Home நாடு கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 100 விலங்குகள் மீட்பு – புஸ்பராணியின் அதிரடி நடவடிக்கை

கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 100 விலங்குகள் மீட்பு – புஸ்பராணியின் அதிரடி நடவடிக்கை

1403
0
SHARE
Ad

சுபாங், டிசம்பர் 15 – லேசியாவில் செல்லப்பிராணிகள் சித்திரவதை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தால், அங்கு ஓடிச் சென்று முதல் ஆளாக தட்டிக் கேட்கும் ஒரு தமிழ்ப் பெண் புஷ்பராணி. அதனாலேயே நம் நாட்டில் செல்லப்பிராணிகளின் மீது அதீத அன்பு கொண்டவர்களுக்கு  ‘மலேசிய தன்னார்வ விலங்குகள் மீட்புக்குழு’ (Malaysia Independent Animal Rescue) என்ற அமைப்பின் தலைவர் புஸ்பராணியின் மீது அளவு கடந்த மரியாதை. சாலையில் ஏதாவது ஒரு விலங்கு அடிபட்டுக் கிடந்தால், புஸ்பராணிக்கு அழைத்து தகவல் கூறிவிட்டு நிம்மதியாக வேலைக்குச் செல்வார்கள்.

Dog rescue
கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள உயர் வகை நாய்கள்

இப்படிப்பட்ட சேவைகளை செய்து வரும் புஸ்பராணி, நேற்று தனது குழுவினர் மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்போடு மிகத்துணிச்சலான காரியம் ஒன்றைச் செய்து அனைவரின் பாராட்டுக்களையும் குவித்துள்ளார்.

கோலாலம்பூர் அருகே ஒரு பங்களாவில், கடுமையான முடைநாற்றம் வீசும் ஒரு இடத்தில், சிதறிக் கிடக்கும் பழைய ஆட்டோமொபைல் உதிரி பாகங்களுக்கு நடுவே, சின்ன சின்னக் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 100 விலங்குகளை அதிரடியாக மீட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மலேசியாவில் நடைபெற்ற ‘மிகப் பெரிய மற்றும் மோசமான விலங்குகள் சித்திரவதை’ ஆக இந்த சம்பவம் கருதப்படுகின்றது. இந்த சம்பவத்தில் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த விலங்குகளில் 80 நாய்கள், 3 பூனைகள், இரண்டு வாத்துகள், நிறைய பறவைகள், கோழிக் குஞ்சுகள் மற்றும் ஜிப்பான் என்ற குரங்கு வகைகள் ஆகியவைகளை ஒரே நேரத்தில் மீட்டுள்ளனர்.

Dog rescue 4
சுத்தமின்மை காரணமாக தோலில் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ள நாய்

80 நாய்களில், ஷி திசஸ், போடுல்ஸ், பொமேரியன், புல்டாக்ஸ், பிட் புல்ஸ் மற்றும் புல்டெரீரியஸ் போன்ற உயர் வகை நாய்களும் அடங்கும்.

இந்த சம்பவம் குறித்து புஸ்பராணி, சுபாங்கிலுள்ள கம்போங் பாரு காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அந்த பங்களாவின் உரிமையாளரான 52 வயதான மெக்கானிக் ஒருவரும், அவரது மனைவியும் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்கள்.

மேலும், விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகளிடத்தில் முறையாக அனுமதியின்றி சில அரிய வகை விலங்கினங்களான குரங்கு, பறவைகளை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கீழ் இந்த வழக்கு விசாரணை செய்யப்படுகின்றது.

Dog rescue 2
ஒரு சிறிய கூண்டில் இரண்டிற்கும் மேற்பட்ட நாய்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கொடூரம்

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், விலங்குகள் சித்திரவதை சட்டத்தின் படி, 50,000 ரிங்கிட் அபராதமும், ஒரு வருடத்திற்கும் மேல் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம்.

இது குறித்து புஸ்பராணியை நாம் தொடர்பு கொண்ட போது தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். அவரது பேச்சில் இது போன்ற செயல்களுக்கு நாட்டிலுள்ள மலாய் மற்றும் தமிழ்ப் பத்திரிக்கைகளின் ஆதரவு தேவை என்பதை உணர முடிந்தது.

இதுவரை இந்த மீட்பு நடவடிக்கை பற்றி சீனப் பத்திரிக்கைகளில் மட்டுமே செய்தி வந்துள்ளதாக புஸ்பராணி தெரிவித்தார்.

Dog rescue 1

அவருடனான செல்பேசி உரையாடல்கள் இதோ உங்கள் பார்வைக்கு.

செல்லியல்: விலங்குகள் அங்கு அடைக்கப்பட்டிருந்தது பற்றி உங்களுக்கு எப்படி தகவல் கிடைத்தது?

புஸ்பராணி: பொதுமக்கள் பலர் எனக்கு புகைப்படங்கள் அனுப்பி தகவல் கொடுத்தார்கள். ஆனால் பயம் காரணமாக முகவரி கொடுக்கவில்லை. பல இடங்களில் தேடிய பிறகு அந்த இடத்தைக் கண்டுபிடித்தோம்.

செல்லியல்: இந்த மீட்பு நடவடிக்கைக்கு காவல்துறையின் ஆதரவு எந்த அளவிற்கு கிடைத்தது?

புஸ்பராணி: காவல்துறை அந்த இடம் வரை பாதுகாப்பிற்கு வந்தார்கள். ஆனால் உள்ளே வரவில்லை.

Pushparani
புஸ்பராணி

செல்லியல்: உள்ளே வரவில்லையா? மீட்பு நடவடிக்கைகளில் உங்களுக்கு ஆபத்து இருந்ததா?

புஸ்பராணி: நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் மிகவும் பயமா இருந்தது.. நல்லவேளையாக அந்த பங்களா உரிமையாளர்கள் ஒத்துழைப்பு கொடுத்தார்கள்…

செல்லியல்: இது போன்ற விலங்குகள் நல அமைப்புகளுக்கு அரசாங்கம் மூலம் உதவிகள் கிடைக்கின்றதா?

புஸ்பராணி: உதவிகள் எதுவும் அரசாங்கத்தின் மூலம் கிடைப்பதில்லை. இப்போது காப்பாற்றப்பட்டிருக்கும் விலங்குகளுக்கு உடம்பில் பல இடங்களில் காயங்கள் உள்ளன. சில விலங்குகளால் நடக்க கூட முடியவில்லை. உடனடியாக அவைகளுக்கு அவசர சிகிச்சை தேவை. அதற்கு நிறைய உதவிகள் தேவை. பத்திரிகைகளின் ஆதரவு கிடைத்தால் அதன் மூலம் சிகிச்சை அளிக்க நிறைய பேர் முன்வருவார்கள். விலங்குகளுக்கும் உயிர் இருக்கு, வலி இருக்கு அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

என்று கூறி தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். நல்ல சம்பளத்துடன் கூடிய தனது கணக்காளர் வேலையை விட்டு தற்போது முழு நேரமும் விலங்குகளைப் பாதுகாக்கும் அமைப்பிலேயே சேவை செய்து வருகின்றார். அவருடன் பேசி முடித்த போது, “ மிக்க நன்றி… காட் பிளஸ் யு” என்றார்.

மனிதர்கள் சாலையில் அடிபட்டு கிடந்தாலே செல்ஃபி எடுத்து பேஸ்புக்கில் பதிவு செய்து ‘லைக்ஸ்’ வாங்கும் வேடிக்கை மனிதர்கள் நிறைந்த இந்த காலத்தில், விலங்குகளுக்கு சேவை செய்வதற்காகவே பிறவி எடுத்துள்ள உங்களுக்கு எல்லா கடவுள்களின் ஆசீர்வாதங்களும் வேண்டும் என்று கூறி பேட்டியை நிறைவு செய்தேன்.

– ஃபீனிக்ஸ்தாசன்