Home நாடு “நடந்த சம்பவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம்” – பிரதமரின் ஹரிராயா பெருநாள் செய்தி

“நடந்த சம்பவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம்” – பிரதமரின் ஹரிராயா பெருநாள் செய்தி

598
0
SHARE
Ad

najibகோலாலம்பூர், ஜூலை 28 – எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு சோகமயமான தருணங்களில் கொண்டாடப்படும் இந்த வருட ஹரிராயா அய்டில் ஃபித்ரி பெருநாளை முன்னிட்டு மலேசியர்களுக்கு வானொலி, தொலைக்காட்சி வழி வழங்கிய பெருநாள் செய்தியில் “நடந்து முடிந்த புனித ரமதான் மாதத்தில் நிகழ்ந்த எம்எச்17 விமானப் பேரிடர் மற்றும் பாலஸ்தீன-காசா பகுதியில் நிகழ்ந்த ஆயுத மோதல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நாம் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்” என பிரதமர் நஜீப் துன் அப்துல் ரசாக் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு பிரதமர் உட்பட முக்கிய அரசாங்கத் தலைவர்களின் ஹரிராயா பெருநாள் திறந்த இல்ல உபசரிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது செய்தியில் பிரதமர் “நாம் அனைவரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மகிழ்ச்சி என்பது பல நாடுகளில் நிரந்தரமானது அல்ல. உதாரணமாக ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு பிரதேசங்களிலும், வளர்ச்சியடைந்த ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் உள்ள மக்கள் இயற்கைப் பேரிடர்களை சந்தித்துள்ளதோடு, விரோதப் போராட்டங்களிலும், கடுமையான பொருளாதார நெருக்கடிகளிலும் அரசியல் சிக்கல்களிலும் சிக்குண்டு தவித்து வருகின்றனர்” என சுட்டிக் காட்டியுள்ளார்.

#TamilSchoolmychoice

எம்எச் 17 விமானப் பேரிடர்

mh17 (2)பிரிவினைவாதப் போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச் 17 விமானம் குறித்தும் விரிவாக தன் உரையில் தெரிவித்த நஜிப் அதனால் தான் ஒரு சவாலான நிலைமைக்குத் தள்ளப்பட்டதாகவும் இருப்பினும் விமானம் விழுந்த இடத்தை ஆக்கிரமித்துள்ள பிரிவினைவாதிகளிடம் மூன்று விவகாரங்களில் தான் உடன்படிக்கைக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் விமானம் விழுந்த இடத்திலிருந்து அனைத்து பயணிகளின் சடலங்களையும் அப்புறப்படுத்துவது. இரண்டாவது விமானத்தின் இரண்டு கறுப்புப் பெட்டிகளையும் ஒப்படைப்பது,

மூன்றாவதாக, சுதந்திரமான நடுநிலையான அனைத்துலக புலனாய்வுக் குழுவினர் விமானம் விழுந்த இடத்தில் முழுமையான, விரிவான ஆய்வை மேற்கொள்ள அவர்களுடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருவது.

“பிரிவினைவாதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள், தேவைப்பட்ட பலன்களைப் பெறுவதற்காக மிகுந்த கவனத்துடனும் ரகசியமாகவும் நடத்தப்பட்டன” என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நஜிப் தனது செய்தியில் மேலும் கூறியதாவது:

“அதே வேளையில் பாலஸ்தீன காசா பகுதியிலும் இந்த புனித ரமதான் மாதத்தில் ஆயுத மோதல்களும் நிகழ்ந்து அதன்வழி பல உயிர்ப்பலிகளும் ஏற்பட்டன. இந்த சம்பவத்தையும் நாம் கடுமையாக கண்டித்தோம்.”

“நடந்து முடிந்த சம்பவங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.’

“முதலாவதாக முஸ்லீம் சகோதரர்களிடையே ஒற்றுமை நிலவ வேண்டியதன் அவசியத்தை நாம் உணர வேண்டும். முஸ்லீம் சகோதரர்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் அவர்கள் சுலபமாக மற்றவர்களால் பயன்படுத்தப்படுவர்.”

“அதற்கேற்ப, கடந்த ஜூலை 23ஆம் தேதி நடைபெற்ற அவசர நாடாளுமன்றக் கூட்டத்தில் எம்எச் 17 விமானப் பேரிடம் குறித்த தீர்மானத்தை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரித்து இந்த விவகாரத்தில் நமது ஒற்றுமையை எடுத்துக் காட்டினர். ஒரு நாடு என்ற அளவில் நமது அடிப்படை பலத்தை எடுத்துக் காட்டும் விதமாக இந்த சம்பவம் அமைந்தது.” – என்றும் பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

எம்எச் 17 பயணிகளுக்கும் குடும்பத்தாருக்கும் அனுதாபம்

எம்எச் 17 விமானப் பேரிடரில் உயிரிழந்த பயணிகள் மற்றும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் பிரதமர் தனது ஆழ்ந்த அனுதாபங்களை பெருநாள் செய்தியின் வழி மீண்டும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நிகழ்ந்தது ஏற்றுக் கொள்ள முடியாத பேரிழப்பு என்றாலும், இது கடவுளின் சித்தம் என ஏற்றுக் கொள்வோம். கூடிய விரைவில் உயிரிழந்தவர்களின் சடலங்களை இறுதிக் காரியங்களுக்காக நாட்டுக்குள் விரைவாகக் கொண்டுவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் தனது பெருநாள் செய்தியில் உறுதியளித்துள்ளார்.

அதிகாரபூர்வ திறந்த இல்ல உபசரிப்புகள் ரத்து செய்யப்பட்டு விட்டாலும், மலேசியர்களின் பாரம்பரியப்படி, இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை வளர்க்கும் விதமாக, பிற இன சகோதரர்களை தங்களின் இல்லங்களுக்கு வரவேற்று விருநதுபசரிப்பு வழங்கும் நல்லெண்ண செயல்களை தொடர்ந்து மேற்கொள்ளும்படி மலேசியர்களை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.