Home உலகம் இரயிலில் வண்ணம் தெளிப்பு: சிங்கப்பூரில் இரு ஜெர்மன் நாட்டவருக்கு 9 மாத சிறை!

இரயிலில் வண்ணம் தெளிப்பு: சிங்கப்பூரில் இரு ஜெர்மன் நாட்டவருக்கு 9 மாத சிறை!

442
0
SHARE
Ad

Singaporeசிங்கப்பூர், மார்ச் 5 – சட்டத்திற்குப் புறம்பான வகையில் இரயிலில் வண்ணம் பூசியதற்காக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இருவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 9 மாத சிறை தண்டனையும், 3 பிரம்படிகளை வழங்க உத்தரவிட்டுள்ளது.

ஆண்டிரியாஸ் வோன் நோர் (வயது 22) மற்றும் எல்டான் ஹின்ஸ் (வயது 21) ஆகிய இருவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.

“இது என் வாழ்வில் இருண்ட தருணம். நான் என் மீது மிகவும் ஆத்திரமடைகின்றேன்” என வோன் நோர் நேற்று நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த நவம்பர் மாதம், இரயில் கிடங்கில் அத்துமீறி நுழைந்து, ‘ஸ்ப்ரே பெயிண்ட்’ என்று கூறப்படும் வண்ணங்களை ரயில் பெட்டிகளின் மேல் தெளித்ததாக இருவரின் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிங்கப்பூரை விட்டு வெளியேறி அண்டை நாடான மலேசியாவில் பதுங்கி இருந்தபோது, அனைத்துலக தேடுதல் வேட்டை நடத்தி இவ்விருவரையும் சிங்கப்பூர் அரசாங்கம் நீதியின் முன் நிறுத்தியுள்ளது.

சுத்தத்திற்கும், குற்றங்களை அடியோடு ஒழிப்பதிலும் பெயர் பெற்ற ஒரு நாடு சிங்கப்பூர். சிங்கப்பூரில் அமலில் இருக்கும் பொதுவுடமைகளை பாதுகாக்கும் சட்டம் கடந்த 1994-ம் ஆண்டு உலக கவனத்தை ஈர்த்தது.

அந்த சமயத்தில், அமெரிக்க இளைஞர் மைக்கேல் பேவுக்கு பொதுவுடமைகளை சேதப்படுத்தியதற்காகவும், கார்களை சேதப்படுத்தியதற்காகவும் பிரம்படிகள் வழங்கப்பட்டன. மைக்கேலுக்கு மன்னிப்பு வழங்கும் படி அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிட்டன் உட்பட அமெரிக்க அரசாங்கம் கோரிக்கை விடுத்தும் சிங்கப்பூர் தனது சட்டத்தை தளர்த்திக் கொள்ள மறுத்தது குறிப்பிடத்தக்கது.