Home கலை உலகம் திரைவிமர்சனம்: லிங்கா – எதிர்பார்த்த அளவிற்கு ஈர்க்கவில்லை…

திரைவிமர்சனம்: லிங்கா – எதிர்பார்த்த அளவிற்கு ஈர்க்கவில்லை…

783
0
SHARE
Ad

Lingaa-First-look-Poster-Stills-Photos-Images-HD-Qualityகோலாலம்பூர், டிசம்பர் 12 – “ரவி …. அந்த கிளைமாக்ஸ் பாராசூட் ஃபைட்டு அவசியம் வைக்கணுமா?” -ன்னு நடிக்கிறதுக்கு முன்னால தலைவர் டைரக்டர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்ல. விஜயகாந்து பறந்தத விட அதிகமாவே பறந்திட்டாரு போ…. இனிமே ஒரு வருஷத்துக்கு சோஷியல் நெட்வொர்க்ல பறக்காஸ் தான்” இப்படியாக லிங்கா படம் முடிந்து வெளியே வரும் பொழுது காதில் விழுந்தது.

கிளைமாக்ஸ் ஃபைட்டில் ரஜினி சூப்பர் பைக்கில் வேகமாக வந்து மலை உச்சியிலிருந்து தாவி பாராசூட்டின் மேல் குதித்த போதே, நமக்கு எதிர்காலம் தெரிந்துவிட்டது. அதையும் மீறி சில நிமிடங்கள் காத்திருந்து தலைவர் பாமை எட்டி உதைப்பதையும், “நிறுத்துங்க” என்று கத்திக் கொண்டே அனுஷ்கா ஓடி வருவதையும், போலீசாக ரவிக்குமார் வந்து சுபம் போட்டு படத்தை முடிப்பதையும் பல்லைக் கடித்துக் கொண்டு பார்க்க வேண்டியதாகிவிட்டது.

“கதையெல்லாம் தேவையில்லை … ரஜினிக்கு கூடுதலாக ஒரு அரை இன்ச் மேக்கப் போட்டு, லேட்டஸ்ட் டெக்னாலஜி எல்லாம் சேர்த்து இளமையாகக் காட்டினால் போதும், பழைய கதையாக இருந்தாலும் ரசிகர்கள் படம் பார்த்து கைதட்டி ரசித்து “தலைவர் சூப்பருயா….” என்று பாராட்டிவிட்டுச் செல்வார்கள்” என்று ‘முத்து’ காலத்தில் வாழும் ரசிகர்களாகவே இயக்குநர் நினைத்து விட்டார் போலும்.

#TamilSchoolmychoice

ஒருவேளை எந்திரன் வசீகரனையும், சிட்டியையும் பார்க்காமல் இருந்திருந்தால், கோச்சடையான் என்ற படத்தில் ரஜினியின் அனிமேஷனில் கூட அதே பழைய பிரமிப்பை ரசிகர்கள் சுவைக்காமல் இருந்திருந்தால் அப்படி நடந்திருக்கலாம்.

“கோச்சடையான் எவ்வளவு அற்புதமான கதை. அனிமேஷன் படமா இல்லாம ரஜினியே நடிச்சிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்கும்” என்று அப்போதே ரஜினியின் அடுத்த படத்திற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கத் தொடங்கினார்கள்.

அப்படி என்றால் “லிங்கா”-வில் கதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும்? …. மொத்த படத்திலும், அணை கட்டும் காட்சிகளும், வசனங்களும் மட்டுமே சற்று வித்தியாசம். மற்றவை முந்தைய ரஜினி படங்களின் சாயல் தான்.

ரஹ்மான் ஜி நீங்களுமா? … “கர்மவீரனே” என்று ஒற்றை பின்னணி இசையால் ரஜினியின் அனிமேஷனுக்கும் உயிர் கொடுத்து அவரது ரசிகர்களை திருப்திபடுத்தினீர்கள். “லிங்கா”-வில் என்ன ஆயிற்று? ரஜினி தோன்றும் காட்சியில் எந்த ஒரு சிலிர்ப்பும் இல்லையே… என்றாலும் ‘இந்தியனே வா’, ‘உண்மை ஒருநாள் வெல்லும்’, ‘நண்பா வா’ பாடல்கள் ஆறுதல்.

இப்படியாக படம் பார்த்துவிட்டு வரும் வழியில் மனதில் பல விசயங்கள் தோன்றுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

கதைச் சுருக்கம்:

Lingaa-HD-Posters-7-730x370

தெரிந்த கதை தான்… ஆனால் சில மாற்றங்களுடன்….

சுதந்திரப் போராட்ட காலத்தில் ஓர் கிராமம்… அங்கு மக்களுக்காகவே வாழும் ஒரு ராஜா ….  பஞ்சத்தில் இருக்கும் அந்த ஊர் செழிப்படைய, வெள்ளையனிடம் போராடி ஓர் அணை கட்டிக் கொடுக்கிறார் ராஜா. இப்படியாக நல்லது பல செய்தாலும் கடைசியில் அவரை தவறாகவே மக்கள் புரிந்து கொள்கிறார்கள். இதனால் மனமுடைந்த ராஜா தனது சொத்தையெல்லாம் ஊர் மக்களுக்கு கொடுத்து விட்டு அங்கிருந்து வெளியேறுகிறார்…. இது பிளாஷ் பேக்…

காலம் உருண்டோடுகிறது…. ராஜாவின் பேரன் அந்த ஊருக்கு வருகிறார். ஆரம்பத்தில் விளையாட்டுப் போக்காக இருக்கும் பேரன், அந்த ஊர் பெரியவர் மூலம் தனது தாத்தாவின் உயர்ந்த பண்புகளைத் தெரிந்து கண்ணீர் சிந்துகிறார் . பின்னர் அந்த ஊருக்கு வரும் ஒரு மிகப்பெரிய ஆபத்தை முறியடித்து அந்த ஊர் மக்களை அதிலிருந்து காப்பாற்றி தனது தாத்தாவின் நற்பெயரை நிலை நிறுத்துகிறார்.

இதில் ராஜா யார்? பேரன் யார் என்பது நிச்சயம் உங்களால் யூகிக்க முடியும்.

நடிப்பு:

Lingaa-firstlook-motion-poster

“60 வயசுலையும் ஹீரோயினுடன் டூயட் ஆட வேண்டும் என்பது கடவுள் கொடுத்த தண்டனை” என்று அண்மையில் ஒரு மேடையில் ரஜினி தன்னைத் தானே கிண்டல் செய்து கொண்டாலும், லிங்கா படத்தில் தனது நடிப்பில் ரசிகர்களை ஏமாற்றவில்லை.

அனுஷ்காவுடன் நடனத்திலும், சந்தானம் அன் கோவுடனான காமெடி காட்சிகளிலும், பிளாஷ்பேக்கில் வரும் ஹீரோயிசத்திலும் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்.

படம் முழுவதும் வண்ணமயமான நாகரீக உடையில் அசத்தலோ அசத்தல். குறிப்பாக அதே பழைய ஹேர்ஸ்டைல் சூப்பரோ சூப்பர்.

என்றாலும், வயது மூப்பின் காரணமாக பல க்ளோசப் காட்சிகளில் முதிர்ச்சியான தோற்றமும், கருத்த உதடும் தெளிவாகத் தெரிவதைத் கேமராக் கண் மறைக்கத் தவறிவிட்டது. சில காட்சிகளில் உண்மையான ரஜினி தானா? இல்லை …தொலைக்காட்சிகளில் ரஜினி வேஷம் போடும் நடிகர்கள் யாராவதா? என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

அனுஷ்காவை விட சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு தான் நடிப்பதற்கான காட்சிகள் அதிகம். வெள்ளந்தியாக “நோ மென்ஷன்” சொல்வதும், “நான் அந்த ஊருக்குப் போக மாட்டேன்” என்று இரயிலில் ரஜினியின் காலைக் கட்டிக் கொண்டு அழுவதுமாக ரசிக்க வைக்கிறார்.

அனு‌ஷ்காவின் தோற்றத்தில் ஏன் இந்த முதிர்ச்சியோ என்று எண்ண வைக்கின்றது. வயது 30-ஐக் கடந்து விட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.image

சந்தானம், கருணாகரன், பாலாஜி கூட்டணி அற்புதம். குறிப்பாக நகைக்கடை கொள்ளை அடிக்கும் காட்சிகள் மெய்மறந்து சிரிக்க வைத்தன.

“யாருப்பா இது புளி வச்சு தேய்ச்ச சாமி வெளக்கு மாதிரி சும்மா பளிச்சினு”,

“மரகத லிங்கம் இல்லாம பின்ன என்ன ஆப்ரஹாம் லிங்கமா?”,

“திருட வராணுங்கன்னு பயந்து கடவுள் உள்தாப்பா போட்டுக்குணாறா?” என படத்தில் ஆங்காங்கே சந்தானத்தின் டைமிங் காமெடி வசனங்கள் அருமை.

இவர்களைத் தவிர விஜயகுமார், டத்தோ ராதாரவி, கே விஷ்வநாத், ஆர்.சுந்தராஜன் போன்றவர்களின் நடிப்பு மனதில் நிற்கின்றது.

“இப்பவும் நான் ராஜாவா தான் இருக்கேன். இங்க நான் தான் ராஜா. இதோ உங்க பொண்ணு தான் ராணி”

(இதயத்தை காட்டி) “இங்க தான் எல்லாமே … இங்க சந்தோஷமா இருந்தா எல்லாமே சந்தோஷமா இருக்கும்… இங்க சந்தோசம் இல்லன்னா” (உதட்டைப் பிதுக்கி) எதுவுமே இல்லை”

இப்படியாக ரஜினிக்கே உரிய  வசனங்கள் இரண்டு மூன்று காட்சிகளில் வந்து ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கின்றன.

ஒளிப்பதிவு 

ஆர் ரத்னவேலுவின் ஒளிப்பதிவில் கிராமம், அணை, இயற்கைக் காட்சிகள் ஆகியவை பிரமிக்க வைக்கின்றன.

பல வண்ண பலூன்கள் வானில் பறக்க எடுக்கப்பட்டிருக்கும் காட்சி மிகவும் அருமை.

மொத்தத்தில் – “லிங்கா” – எதிர்பார்த்த அளவிற்கு ஈர்க்கவில்லை….

– ஃபீனிக்ஸ்தாசன்