Home நாடு மலேசியாவில் தமிழ்ப் பத்திரிக்கையாளர்களுக்கு மதிப்பு தராத நடிகர் சூர்யா-‘அஞ்சான்’ சிறப்புத் திரையீட்டு ஏற்பாட்டுக் குழுவினர்

மலேசியாவில் தமிழ்ப் பத்திரிக்கையாளர்களுக்கு மதிப்பு தராத நடிகர் சூர்யா-‘அஞ்சான்’ சிறப்புத் திரையீட்டு ஏற்பாட்டுக் குழுவினர்

648
0
SHARE
Ad

Anjaanகோலாலம்பூர், ஆகஸ்ட் 15 – ‘அஞ்சான்’  திரைப்படம் இன்று உலகெங்கிலும் வெளியாவதை முன்னிட்டு நேற்று  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரத்தியேக சிறப்புக் காட்சிக்கும்,படத்தை இரசிகர்களிடையே விளம்பரப்படுத்துவதற்காகவும்,

கோலாலம்பூருக்கு வருகை தந்த, நடிகர் சூர்யா உள்ளிட்ட அந்தப் படத்தின் படக் குழுவினர் இங்கே முறையாக தமிழ்ப் பத்திரிக்கையாளர்களுக்கு மதிப்பு தந்து – அழைப்பு தராத விவரங்களை வாசகர்களின் பார்வைக்குக் கொண்டு வருவதை கடமை எனக் கருதுகின்றோம்.

சில நாட்களுக்கு முன்பு,  படத்தின் சிறப்புக் காட்சிக்காக சூர்யாவும் அஞ்சான் படக் குழுவினரும் மலேசியா வருகின்றனர் என்ற பத்திரிக்கைத் தகவல் வெளிவந்தது முதல்,

#TamilSchoolmychoice

அது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு எங்கே, எப்போது நடைபெறுகின்றது என்ற விவரங்களைத் தேட முற்பட்டோம்.

ஆனால், எந்தத் தரப்பிலிருந்தும் முறையான, தகவல்கள் கிடைக்கவில்லை.

“சீமா” ஏற்பாட்டில் நடப்பதாக வந்த தகவல்

UTV Logoசில தமிழக நண்பர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “நீங்கள் நேரடியாக படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான யுடிவி (UTV) நிறுவனத்தையே தொடர்பு கொள்ளுங்கள். அவர்களுக்குக் கண்டிப்பாகத்  தெரிந்திருக்கும். விவரங்கள் தருவார்கள்” என்றார்கள்.

யுடிவி நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாளர் ஒருவரை சென்னையில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “அங்கு சீமா (SIIMA) என்ற திரைப்படவிழா ஏற்பாட்டுக் குழுவினர்தான் எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்கின்றார்கள். அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்” என்றார் அந்த யுடிவி பொறுப்பாளர்.

இங்கே கோலாலம்பூரில் விசாரித்தபோது, யாருக்கும் சீமா என்றால் என்ன என்று தெரியவில்லை. அந்த அமைப்பு எது, யார் அதன் பொறுப்பாளர்கள் என்ற விவரங்களும் தெரியவில்லை.

உள்நாட்டுப் பத்திரிக்கை நண்பர்கள் சிலரைக் கேட்டபோது, அவர்களும் எங்களுக்கு இதுவரை எந்த ஒரு பத்திரிக்கை சந்திப்புக்கும் அழைப்பில்லை என்றார்கள்.

SIIMA logo 500 x 300மேலும் துருவித் தேடி விசாரித்தபோது, சீமா என்பது சவுத் இண்டியன் இண்டர்நேஷனல் மூவி அவார்ட்ஸ் (South Indian International Movie awards – SIIMA) என்றும் அவர்கள் அடுத்த மாதம் செப்டம்பரில் மலாக்காவில் திரைப்படவிழா ஒன்றை நடத்துகின்றார்கள் என்றும்,

அதன் உள்நாட்டு ஏற்பாட்டுக் குழுவினர்தான் அஞ்சான் படத்தின் சிறப்புத் திரையீட்டுக்கும், பத்திரிக்கையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்கின்றார்கள் என்பது போன்ற தகவல்கள் காதில் விழுந்தது.

ஆனால், உள்நாட்டு ஏற்பாட்டாளர்கள் யார் என்ற விவரங்களும் நாம் பலரை அணுகியும் கிடைக்கவில்லை.

அஞ்சான் படக்குழு கோலாலம்பூர் வருகை 

ஆனால்,  நடிகர் சூர்யா கோலாலம்பூர் வந்து சேர்ந்து விட்டார் என்று முகநூல் (ஃபேஸ்புக்) பக்கங்களில் நேற்று தகவல்கள் கசியத் தொடங்கின.

அதனைத் தொடர்ந்து அஞ்சான் படத்தை மலேசியாவில் வெளியிடும் நிறுவனத்தையும் தொடர்பு கொண்டோம்.

அந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் ஒருவரிடம் தொலைபேசியின் வழி தொடர்பு கொண்டு “செல்லியல் தகவல் ஊடகத்தில் இருந்து பேசுகின்றோம். அஞ்சான் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டோம்.

“சீமா’தான் ஏற்பாடு செய்கின்றார்கள். எங்களுக்கும் மேல்விவரங்கள் கிடைக்கவில்லை. அவர்கள் சில பத்திரிக்கையாளர்களை அழைத்திருப்பார்கள்” என்பதுதான் நமக்குக் கிடைத்த பதில் மொழியாக இருந்தது.

“மலேசியாவில் இணையம் வழியும், கைத்தொலைபேசிகளின் செயலி (Mobile App) வழியும், தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒரு சேர தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் தகவல் ஊடகம் நாங்கள்” என்ற விளக்கத்தையும் அந்த பொறுப்பாளரிடம் நாங்கள் தெரிவித்தோம்.

“உங்கள் தொடர்பு எண்ணைக் கொடுங்கள். சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுக்கொண்டு திரும்ப அழைக்கின்றோம்” என்றார்கள்.

ஆனால், இதுவரை யாரும் நம்மை அழைக்கவில்லை.

ஏன் இத்தனை முயற்சிகள்?

Anjaan Movie posterஇந்த இடத்தில் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

செல்லியல் சார்பாக அஞ்சான் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவும், சிறப்புத் திரையீட்டைக்காணவும் நாங்கள் இத்தனை முயற்சிகள் எடுத்தது,

சம்பந்தப்பட்ட நடிக-நடிகையரின் முக தரிசனங்களுக்காகவோ, அல்லது அந்தப்படத்தை இலவசமாக பார்க்க வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்ல.

செல்லியல் சார்பாக ஒவ்வொரு முக்கிய தமிழ்ப்படத்தையும் கோலாலம்பூரில் முதல் காட்சியின் போது, திரையரங்கு சென்று காசு கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கி பார்த்து விட்டு நாங்கள் எழுதுகின்ற “முதல் நாள் திரைவிமர்சனம்” எங்களுக்கு உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்துள்ளது.

முதல் நாளே நாங்கள் வெளியிடும் திரை விமர்சனத்தைப் பார்த்து விட்டுத்தான் படம் பார்க்கச்செல்வதாக உலக அளவில் பல இரசிகர்கள் எங்களுக்குத் தெரிவித்திருக்கின்றார்கள்.

அந்த வகையில் படத்தின் சிறப்புத் திரையீட்டின் மூலம் படத்தைப் பார்த்துவிட்டு – முதல் காட்சி விமர்சனத்தை உடனுக்குடன் செல்லியலில் வெளியிட வேண்டும் என்பதுதான் நமது நோக்கம்.

படம் நன்றாக வந்திருந்தால் அந்த தகவலை நமது வாசகர்களுக்கு உடனுக்குடன் செல்லியல் வழி கொண்டு சேர்க்க வேண்டும் – அவர்களும் படத்தைப் பார்த்துக் களிக்கட்டுமே என்ற நல்லெண்ணம்தான் எங்களுக்கு!

அதே வேளையில் அஞ்சான் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் சில சிறப்புத் தகவல்கள் கிடைத்தால் அவற்றை செல்லியல் வாசகர்களுடன் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளலாம் என்பதுதான் எங்களின் தலையாய நோக்கம்.

தொடர்ந்து மற்ற சில பத்திரிக்கை நண்பர்களைத்தொடர்பு கொண்டபோதும் யார் யார் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு அழைக்கப்பட்டார்கள் என்ற விவரங்கள் இறுதி வரை நமக்குக் கிடைக்கவில்லை.

ஆனால், முகநூல் பக்கங்களின் மூலம், நேற்று மாலை ஓரிடத்தில் அஞ்சான் படக்குழு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியதை அறிந்தோம்.

உள்நாட்டு தமிழ்ப் பத்திரிக்கையாளர்களை மதிக்காத சூர்யா – அஞ்சான் படக் குழுவினர்

அஞ்சான் பட சிறப்புத் திரையீட்டுக்கு வரும் நடிகர் சூர்யா உள்ளிட்ட அஞ்சான் படக் குழுவினருக்கு எங்களின் தாழ்மையான வேண்டுகோள் இதுதான்.

இன்றைக்கு தமிழ்ப்படங்களின் வர்த்தக ரீதியான வெற்றிக்கு உலக அளவில் முதலிடம் கொடுப்பது மலேசியாதான் என்பதை மட்டும் மறக்காத நீங்கள் –

அதற்கு சரிசமமாக உள்நாட்டில் உள்ள தமிழ்ப் பத்திரிகைகள், தகவல் ஊடகங்கள், உள்நாட்டு கலை உலகத்தினர் – ஆகியோருக்கும் உரிய மரியாதை கொடுங்கள்.

யாரோ சீமா ஏற்பாடு செய்கின்றார்கள் என்று எல்லோரும் தப்பித்துக் கொள்ளாதீர்கள்.

யார் இந்த சீமா? எங்கிருந்து இவர்கள் வருகின்றார்கள்? இவர்களின் உள்நாட்டுப்பிரதிநிதிகள் யார்? அவர்கள் ஏன் இங்கே வந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு முதற் கொண்டு எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்?

அப்படியே பத்திரிக்கையாளர் சந்திப்பு என்றால், மலேசியாவில் இருப்பவை ஏழே ஏழு தமிழ் நாளிதழ்கள் – விரல் விட்டு எண்ணக் கூடிய வார மாத இதழ்கள் – செல்லியல் உள்ளிட்ட ஓரிரு இணைய செய்தித் தளங்கள் – அவ்வளவுதான்.

விவரங்கள் தெரியாவிட்டால் கேளுங்கள் தருகின்றோம், அவர்களின் முகவரிகளோடு!

இந்த சிறிய பத்திரிக்கை உலகத்திற்குக்கூட முறையாக அழைப்பு தர முடியாத ஏற்பாட்டுக் குழுவினரிடம் ஏன் பொறுப்பை ஒப்படைக்கிறீர்கள்? என்றுதான் நாங்கள் அஞ்சான் படக் குழுவினரைப் பார்த்துக் கேட்கின்றோம்.

சூர்யாவுக்கும் முக்கிய பொறுப்பு இருக்கின்றது

Surya Actorஇந்த விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கும் முக்கிய பங்கு இருக்கின்றது.

மற்றவர்கள் ஏற்பாடு செய்கின்றார்கள் என சூர்யாவும் தப்பித்துக் கொள்ள முடியாது.

அஞ்சான் படம் முழுக்க முழுக்க சூர்யாவை முன்னுக்கு வைத்துத்தான் வியாபாரம் செய்யப்படுகின்றது. இங்கேயும் அவருக்கு ஆயிரக்கணக்கான இரசிகர்களின் ஆதரவும் உண்டு.

இந்நிலையில் மலேசியா வந்திருக்கும் சூர்யாவுக்கு இங்கே ஏற்பாடுகள் – குறிப்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடுகள் – முறையாக நடக்கின்றனவா –

என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய தார்மீகக் கடமை அவருக்கும் அஞ்சான் படக் குழுவினருக்கும் இருக்கின்றது என்பதைத் தாழ்மையுடன் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

மலேசியாவில் எந்த தமிழ்ப் பத்திரிக்கைகள் இயங்குகின்றன –  இணையம் வழி எந்த தமிழ் செய்தித் தளங்கள் இயங்குகின்றன –

என்பது கூட தெரியாத சீமா போன்ற அமைப்புகளிடம் ஏன் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாட்டுப் பொறுப்புகளை வழங்குகின்றீர்கள் என்பதுதான் நமது கேள்வி!

இதே நிலைமை மற்ற தமிழ்ப்  பத்திரிக்கைகளுக்கும் தானா என்பதை அவர்கள்தான் வாய்விட்டு சொல்ல வேண்டும்.

செல்லியல் போன்ற மலேசியாவில் இயங்கும் தமிழ் தகவல் ஊடகங்களை மதிக்காத – நாம் முயற்சி எடுத்தும் அழைப்பு விடுக்காத – அஞ்சான் படக் குழுவினருக்கும் அதனை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நமது கண்டனங்களை – கருத்துகளை முன்வைத்து விட்டோம்.

முடிவு செய்வது வாசகர்களின் பொறுப்பு.

இருப்பினும், இன்றைக்கு வெளியாகும் – அஞ்சான் படத்தை முதல் காட்சியின்போது செல்லியல் ஆசிரியர் குழுவினர் காசு கொடுத்துப் பார்த்து –

எங்களின் நியாயமான – மேற்கண்ட சம்பவங்களால் நடுநிலை பிறழாத – எங்களின் திரை விமர்சனத்தை – அடுத்த சில மணி நேரங்களில் செல்லியல் வாசகர்களுக்கு வழங்குவோம், என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.