Home உலகம் புதிய சட்டங்களால் சாதக வணிக சூழலை இழக்கும் அபாயத்தில் சிங்கப்பூர்

புதிய சட்டங்களால் சாதக வணிக சூழலை இழக்கும் அபாயத்தில் சிங்கப்பூர்

698
0
SHARE
Ad

Singapore city viewசிங்கப்பூர், ஜூலை 31 – உலக அளவில் சிறந்த வணிக சூழலைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்று சிங்கப்பூர்.

ஆனால் தற்போது புதிய தொழிலாளர் சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள அந்நாடு, அதன் காரணமாக உலக வணிக நிறுவனங்களின் விருப்பமான வணிக சூழலைக் கொண்ட நாடு என்ற அந்தஸ்தை கூடிய விரைவில் இழக்கலாம் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

நடுத்தர வருமானம் உடைய வேலைகள் என்று வரும்போது, வெளிநாட்டுத் தொழிலாளர்களை விட, உள்நாட்டு குடிமக்களுக்குத்தான் வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரவேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கும் சட்டங்கள் தற்போது சிங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

நாளை முதல் இந்த சட்டங்கள் அமுலுக்கு வருகின்றன.

வேலை தேடுபவர்களுக்கு சிறப்பு இணையத் தளம்

இந்த புதிய சட்டங்களின் வழி அரசாங்கமே வேலைவாய்ப்பு தேடும், சிங்கப்பூரின் குடியுரிமை பெற்ற மற்றும் நிரந்தரவாசிகளுக்கான (Permanent Residents) இணையம் வழியான தரவு தளம் (database) ஒன்றை தொடக்கியிருக்கின்றது.

நாளை முதல், 12,000 சிங்கப்பூர் வெள்ளிக்கு (ஏறத்தாழ 30,600 மலேசிய ரிங்கிட்) குறைவான மாத சம்பளம் உடைய  வேலைகளுக்கு முதலாளிகளும் நிறுவனங்களும் இந்த இணையத் தளத்தில் விளம்பரம் செய்ய வேண்டும்.

முதல் இரண்டு வாரங்களுக்குள் உள்நாட்டு வாசிகள் யாரும் விண்ணப்பம் செய்யாவிட்டால் அல்லது தகுதியான உள்நாட்டு வாசிகள் வேலைக்கு கிடைக்காவிட்டால் மட்டுமே, சம்பந்தப்பட்ட நிறுவனம் வெளிநாட்டிலிருந்து அந்த குறிப்பிட்ட வேலைக்கு ஆள் எடுக்க முடியும்.

சிங்கப்பூரில் சுலபமாக வெளிநாட்டிலிருந்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்து வசதிகள் இருந்த காரணத்தினால்தான் பல பன்னாட்டு நிறுவனங்கள் சிங்கப்பூரை தங்களின் வட்டாரத் தலைமையகமாகக் கொண்டு கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தன.

இதன் காரணமாக, ஏறத்தாழ 3.4 மில்லியன் பணியாளர்களைக் கொண்ட சிங்கப்பூரின் தொழில் துறையின் 38 சதவீதத்தினர் வெளிநாட்டினர் என்ற சூழல் உருவானது.

சிறிய நாட்டில் இத்தனை சதவீத வெளிநாட்டுப் பணியாளர்கள் இருப்பது உள்நாட்டு மக்களிடையே அதிருப்தியைத் தோற்றுவித்தது என்பதோடு, கடந்த பொதுத் தேர்தலில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வாக்களிப்பதற்கு ஒரு காரணமாகவும் இது அமைந்தது.

இதன் காரணமாக ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியின் (பிஏபி) வாக்கு வங்கி கடந்த பொதுத் தேர்தலில் 67 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாகக் குறைந்தது.

இதன் காரணமாகத்தான் தற்போது புதிய தொழிலாளர் சட்டங்களை அரசாங்கமே  அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆனால், அதே வேளையில், சுதந்திரமான, திறந்த பாங்குடைய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்ற மதிப்பை, இதுபோன்ற கட்டுப்பாடு கொண்ட தொழிலாளர் சட்டங்களால் சிங்கப்பூர் இழந்து விட நேரிடும்.

இதனால் தொழில் நுணுக்கமும், கைத்திறனும் கொண்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை சரியும் நிலைமை சிங்கப்பூருக்கு ஏற்படலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.