Home நாடு முகமட் ஷாபி அப்துல்லா வழக்கறிஞர் மன்றத்திற்கு எதிராக அவதூறு வழக்கு

முகமட் ஷாபி அப்துல்லா வழக்கறிஞர் மன்றத்திற்கு எதிராக அவதூறு வழக்கு

519
0
SHARE
Ad

Shafee Abdullahகோலாலம்பூர், ஏப்ரல் 1 – வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாஃபி அப்துல்லா (படம்) வழக்கறிஞர் மன்றத்திற்கு எதிராகவும், மேலும் மூவருக்கு எதிராகவும் அவதூறு வழக்கொன்றைத் தொடர்ந்துள்ளார்.

அன்வார் இப்ராகிமின் ஓரினப் புணர்ச்சி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக வழக்காடிய அவரது நடத்தை குறித்து வழக்கறிஞர் மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் குறித்த அவதூறு வழக்காகும் இது.

இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் தேதி விசாரணைக்கு வருகின்றது.

#TamilSchoolmychoice

இதே வழக்கில் மற்றொரு வழக்கறிஞர் டோம்மி தோமஸ், முன்னாள் மேல்முறையீட்டு நீதிபதி டான்ஸ்ரீ வி.சி.ஜோர்ஜ், வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் கிறிஸ்தோபர் லியோங் ஆகியோரையும் பிரதிவாதிகளாக முகமட் ஷாபி பெயர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 14ஆம் தேதி நடைபெற்ற வழக்கறிஞர் மன்றத்தின் ஆண்டுக் கூட்டத்தில் தனது நடத்தை குறித்து டோம்மி தோமஸ் சமர்ப்பித்த தீர்மானத்தை வி.சி.ஜோர்ஜ் வழிமொழிந்தார் என்றும் ஷாபி அப்துல்லா தனது மனுவில் குறிப்பிட்டிருக்கின்றார்.

வழக்கறிஞர் மன்றமும், அதன் தலைவர் லியோங்கும் கடந்த மார்ச் 9ஆம் தேதி தனக்கு எதிரான தீர்மானம் குறித்த விவரங்களை வழக்கறிஞர் மன்றத்தின் அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தனர் என்றும் ஷாபி அப்துல்லா தனது வழக்கில் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

இதனால் தனது கௌரவமும், மரியாதையும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தனது சட்டத்தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறும் ஷாபி வழக்கறிஞர் மன்றமும் மற்றவர்களும் தன்னைப் பற்றி மேலும் அவதூறு பரப்பாமல் இருக்க இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றையும் பெற்றுள்ளார்.