்கு பிடிக்கும், மேகா, வேல்முருகன் போர்வெல்ஸ் ஆகிய படங்கள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சேரனின் இந்த புதிய முயற்சிக்கு உறுதுணையாக அவரது நண்பர்கள் அன்பழகன், முத்து ஆகியோருடன், சேரனின் மூத்த மகள் நிவேதிதா பிரியதர்ஷினியும் செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.