Home கலை உலகம் திரைவிமர்சனம்: பிசாசு – மிகவும் விரும்பப்படும்!

திரைவிமர்சனம்: பிசாசு – மிகவும் விரும்பப்படும்!

846
0
SHARE
Ad

pisasu-movie-posters-Image00004கோலாலம்பூர், டிசம்பர் 19 – “பிசாசை வீட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புவோமா?” – இல்லை தானே! அப்படித்தான் இந்த படத்தின் நாயகனும், தனது வீட்டுக்குள் பிசாசு இருப்பது தெரிந்து முதலில் நடுநடுங்கிப் போகிறார்.

பேயோட்டும் ஆவி அமுதா என்ற பெண்ணை அழைத்து வந்து விரட்டலாம் என்று முயற்சி செய்ய, அவளையே பேய் ஓட ஓட விரட்டுகிறது. அப்போது தான் நாயகனுக்கு ஒரு விசயம் தெரியவருகின்றது. அதாவது அந்த பிசாசு யாருமல்ல சில நாட்களுக்கு முன், விபத்தில் சிக்கி தன் கண் முன்னே துடிதுடித்து இறந்த பெண் என்று. ஒரு கட்டத்தில் பிசாசு தன்னை விட்டு போய் விடக்கூடாது என்றும் நாயகன் எண்ணுகின்றார்.

இப்படியாக மிஷ்கின் இயக்கத்தில் “பிசாசு” படத்தின் கதை உள்ளது. படத்தில் ராதாரவியைத் தவிர தெரிந்த முகங்கள் என்று யாருமே இல்லை. அத்தனையும் புதுமுகங்கள்.

#TamilSchoolmychoice

என்றாலும், படம் தொடங்கியது முதல் முடிவு வரை சுவாரஸ்யமும், மெல்லிய இழையோடிய காதலும், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்து, இது அக்மார்க் மிஷ்கின் படம் என்ற பாணியிலேயே படைக்கப்பட்டிருக்கின்றது.

என்னது பேய் படத்துல மெல்லிய இழையோடிய காதலா? என்று ஆச்சர்யப்படலாம். ஆனால் படம் பார்த்த எத்தனை பேருக்கு அந்த காதல் புரிந்திருக்கும் என்று தெரியாது.

ஆம்… பேய்க்கும், நாயகனுக்கும் இடையில் தான் இங்கே காதல், திகில், திருப்பங்கள் எல்லாம்.

ரவி ராய் ஒளிப்பதிவும், அரோல் குரோலி பின்னணி இசையும், கோபிநாத்தின் படத்தொகுப்பும் ஒன்றுக்கொன்று சரியாகப் பொருந்தி ஒரு விறுவிறுப்பான படம் உருவாகியிருக்கின்றது.

தேனாண்டாள் பிலிம்ஸ் விநியோகிக்க, இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் பாலா தயாரித்திருக்கின்றார்.

கதைச்சுருக்கம்

கதைப்படி, நாயகிக்கு எதிர்பாராத ஒரு விபத்து நேர்கிறது … உயிர் போகும் தருவாயில், தனது மனதுக்குப் பிடித்த ஒருவனை முதல் முதலாக சந்திக்கிறாள் நாயகி. அவன் தான் கதையின் நாயகன்.

தனது கனவுக் காதலனை சந்தித்து விட்டோமே என்பதாலோ என்னவோ அவன் கைகளைப் பற்றியபடி சந்தோஷமாக சாகிறாள்.

இறந்த பெண்ணின் நினைவுகள் நாயகனை மிகவும் வாட்டுகின்றது. அந்த நேரத்தில், தன் வீட்டில் தான் அந்த பெண்ணின் ஆவி இருப்பது தெரியவருகின்றது.pisasu-movie-posters-Image00005

தன் ஒரே மகள் சாவுக்குக் காரணமானவனை கொலை செய்வதற்காக ராதாரவி ஒரு புறம் வலை வீசி தேடிக் கொண்டிருக்க, தன் வீட்டுக்குள் புகுந்த பிசாசை விரட்ட நாயகன் படாதபாடு படுகின்றார்.

இறுதியில் எதிர்பாராத ஒரு திருப்பம், சோகம் என கதை நிறைவடைகின்றது.

“சார்… உங்க பொண்ணு உயிரோட இருந்திருந்தா… அவள எங்கிட்ட குடுத்துருங்கன்னு கெஞ்சி கேட்டிருப்பேன்” என்று நாயகன் நாகா, ராதாரவியிடம் கெஞ்சுவதும்.

“கடவுளே… இந்த பிள்ளைங்களை ஏன் பிரிச்ச?” என்று ராதாரவி கோபப்படுவதும் அவ்வளவு அழகு.

கதாப்பாத்திரங்கள்

மிஷ்கின் படத்தில் கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பேசும் என்பது தொடர்ச்சியாக அவரது படம் பார்த்து வருபவர்களுக்குத் தெரியும்.

பிசாசு படத்திலும், சுரங்கப் பாதையில் பிச்சை எடுக்கும் கண் தெரியாதவர்கள், அவர்களை வழி நடத்தும் சிறுமி, அடுக்குமாடிக் குடியிருப்பில் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் தம்பதிகள், மூளை வளர்ச்சியில்லாத சிறுவனை வளர்த்து வரும் பக்கத்து வீட்டு குடும்பம், “டீ குடிச்சாச்சுன்னா பேப்பரை வச்சிட்டு எடத்த காலி பண்ணுங்கப்பா. அடுத்த வீட்டு ஜன்னல எட்டிப்பாக்குறதுல அவ்வளவு சந்தோசம்” என்று கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை விரட்டிக்கொண்டிருக்கும் டீ கடைத் தொழிலாளி, ‘கலர் பிளைண்ட்’ என்ற பார்வைக் குறைபாடு கொண்ட ஆட்டோ டிரைவர் என பல சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்கள்.

வயலின் கலைஞராக வரும் கதையின் நாயகன் நாகா கதாப்பாத்திரத்திற்கு நல்ல பொருத்தம். கண்களை மறைக்கும் அவரது முடியும், தாடியும், ஒடிசலான தேகமும் இயல்பாகப் பொருந்தி வந்திருக்கின்றது.

கதாநாயகி பிரயாகாவின் உண்மையான முகத்தை படத்தின் தொடக்கத்திலும், அதன் பிறகு போட்டோவிலும் மட்டுமே பார்க்க முடிகின்றது. என்றாலும் படம் முழுவதும் பிசாசாக வாழ்கிறார். அவரது தந்தையாக ராதாரவி உணர்ச்சி மிகு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

“அம்மாடி .. இங்க என்னமா பண்ற? வாடா நம்ம வீட்டுக்கு போயிரலாம்… வாம்மா தங்கம்” என்று பிசாசிடம் மண்டியிட்டு மன்றாடும் காட்சிகளில் கண்ணீரை வரவழைக்கின்றார். ஒரே பெண்ணை விபத்தில் பறிகொடுத்த ஒரு தந்தையின் வலி அவரது நடிப்பில் பிரதிபலிக்கின்றது.

இது தவிர, “சார்… உங்க இசையப் பத்தி தான் பேசிக்கிட்டு இருக்கோம்… சூப்பர்” என்று புகழ்ந்து பின், “ஒரு நூறு ரூபா இருக்குமா?” என்று கேட்கும் வேலை வெட்டிக்குப் போகாத இளைஞன் கதாப்பாத்திரம், நாயகனின் நண்பர்களாக வரும் கதாப்பாத்திரங்கள், நாயகனின் அம்மா கதாப்பாத்திரம் ஆகியோர் படத்திற்கு கலகலப்பை சேர்த்திருக்கிறார்கள்.

pisasu-movie-posters-Image00008 (1)ஒளிப்பதிவு, பின்னணி இசை & தொழில்நுட்பம்

பிசாசை காட்டுவதற்கு படத்தில் கையாளப்பட்டிருக்கும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் அற்புதம். பார்ப்பதற்கு சற்று பயமாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் மிகவும் கொடூரமாகவும் தெரியக்கூடாது என்பதில் மிகவும் கவனம் செலுத்தியிருக்கின்றார்கள்.

பேய் பறந்து வருவது போல் காட்டப்பட்டிருப்பது மிகவும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு படம் பார்ப்பவர்களை மிரட்டுகின்றது. அதே வேளையில், நாயகி பிரயாகாவின் ஒப்பனை மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்டிருக்கின்றது.

ஆள் நடமாட்டமே இல்லாத அப்பார்ட்மெண்ட் வராந்தா, சுரங்கப் பாதை சண்டைக் காட்சி, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஐஸ் பேக்டரி, பேய் வரும் பொழுது அடிக்கும் பலமான காற்று, ஆட்டோ அப்படியே சாய்ந்து வேகமாக கவிழ்வது போன்ற காட்சிகளில் ரவி ராயின் ஒளிப்பதிவு உண்மையில் ரசிக்க வைக்கின்றது.

அதற்கு ஏற்றபடி,  அரோல் குரோலியின் பின்னணி இசை அசத்தல். ஆவி அமுதாவை பிசாசு பயமுறுத்தும் காட்சிகள், கிளைமாக்ஸில் வரும் மனதை வருடும் மெலோடி, சண்டைக் காட்சிகளில் பின்னணியில் வரும் வயலின் இசை என அனைத்தும் திருப்தி தரும் ரகம்.

சில நெருடல்கள்

தலையில் அடிபட்டுக் கிடக்கும் கதாநாயகியின் முகத்தில் பெயரளவிற்கு கூட வலியின் தாக்கம் தெரியவில்லையே.

லிப்ட் ஏறி வரும் கதாநாயகன் சொல்லி வைத்தது போல் சட்டென திரும்பி அம்மா என்று கத்தியபடி ஓடி வருகின்றார்.

அம்மா தலையில் அடிபட்டுக் கிடக்கையில் வெடுக்கென்று வீட்டுக்குள் ஓடி சென்று மனப்பாடம் செய்த வசனங்களை எந்த ஒரு உணர்ச்சியும் இன்றி நாயகன் ஒப்பிக்கிறார்…

இது போன்று சில காட்சிகளில் வரும் செயற்கைத் தனமான நடிப்பும், வசனங்களும் படம் பார்ப்பவர்களுக்கு லேசான நெருடல்களைத் தந்தாலும் பிசாசு பார்த்து ரசிக்க வேண்டிய வித்தியாசமான படங்களில் ஒன்று.

மொத்தத்தில் இந்த “பிசாசு” மிகவும் விரும்பப்படும்…

– ஃபீனிக்ஸ்தாசன்

“பிசாசு” – முன்னோட்டம்