Home இந்தியா நிலக்கரி சுரங்க ஊழல்: மன்மோகன் சிங்கின் வாக்குமூலத்தை தாக்கல் செய்தது சிபிஐ!

நிலக்கரி சுரங்க ஊழல்: மன்மோகன் சிங்கின் வாக்குமூலத்தை தாக்கல் செய்தது சிபிஐ!

486
0
SHARE
Ad

manmohan-singh-editors-11புதுடெல்லி, ஜனவரி 28 – நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது செயலாளர்களிடம் நடத்திய  விசாரணை அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று தாக்கல் செய்தது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கில், இத்துறையை பொறுப்பில் வைத்திருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அவரது முதன்மை செயலர் நாயர், தனி செயலாளர் சுப்ரமணியம் ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிஐ நீதிமன்றம் கடந்த மாதம் 16-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு மன்மோகன் சிங், மற்றும் அவரது செயலாளர்களிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் அறிக்கை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

மேலும் இதன் முழு விசாரணையை முடிக்க சிபிஐ 2 வாரம் அவகாசம் கேட்டது. சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையை நீதிபதி பரத் பரசர் படித்துப் பார்த்தார்.

விசாரணையின் போது வாதிட்ட அரசு வழக்கறிஞர் வி.கே சர்மா, ‘‘இந்த வழக்கில் மேல் விசாரணை முடியும் வரை, தற்போது தாக்கல் செய்யப்பட்ட வாக்குமூலங்களை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து பாதுகாக்க வேண்டும். ஆய்வுக்கு அனுப்ப வேண்டாம்’’ என வேண்டுகோள் விடுத்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வாக்குமூலத்தை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து பாதுகாக்கும்படி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை அடுத்த மாதம் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மன்மோகன் சிங்கிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், ‘‘ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு தலபிராவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கீடு செய்ய சொல்லி தொழிலதிபர் குமார மங்கலம் பிர்லா, பிரதமர் அலுவலகத்துக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு மே 7-ஆம் தேதி மற்றும் ஜூன் 17-ஆம் தேதி எழுதிய 2 கடிதங்களுக்கு பின் நடந்தது என்ன? கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த மன்மோகன் சிங், ‘‘ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு எந்த சலுகையும் காட்டப்படவில்லை என்றும், விதிமுறைப்படிதான் தலபிரா-2 சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டது’’ என கூறியதாக தெரியவந்துள்ளது.