Home கலை உலகம் சாலையோரக் கடையில் வடை சாப்பிட ஆசைப்பட்ட ரஜினி!

சாலையோரக் கடையில் வடை சாப்பிட ஆசைப்பட்ட ரஜினி!

711
0
SHARE
Ad

Rajinikanth_14490கோலாலம்பூர், ஜூலை 23 – தமிழ் திரையுலகில் எளிமைக்கும், பண்பிற்கும் உதாரணமாகத் திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது பலரும் அறிந்தது தான்.

திரையில் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு ஒப்பனைகளும், ஸ்டைலான உடைகளும் உடுத்தினாலும், நிஜ வாழ்வில் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தினால் ஜிப்பாவை தவிர வேறு எதையும் அணிய விரும்பாத எளிமையான மனிதர்.

எப்போதும் தன்னை மக்களில் ஒருவனாக, சராசரி மனிதனாக வைத்துக்கொள்வதில் மிகவும் விரும்பும் ரஜினிகாந்த் குறித்து, அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்களால் பல சம்பவங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென ரோட்டில் வயதான பெண்மணி ஒருவர் சுட்டு விற்கும் வடை மீது ஆசை வந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று குமுதம் வார இதழில் வெளிவந்துள்ளது.

அந்த சம்பவம் இதோ, திரைபடத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு ஹீரோ தான். மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் இவருக்கு லட்சக்கணக்கான மதிப்புள்ள பங்களா வீடுகள் இருந்தும், அவரின் விருப்பமான தங்குமிடம் கோளம்பாக்கம் பண்ணை வீடுதான்.

சாதாரண பாமர மக்களின் வாழ்க்கை அனுபவங்கள் இவ்விடத்தில் வசிக்கும் போது அவருக்கு கிடைகிறது. அப்படி ஒரு நாள் பண்ணையில் தங்கியிருந்தபோது சாலையோரத்தில் விற்கும் ஆயாக் கடையின் வடை மிக ருசியாக இருக்கும் என்று தெரிந்தவுடனே எந்த ஒரு தயக்கமின்றி “வாவ்! நெஜமாலுமா? ரொம்ப நல்லா இருக்குமா? வாங்களேன்.. நாம போய் சாப்பிட்டுவிட்டு வருவோம்” என நண்பரிடம் கூறியிருக்கிறார்.

Rajinikanth in Top 50“சாதாரண மனிதனாக இருந்தால் பரவாவில்லை, நினைத்தவுடனே சென்று சாலையோரக் கடையில் வடை வாங்கி சாப்பிட முடியும். ஆனால் நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆயிற்றே! சாலையில் இறங்கி நடந்தாலே மக்கள் அனைவரும் உங்களைச் சுற்றி வளைத்துவிடுவார்களே” என்று அவரின் யோசனைக்கு தடை விதித்திருக்கிறார் அவரின் பாமர நண்பன்.

“ஓ! கரெக்ட்.. கரெக்ட்.. சரி, வெயிட் பண்ணுங்க, இதோ வந்துடுறேன்” என்று கூறிவிட்டு உள்ளே சென்று வயதான தாத்தா போல் தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டு வந்தார் ரஜினி.

வடை சாப்பிடுவதில் இவருக்கு இவ்வளவு ஆர்வமா? வடை என்றால் அவருக்கு ரொம்ப பிடிக்குமோ என்று அசந்துப் போய் நின்றார் அவரின் நண்பர்.

தானே சொந்தமாக அவரின் பழைய அம்பாசிடர் காரை வடைக் கடை நோக்கிச் செலுத்தினார். போகும் வழியில் ஒரு பாட்டி தனியாக சாலையோரத்தில் அமர்ந்திருப்பதை பார்த்து அவர் அருகே சென்று மெல்ல பேச்சுக் கொடுத்தார். முதலில் வேண்டா வெறுப்பாக பேசிய பாட்டி ரஜினியின் அன்பாக பேச்சால் அவரின் மனகுறைகளைக் கொட்டித் தீர்த்தார்.

பாட்டியின் சோக கதையை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ரஜினி “சாப்பிட்டிங்களா?” என்று ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார். சாப்பிடவில்லை என்று தெரிந்ததும் உடனே கடைக்குச் சென்று கொஞ்சம் பழம் மற்றும் பிஸ்கெட் வாங்கிக் கொடுத்தார்.

rajini-at-himalayas“கவலப் படாதீங்கம்மா.. விடிவதற்குள் எல்லாம் சரியாகிவிடும்” என்று ஆறுதல் கூறிவிட்டு  வடைக்கடைச் செல்வதை பாதியிலே நிறுத்திவிட்டு தனது பண்ணைக்கு திரும்புகிறார்.

பண்ணைக்கு பக்கத்தில் இருக்கும் ஆசிரமத்தை தொடர்புக் கொண்டு உடனே அந்த பாட்டியை அவர் செலவில் ஆசிரமத்தில் தங்க ஏற்பாடு செய்தார்.

இதிலிருந்து, திரைப்படத்திற்காக மட்டும் ரஜினி பிறருக்கு தொண்டு செய்வது மாதிரி நடிப்பதில்லை. நிஜ வாழ்விலும் பொது மக்களுக்கு தொண்டு செய்வதை கொள்கையாக கொண்டுள்ளார். அது தான் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இதில் வருத்தம் என்னவென்றால் மாறுவேடத்தில் சென்றும் ரஜினியால் சாலையோரப் பாட்டிக் கடையில் வடை சாப்பிட முடியவில்லை என்பதுதான்.