Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘அஞ்சான்’ – பெரிதாக ஈர்க்கவில்லை!

திரைவிமர்சனம்: ‘அஞ்சான்’ – பெரிதாக ஈர்க்கவில்லை!

757
0
SHARE
Ad

anjaan-2கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 – மும்பையில் இரண்டு தாதா கும்பல்களுக்கு இடையில் நடக்கும் சண்டை, பழிவாங்கும் போராட்டம் தான் கதை. இந்த கதை பாட்ஷா காலத்திலிருந்து, கடந்த ஆண்டு வெளிவந்த தலைவா வரையில் பல முன்னணி நடிகர்களை வைத்து அரைக்கப்பட்டுவிட்டது. இப்போது அந்த வகையில் நடிகர் சூர்யாவையும் வைத்து மீண்டும் ஒருமுறை அரைத்து ‘அஞ்சான்’ என்ற பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள்.

படம் தொடங்கியது முதல் அடுத்தடுத்து நடக்கும் காட்சிகளை பார்வையாளர்களால் எளிதில் கணித்து விடக்கூடிய அளவிற்கு அதர பழசான கதையை தேர்ந்தெடுத்த இயக்குநர் லிங்குசாமி, ‘சண்டைக்கோழி’ பாணியில் ஏதாவது ஒரு குக்கிராமத்தில் இந்த கதையை எடுத்திருந்தால் கூட கொஞ்சம் வித்தியாசமாக இருந்திருக்கும். தாதாக்களை காட்டி காட்டி அலுத்துப் போய்விட்ட அதே மும்பையை தான் மீண்டும் காட்ட வேண்டுமா?

சரி… பழைய கதை தான்… படத்தில் புதுமையாக ஏதாவது செய்திருக்கிறார்களா? என்று கேட்டால், சூர்யாவின் நடிப்பு, சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு, அழகிய நண்பனாக வித்யூத் ஜம்வால், சமந்தாவின் கவர்ச்சி, யுவனின் பின்னணி இசை ஆகியவற்றை கூறலாம்.

#TamilSchoolmychoice

மும்பை மாநகரத்தில் ‘ஹைடெக்’ தாதாக்கள் கூடும் இடங்களான பார், ஹோட்டல் போன்றவற்றை மிக அழகாக பளிச்சென காட்டியிருக்கிறது சந்தோஷ் சிவனின் கேமரா.

“ஒரு கண்ஜாடை செய்தாளே”, “காதல் ஆசை”, “ஏக் தோ தீன்” பாடல்களும், காட்சிகளும் நம்மை ரசிக்க வைக்கின்றன. “ஏக் தோ தீன்” பாடலில் சூர்யாவின் குரலை கேட்பது புதுமையாக உள்ளது.

Anjaan,நடிப்பு:

சூர்யாவிற்கு ‘ராஜூ பாய்’ கெட்டப் மிகவும் பொருத்தமாகவும், ஸ்டைலாகவும் இருக்கிறது. பார்ப்பதற்கு மிக அழகாகத் தெரிகின்றார். செதுக்கிய தாடி, வித்தியாசமான சிகை அலங்காரம், சிக்கென்ற உடற்கட்டு என சூர்யா வரும் ஃபிரேம்களில் ரசிகர்களின் விசில் சத்தம் காதைப் பிளக்கின்றது.

வாயில் குச்சியை மென்றபடி தனது கதாப்பாத்திரத்தை மாற்றி மாற்றி நடித்திருப்பது சூர்யாவின் அனுபவ முதிர்ச்சிக்கு ஒரு உதாரணம்.

ஆனால் சூர்யாவை விட வித்யூத் ஜம்வால் உயரமாகவும், வாட்ட சாட்டமாகவும் இருப்பதால் சூர்யாவுடன் சேர்ந்து நிற்கும் காட்சிகளில் கேமரா அவரை ஃபோகஸ் பண்ண தவிர்க்கிறது.

அப்படி இருந்தும் வித்யூத் ஜம்வால் ஏன் இந்த படத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளார் என்பதற்கான காரணம் படம் பார்த்த பின்பு தான் தெரிந்தது. இதுவரை வித்யூத்தை வில்லனாகவே பார்த்த நமக்கு அவருக்கு குழந்தை போலான ஒரு அழகிய புன்னகை இருப்பது தெரியாமலேயே இருந்துவிட்டது. அது இந்த படத்தில் தெளிவாகத் தெரிகின்றது. சூர்யாவின் நண்பனாக நடித்து அசத்தியிருக்கிறார்.

“பன்னிய சுடுற மாதிரி சுட்டுருவானா?” என்று சூர்யாவிடம் புலம்புவதாகட்டும், புது காரில் சமந்தாவை உட்கார வைத்து நண்பன் சூர்யாவுக்கு பரிசளித்து, “ஒருவாரம் இங்க எங்கையுமே உன்ன பார்க்க கூடாது.. போய்ட்டு ஜாலியா சுத்திட்டு வா” என்று கூறுவதாகட்டும் வித்யூத் சட்டென நம் மனதில் நின்று விடுகின்றார்.

“எனக்கு பின்னாடி இருக்குற துரோகத்தை தானே பார்க்கிற… விசுவாசத்தை பார்க்கலையே…. அவன் வருவான்” என்று சொல்லும் காட்சிகளில் வித்யூத் நம்மையும் மறந்து ரசிக்க வைக்கிறார்.

சரும பிரச்சனை காரணமாக பல படங்களில் தவிர்க்கப்பட்ட சமந்தா, அதையெல்லாம் சரி செய்துவிட்டு புதுப் பொலிவுடன் ‘அஞ்சான்’-ல் களமிறங்கியிருக்கின்றார். பல இயக்குநர்களுக்கு தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தினாலோ, என்னவோ தாராளமாக கவர்ச்சி மழை பொழிந்திருக்கிறார்.

படம் முழுவதும் சூர்யாவிற்கு துணையாக ‘பாய்’ கதாப்பாத்திரத்தில் வரும் ஜோ மல்லூரி (கும்கியில் லட்சுமி மேனனின் அப்பா) சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். “தம்பி கேட்ட இழுத்து மூடுடா… இங்க இருந்து ஒரு பய வெளிய போகக் கூடாது” என்று சொல்லும் காட்சியில் அவரது முகபாவனைகள் அற்புதம்.

இது தவிர டாக்ஸி டிரைவராக வரும் சூரி, சங்கீத வித்வானாக வரும் பிரம்மானந்தம் ஆகியோர் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்கள்.

anjaan2ரசிக்க முடியாமல் போனவை:

முதல்45 நிமிடங்களுக்கு எந்த ஒரு விறுவிறுப்பும் இன்றி, பழகிப்போன காட்சிகளுடன் மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதை. அப்போதே பார்வையாளர்கள் சோர்ந்து போய் எப்போது திருப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிடுகின்றனர்.

சமந்தாவிற்கு கதையில் ஒரு அழுத்தமான காட்சிகள் வைக்காமல் வெறும் காதலை தேடி அலையும் ஒரு வெகுளிப் பெண்ணாக (அதுவும் டிஐஜியின் மகளாம்) அலையவிட்டிருப்பது ரசிக்க முடியவில்லை. காவல்துறை உயர் அதிகாரியின் மகளான சமந்தா, தன்னை கடத்தி பணயக் கைதியாக வைத்திருந்தவனை ஏதோ ரோமியோவை கண்டது போல் நினைத்து காதலில் விழுகிறார்.

படத்தின் தொடக்கத்தில் சூர்யாவையும், வித்யூத்தையும் பிடித்தே தீருவேன் என்று பெரிதாக சவால் விட்டு விடாமல் துரத்தும் டிஐஜி (சமந்தாவின் அப்பா) பாதியிலேயே காணாமல் போய்விடுகிறார். அதன் பின்னர் போலீசை படத்தில் எங்குமே பார்க்க முடியாது (அட படம் முடியும் போது கூட வரமாட்டங்கன்னா பார்த்துக்கங்க..)

இடைவேளைக்குப் பிறகு விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதையின் நடுவே தேவையின்றி, “சிரிப்பு என் ஸ்பெசாலிட்டி” போன்ற ஐட்டம் பாடல்கள் மேலும் நம்மை சோர்வடையச் செய்கின்றன.

மொத்தத்தில் ‘அஞ்சான்’ பலமுறை சொன்ன கதை தான்…. பெரிதாக ஒன்றும் ஈர்க்கவில்லை. சூர்யாவின் மாறுபட்ட தோற்றத்திற்காக ஒருமுறை பார்க்கலாம்.

– ஃபீனிக்ஸ்தாசன்