Home நாடு முதுமைச் சிங்கம் மகாதீர் , அதிகார பலம் மிக்க நஜிப்பை வீழ்த்த முடியுமா? – பெரு.அ.தமிழ்மணி கண்ணோட்டம்

முதுமைச் சிங்கம் மகாதீர் , அதிகார பலம் மிக்க நஜிப்பை வீழ்த்த முடியுமா? – பெரு.அ.தமிழ்மணி கண்ணோட்டம்

742
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 20 – (அம்னோவில் எழுந்துள்ள அரசியல் போராட்டம் குறித்து மூத்த பத்திரிக்கையாளரும், அரசியல் ஆய்வாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி எழுதியுள்ள கண்ணோட்டம்)

Tamil Maniமலேசிய அரசியலில் தற்போது பல் விழுந்த சிங்கமாக இருந்தும் இன்னும் படுத்துவிடாமல் எழுந்து நிற்கிறார் துன் மகாதீர். இப்படி இவர் எழுந்து நின்ற சம்பவங்கள் கடந்த காலத்தில் அதிகம்! அதனால் அவரின் கோரப்பிடியில் சிக்கி சிதறுண்டுப்போனவர்கள் பட்டியல் நீளவே செய்கின்றன.

இளமையின் வேகம்! எதையும் அடித்துச்சொல்கிற வாதத்திறமை அதிபுத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு,எதுவரினும் எதிர் கொள்கிற துணிவுடமை,எதிரிகளையும் எதிர்ப்பாளர்களையும் வீழத்திவிடுகிற அரசியல் சாணக்கியத்தனம், தூர நோக்கின் இலக்கும் அதற்குரிய காரிய நோக்கமுமாகும்.

#TamilSchoolmychoice

இப்படி மகாதீர் என்ற மகா சக்தியின் ஆற்றலை சரியான அரசியல் பார்வையோடு அணுகினால் மி்ரள வைக்கவே செய்யும்!

அதாவது தனக்குரிய முடிவை தானே தீர்மானிப்பதும் அப்படித் தீர்மானித்ததை ஒரு தீர்மானமாக செயல்படுத்துவதும் எல்லாராலும் மேற்கொள்ள முடியாது.

மலாய் டிலெம்மா துவக்கம்!

The Malay_Dilemma front_cover1962ஆம் ஆண்டுகளில் மலாயா அரசியலில் குறிப்பிடத்தக்க சர்ச்சையாளராக உருவெடுத்தார் மகாதீர். நாட்டின் முதல் பிரதமர் துங்குவுடன் மலாய்க்காரர்களின் தன்னாட்சி உரிமையுடன் கலந்து போன,பொருளாதார முன்னெடுப்பு, அரசியல் ,அரசாங்க நிலைப்பாடுகளில் துல்லியமான பிரதித்துவம்,அரசியல் ஆளுமையில் நிரந்தர போக்கு,பண்பாட்டுப் பின்னணியில் மலாய் மக்களின் மேலாதிக்கம், அரசுத் துறைகளில் மலாய் மக்களின் ஆளுமை, பிற இனங்களுக்கிடையேயான மேலாதிக்கத் தன்மையைக் கட்டுப்படுத்துதல், நகர்ப்புற மேம்பாட்டில் மலாய் மக்களின் நுழைவு,கிராமப்புற மலாய் மக்களிடையேயான மனமாற்றம், மேலும் தோட்டப்புறங்களில் அடைபட்டிருந்த இந்தியர்களின் வாழ்க்கை நிலை, நகர்ப் புறங்களில் நகர்ந்து கொண்டிருந்த சீனர்களின் வளர்ச்சியை நோக்கியப் பயணம் –

இப்படி ஒட்டுமொத்தமாக பிற இனங்களின் முன்னேற்றத்தைத் தடுக்கவும் -மலாய் மக்களின் முன்னேற்றத்தைப் பற்றி அதிகமாக சிந்திப்பதுமான ஒரு கொள்கையின் விவாத மனிதராகவே தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு விவாதிக்கவும் தொடங்கினார்.

இதற்காகவே அவர் “மலாய் டெலிமா” என்ற நூலை எழுதி, அதனை மலாய் மக்களின் அடிப்படை உரிமையின் முழக்கமாகவே மாற்றினார். குறிப்பாக துங்குவின் தலைமைத்துவம் நீடித்தாலும் தொடர்ந்து அதை அனுமதித்தால் மலாய் மக்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படும் என்ற சித்தரிப்பை உருவாக்கினார்.

துங்குவுக்கு தலையிடி கொடுத்தல்!

Tunku Abdul Rahmanஅதனால் மகாதீருக்கும் துங்குவுக்குமான கருத்து வேற்றுமை வளர்ந்தது. அதனால் அவர் அம்னோவிலிருந்தும் நீக்கப்பட்டார். அந்தச் சமயத்திலும் இவர் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரானவராகவே துங்குவால் சித்தரிக்கப்பட்டார். அதனாலேயே இவர் எழுதிய “மலாய் டிலெம்மா”  நூலுக்கு துங்குவால் தடையும் விதிக்கப்பட்டது.

எப்படியோ! 1969 ஆம் ஆண்டு மே கலவரம் வந்தது. அது இவருக்கு கைகொடுக்கத் துவங்கியது. அந்த கலவரம் ஏற்படுவதற்கு துங்குவின் மிதமான போக்குடைய தலைமைத்துவமே காரணம் என்று பரவலாக அம்னோவில் புகையத் தொடங்கியது. இதற்கு ஏற்கனவே மகாதீர் கிழித்துவிட்டுப்போன கீறலினால், இரத்தம் கசியத்தொடங்கியது.

பிற இனங்களின் முன்னுரிமையை முடக்குதல்!

குறிப்பாக சீனர்களின் 1969 ஆம் ஆண்டுத் தேர்தல் அணுகுமுறை, கூட்டணி கட்சிக்கு பெரும் மிரட்டலாக அமைந்ததுதான் முக்கிய விமர்சனத்திற்குரியதாக இருந்தது. குறிப்பாக நகர்ப்புற சீனர்களின் வாக்குகள் ஒரு மாற்று அரசாங்கத்தை அமைக்கும் எண்ணம் கொண்டிருந்ததாகவும் அதற்கு இந்தியர்களின் மனப்போக்கும் துணைப்போகும் அளவுக்கு உதவியிருப்பதாகவும் கருத இடமளித்தது .

ஏற்கனவே இதை முன் வைத்தே பெரும்பாலும் மலாய் டிலெம்மாவை மகாதீர் வட்டமடித்திருந்தார். 1969ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தல் மூலமாகவும் அதேவேளை அதையொட்டிய மே கலவரத்தின் மூலமாகவும் மலாய் மக்களின் அரசியல் பயணத்தை முற்றாகப் புரட்டிப்போட முடிந்தது.

இதனால் துங்குவின் பி்ரதமர் பதவிக்கு நெருக்கடியும் அதையொட்டி அவசர காலமும் அமலுக்கு வந்தது “தேசிய நடவடிக்கை மன்றம்” என்ற பெயரில் துன் அப்துல் ரசாக் தலைமையில் அரசு இயங்கத் தொடங்கியது.

அடுத்தடுத்து மரணங்களும் அடுத்தடுத்து பதவி பரிமாற்றங்களும்!

Tun Abdul Razakஅதேவேளை துங்கு பதவி விலகிச்செல்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றன. அந்த இடைப்பட்ட காலத்தில் துன் ரசாக் பிரதமராகிறார்.துணைப்பிரதமர் பதவி, துன் டாக்டர் இஸ்மாயில் கைவசம் மாறுகிறது.இந்த குறுகிய காலத்தில் துன் இஸ்மாயில் காலமாகிறார்.

அவருக்கு அடுத்து துன் உசேன் ஓன் துணைப் பிரதமராகிறார். இதே காலத்தில் துன் ரசாக் மறைவும் அதையொட்டி, துன் உசேன் பிரதமராகிறார்.

அந்த காலகட்டத்தில் அதுவரை பின்னால் இருந்து காயை நகர்த்திக் கொண்டுக் காத்திருந்த மகாதீர் என்ற “சிங்கத்தின் கால்கள் பழுதுப்பட்டிருந்தாலும் அதன் சீற்றம் குறைவதில்லை” என்பது போல,தனது அரசியல் ஆளுமையை அம்னோவை நோக்கியும் அரசாங்கத்தை நோக்கியும் நகர்த்தத்  தொடங்கினார்.

துங்கு பதவி விலகலும் சிலரின் அடுத்தடுத்த மரணங்களும் அம்னோ அரசியலில் பெரும் மாற்றங்களுக்கு வழிவகுக்கவே செய்தன. அதன் விளைவு 1974 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில், மீண்டும் பிரதமராகிற வாய்ப்பு துன் உசேனுக்கு கிடைத்தது.

அந்த அமைச்சரவையில்தான் முதலில் கல்வி அமைச்சராகிறார் மகாதீர். அதன்பின், துணைப் பிரதமர்.

1981 ஆம் ஆண்டு உசேன் ஓன் பதவி விலகலுக்குப் பிறகு நாட்டின் பி்ரதமர் பதவிக்கு தன்னை உயர்த்திக்கொள்கிறார் மகாதீர்.

துங்குவுடன் மாற்றுக் கருத்துக்கள்!

Hussein Onn Malaysia's 3rd PMஎனவே! அவரின் ஒவ்வொரு அசைவிலும் மலாய் இனத்தின் முன்னேற்றத்தை முன் வைத்துதான் அரசியல் நடத்த முடியும் என்பதை சரியாகவே எடை போட்டு வைத்திருந்தார் மகாதீர்.

அதன் விளைவை, அவர் உணர்ந்ததால்தான், அவருடன் ஒத்துப் போகின்றவர்களைச் சந்திப்பதும் அவர்களுடன் துங்குவுடனான தனது மாற்றுக் கருத்துக்களை எதிரொலிப்பதுமாக இருந்தார்.

அந்த வகையில், துன் ரசாக், டத்தோ ஹருண், துன் இஸ்மாயில், டான்ஶ்ரீ கசாலி சாபி போன்றவர்களும்,  அவருடன் ஒத்தக் கருத்துள்ளவர்களாக மாற்றம் அடைந்திருந்தனர். துங்குவுக்கு மட்டும் மாற்றுக் கருத்துள்ளவராக மட்டுமல்ல, அவரின் தலைமைத்துவ மாற்றம் குறித்து அழுத்தம் கொடுப்பவராகவும் மகாதீர் இருந்தார்.

அப்படித்தான் துங்குவின் தலைமைத்துவத்திற்கு முடிவு கட்டிய பெரும் பங்கு மகாதீருக்கு உண்டு.

துன் உசேனுக்கும் நெருக்கடிதான்

அதோடு அவரின் அகோரப் பசி அடங்கி விட்டது என்று சொல்ல முடியாத அளவுக்கு, துன் உசேன் மீதும் பாயத் துவங்கினார். 1974 இல் உசேன் ஓன் அமைச்சரவையில் முதலில் கல்வி அமைச்சராக நுழைந்த மகாதீர் ,அம்னோ தேர்தலில் கவனம் செலுத்தி துணைத்தலைவர் பதவியையும் எட்டிப் பிடித்தார்.

Tun Mahathirஇதனால் மிதவாதப்போக்குடைய உசேனுடன் ஒத்துப்போவது மகாதீரால் முடியாத ஒன்றாகவே இருந்தது. எப்போதும் எதிர்வினையுடன் செயல்படும் எண்ணம் கொண்டவரான மகாதீர் தமது எண்ணம் போலவே, உசேன் ஓன் உடல் நிலை பாதிப்பானது – அது அவருக்கு சாதகமாக அமைந்தது.

1959ல்முதன் முதலில் அமையப்பெற்ற அம்னோ தலைமையிலான அமைச்சரவையில் துங்குவின் தலைமை கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் -அதாவது 12 ஆண்டுகள் பிரதமர் பதவியில் நீடித்த பெருமை அவருக்குண்டு.

அதன்பின் பிரதமர் பதவிக்கு வந்த ரசாக்-உசேன் போன்றவர்களின் பதவிக் காலம் மிக மிகச் சொற்பமான காலகட்டங்களே நீடித்தன.

இவர்களுக்குப்பின் பதவிக்கு வந்து, கிட்டத்தட்ட 22 ஆண்டுகளாக  பிரதமராக நீடித்த பெருமை மகாதீரை சாரும். துங்குவின் பதவி காலத்தையும் இரட்டிப்பாக்கி இவர் பதவியில் நீடித்தவர் என்ற பெருமை இவருக்கு இருந்தாலும், எதிர்வினை என்றளவில். துங்குவின் கடும் விமர்சனங்களை மகாதீர் அவர் சாகும் காலம் வரை சந்தித்துக் கொண்டேதான் இருக்க வேண்டியதாயிற்று.

எப்படி துங்குவின் ஆட்சி காலத்தை கடும் விமர்சனம் மகாதீர் செய்தாரோ, அதே போன்று துங்குவின் கடும் விமர்சனத்தை மகாதீர் சந்திக்கத் தவறவே இல்லை.

நாட்டின் சுதந்திரத் தந்தை என்ற வகையில் துங்கு, மகாதீர் ஆட்சிக்கு எதிராக வைத்த விமர்சனங்கள், எல்லா இன மக்களாலும் கவர்ந்து இழுக்கப்பட்டன.

குறிப்பாக எதிர்க்கட்சிகளாலும் வரவேற்கப்பட்டன.  தனது 87 வயதிலும் துங்குவின் தாக்குதல், மகாதீரை நோக்கி முற்றுகையிடத் தயங்கவில்லை.

இங்குதான் “முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”என்ற எதிர் வினைத் தாக்குதலை, மகாதீர் துங்குவிடமிருந்து சந்திக்கவே செய்தார்.

மூசா ஈத்தாமுக்கு முதல் ஆப்பு!

Musa-Hitam-Slider81ல் பிரதமர் பதவியை எட்டிப் பிடித்த மகாதீர், குறைந்தது 22 ஆண்டுகள் இடைவிடாது பிரதமராக நீடித்தார். இந்த காலத்தில் துணைப் பிரதமராக இருந்து வந்த துன் மூசாவுக்கு அரசியல் முடிவு கட்டினார்.

கெடா மெமாலி கலவரம், போலீஸ் நிலையம் மீது மதத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல், 12க்கும் மேற்பட்டோர் இறப்பு -போலீசாரும் இதில் அடங்குவர். மகாதீர் நாட்டில் இல்லாத நேரம் அது! பழி மூசா மீது சுமத்தப்பட்டது.

மீடியாக்களின் விமர்சனம் கடுமையாகியது.மூசாவின் தாக்குதல் நடவடிக்கை, மகாதீர் அனுமதி பெற்றே மேற்கொள்ளப்பட்டது என்ற கருத்து நிலவினாலும், கொல்லப்பட்டது மலாய் மக்கள் என்பதால், அது மலாய் வாக்காளர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் –

மகாதீர் அக்கலவரத்துக்கு மூசாவை பலியாக்கினார்.

ஆம்! துணைப்பிரதமர் பதவியிலிருந்து மூசா விலகினார். மகாதீரின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் மீடியாவில் முன்னுரிமை கொடுக்கப்பட்டதால், அவற்றின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மூசா தனக்குத்தானே சவக்குழி வெட்டும் சூழ்நிலையை ஏற்படுத்திக்கொண்டார்.

அம்னோவின் மரபுரிமை மீறப்பட்டது!

UMNO_logo_baru1அன்றுதான் முதன் முதலாக அம்னோவின் மரபுரிமை கேலிக்கூத்தாக்கப்பட்டது.ஆம்! அம்னோவின் துணைத்தலைவர் அடுத்த கட்டத்திற்கு பிரதமராவார் என்ற நினைவும் அகற்றப்பட்டது. அதேவேளை துணைப்பிரதமர் அடுத்து பிரதமராவார் என்ற அம்னோவின் அந்த முன்னுரிமையும் தகர்க்கப்பட்டது.

மகாதீர் தீட்டிய சதியில் முதல் களப்பலி மூசா! இதையொட்டிதான் அம்னோவில் பிளவும் ஏறபட்டது. துங்கு ரசாலி தலைமையில் மகாதீரை எதிர்க்கும் அணி உருவானது. அந்த அணியில் துன் அப்துல்லா-டத்தோஶ்ரீ ராயிஸ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும் இணைந்தனர்.

மூசாவை திட்டமிட்டே மகாதீர் பழி வாங்கினார் என்ற பிரச்சாரம் அம்னோவினரிடையே பெருமளவு வெற்றிபெற்றது. இதற்கு தேசத் தந்தை துங்குவின் ஆதரவும்  இருந்தது. அதோடு மட்டுமல்ல டத்தோஶ்ரீ நஜிப்பின்ஆதரவும் முதற்கட்டத்தில் இருந்தது. பின்னர் அவர் விலக்கிக் கொண்டார்.

அதனால் தோல்வியைச் சந்திக்க வேண்டிய நிலையில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் மகாதீர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டாலும் அவ்வெற்றியில் தேர்தல் முறைகேடுகள் நிகழ்நதுள்ளன என்ற அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவாகி, அம்னோவின் பதிவும் ரத்தானது.

புதிய அம்னோ உருவெடுத்தது!

Tun Salleh Abbas (late)1946ல் உருவான அம்னோ தேர்தல் முறைகேட்டால் பதிவு ரத்தானது. இந்த வழக்கில் மகாதீருக்கு எதிராக தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகள் மகாதீரால் பந்தாடப்பட்டார்கள். நாட்டின் தலைமை நீதிபதியான துன் சாலே அப்பாஸ் (படம்) பதவி நீக்கம் செய்யப்பட்டார். தனக்கு சாதகமாக அமையாத நீதித்துறையை தனது விருப்பம் போல ஆட்டிப்படைத்தார் மகாதீர்.

நீதிமன்ற நடவடிக்கையால் பதிவு ரத்தான பழைய அம்னோவுக்குப் பதிலாக ஒரே இரவுக்குள் புதிய அம்னோவை அமைத்தார். அதோடு மட்டுமல்ல! அரசியல் கட்சிக்கான புதிய சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்து, அத்திருத்தத்தில் அரசியல் கட்சிகள் நீதிமன்றம் செல்லக்கூடாது;

அப்படி செல்வதற்கு அதற்கு உரிமை கிடையாது; என்று விதி 18-ஐ கொண்டு வந்தார். கட்சித் தேர்தலில் எவ்வளவு தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றாலும், அந்த தேர்தலைத் தடுத்து நிறுத்த பதிவு இலாகாவுக்கு அதிகாரம் இல்லை என்பதுதான் இதன் பொருள்.

நீதிமன்றமும் தலையிட அதில் உரிமையில்லை என்ற மிக மோசமான ஜனநாயக  விரோத சட்டமியற்றலைக் கொண்டு வந்தவர் மகாதீர். இந்நடவடிக்கைதான் மகாதீரின் உச்சக் கட்டத்தை எட்டிய சர்வாதிகாரம் என்று பரவலாக உலகமெல்லாம் விமர்சிக்கப்பட்டது .

செமாங்காட் 46 உருவெடுத்தது!

Tengku-Razaleighஇந்த மோதலையொட்டியே துங்கு ரசாலி (படம்) தலைமையில்  செமாங்காட் 46 உருவெடுத்தது. நாட்டின் வலுவான நிதி அமைச்சராகயிருந்த ரசாலி 1990 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் அவர் அமைத்த எதிர்க்கட்சி கூட்டணி தேசிய முன்னணிக்கு பெரும் மிரட்டலாகவே அமைந்தது. குறிப்பாக சபாவில் டத்தோ பைரின் தலைமையிலான கட்சியின் ஒட்டுமொத்த 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரசாலிக்கு ஆதரவை வழங்கினர்.

தேசிய முன்னணியிலிருந்து பைரினின் கட்சி விலகியது. இந்த திடீர் அதிரடி, மகாதீரை பெரும் குழப்பத்திற்கு இட்டுச்சென்றது. இதனுடைய எதிரொலியால்தான் பைரினை முடித்துக் கட்டுவதற்காக 20 லட்சத்திற்கும் மேற்பபட்ட அந்நிய நாட்டவர்களுக்கு உடனடியாக குடியுரிமையும் மகாதீரால் வழங்கப்பட்டது.

இதுவொரு திட்டமிடப்பட்ட தேசத்துரோகம்!

altantuyaஇதுவொரு திட்டமிட்ட தேசத் துரோகச் செயல் என்று தெரிந்தும் மகாதீர் செய்தார். பாரிசான் வாக்கு வங்கியை நிரப்புவதற்கு அவர் மேற்கொண்ட, அந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு என்ன தண்டனை என்பது இதுவரை புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது.

இதற்கு உள்நாட்டுப் பாதுக்காப்புச் சட்டம் முழுமையாகப் பயன்பட வாய்ப்பு, பிரகாசமாக இருந்தும் மகாதீர் வெளியே இருக்கிறார் என்றால் எப்படி இது சாத்தியப்படுகிறது?

தற்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மங்கோலிய அழகி அல்தான்துயா மரணம் பற்றி அலட்டிக்கொள்ளும் மகாதீர், ஏன் ஐந்து ஆண்டுகளாக அமைதி காத்தார்? அவரின் மனிதாபிமானம் இவ்வளவு காலதாமதத்திற்குப் பின் விழிக்க வேண்டிய அவசியம் என்னவோ?

துன்கபார் பாபா நிலை?

Tun Ghafar Baba. இப்படி மகாதீரின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் காரணம் புரிய வேண்டிய அவசியமே இல்லை .அந்த அடிப்படையில்தான் தனது தேவைக்கு ஏற்ப, அரசியல் நெருக்கடிக்கு ஏற்ப, துன் கபார் பாபாவை (படம்) அம்னோ தேர்தலில் தனது பக்கம் பயன்படுத்திக்கொண்டார்.

அதாவது துணைத்தலைவர் பதவிக்கு அதுவரை அம்னோ அரசியலில் கேட்பாரற்ற ஒரு மனிதராக கருதப்பட்டு வந்த கபாருக்கு ,அடிமட்ட மலாய்க்காரர்களின் ஆதரவு, இருந்ததால் தனது எதிர்ப்பு சக்திகளுக்கு எதிராக கபாரை ஆதரவாகப் பயன்படுத்தினார்.

ஆனால் இதே கபாருக்கு பின்னொரு சமயத்தில் உதவித் தலைவராகயிருந்த, டத்தோஶ்ரீ அன்வார் எதிர்த்துப் போட்டியிட்ட போது, தலையிட்டு இருவருக்கிடையில் எந்த சமரசத்தையும் செய்யாமல் கபாரின் காலையும் மகாதீர் வாரி விட்டார்.  இதனால் அன்வாருக்கான ஆதரவு மனுக்கள் அதிகமானதைக் கண்ட கபார் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.

அதனால், அன்வார் போட்டியின்றி வெற்றிபெற்றார். எனவே கபார் பாபா விசயத்திலும் துணைத் தலைவர்- துணைப்பிரதமர் அடுத்து பிரதமர் ஆவார் என்ற அம்னோவின் மரபுரிமையை இரண்டாவது முறையாகப் புறக்கணிப்புச் செய்தார்.

அன்வாருக்கு முடிவு கட்டினார்!

Anwar Ibrahimஇதேபோன்றுதான் அடுத்த கட்டமாக அன்வார் விசயத்திலும் மேற்கொண்டார் . துணைப் பிரதமராகயிருந்து வந்த அன்வாரைஅம்னோ துணைத்தலைவர் பதவியிலிருந்தும் நீக்கினார். அதாவது தமது 22 ஆண்டுக்கால பிரதமர் பதவி காலத்தில் மூன்று துணைப் பிரதமர்களை முடித்துக் கட்டிய பெருமை மகாதீர் ஒருவருக்கே உண்டு.

அதேபோன்று. முன்னாள் பிரதமர்களான,  தேசத் தந்தை துங்கு –  துன் உசேன் ஓன் துன்அப்துல்லா படாவி என மூன்று பேரையும் காலி செய்த பெருமை மகாதீருக்கு உண்டு.அவர் பிரதமர் பதவியில் இருப்பதற்கு முன்பும் அவர் பிரதமர் பதவியை விட்டு விலகிய பின்பும் தாம் விரும்பியபடி மற்றவர்கள் நடக்கவேண்டும் அப்படி நடக்காதவர்களை காலிப் பண்ணிவிட வேண்டும் என்பதில் ஒர் உறுதியான நிலைப்பாடு மகாதீரிடம் இருக்கிறது என்பதின் வெளிப்பாடுதான் நடப்பு பிரதமர் நஜிப் மீது தற்போது சுமத்துகிற குற்றச்சாட்டுகளின் பின்னணிகள் வெளிப்படுத்துகின்றன.

தேச நோக்கம் முக்கியமா? குடும்ப நோக்கம் முக்கியமா?

Datuk Mukhriz Mahathirஎனவே, உண்மையிலேயே மகாதீருக்கு தேச நேசம் முக்கியமானதெனக் கருதி “ஒரே மலேசியா மேம்பாட்டு” நிறுவன குறித்து கேள்வி எழுப்புகிறாரா? அல்லது குடும்ப நலன் முக்கியமானது எனக் கருதி கேள்வியைத் தொடுக்கிறாரா?

அவரின் குடும்ப நலன் என்பது, அவரின் மகன் டத்தோஶ்ரீ  முக்ரீஸ் மகாதீரின் எதிர்கால பிரதமருக்கான கனவுதான். தமது உயிருள்ள போதே அதற்குரிய பேரங்களும் முறையான தீர்வுகளும் அமைந்திட வேண்டும் என்பதற்கான கட்டமைப்புதான் அவரின் விருப்பம்!

முதலில் தேசியஅரசியலில் பளிச்சிட்ட முக்ரீஸ்,  கடந்த தேர்தலில் கெடா மாநில அரசியலில் நுழைந்தார். இதுவும் மகாதீர் நடத்திய ஒரு பேரந்தான். மாநில அரசியலில் தற்காலிக ஏற்பாடுதான்; அதனால், இப்போதோ, தேசிய அரசியலில் பங்குரிமையையும் அதில் முதலில் முக்கிய அமைச்சு, அதையொட்டி அடுத்த கட்டமாக துணைப் பிரதமர் பதவிக்கான பேரந்தான்.

மகாதீரின் அகோரப்பசிக்கு நஜிப் பலியாக வேண்டுமா?

Najib Tun Razak Prime Ministerஅதற்கு அவர் முதலில் நகர்த்த வேண்டிய நபர் நஜிப்!

அவரைத் தற்போது நகர்த்திவிட்டு டான்ஸ்ரீ மொகிதீனை அந்த இடத்தில் வைத்துவிட்டால் அடுத்து துணைப்பிரதமர் பதவிக்கு டத்தோஸ்ரீ இசாமுடினை நகர்த்தி வைத்துவிடலாம் என்பது அவரின் முதல்கட்ட வரைவுத் திட்டமாகும்!

அடுத்த பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்குள் இந்த நகர்த்தலை நடத்திவிட்டால், பொதுத் தேர்தலுக்குப்பிறகு – இசாமுடின்- முக்ரீஸ் கூட்டணித் தொடர வழியமைப்பதுதான் மகாதீரின் முழுத் திட்டமாகும்.

இதுவொன்றும் புதிய தகவல் அல்ல! ஏற்கனவே அம்னோ வட்டத்தில் விவாதிக்கப்பட்ட விசயமுமாகும். அதை அமல்படுத்த வேண்டி நேரத்திற்குரிய கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டதாக இப்போது மகாதீர் எண்ணுகிறார். தனது மரணத்திற்குப் பிறகு, தனது மகனை ஏமாற்றி விடுவார்களோ என்ற அவநம்பிக்கையின் வெளிப்பாடுதான், இன்றைக்கு  மகாதீர் என்ற 90 வயது முதுமை சிங்கத்தின் கர்ஜனைக்கு காரணமாகும்.

திட்டமென்றால் சரி! அதுவே சதியாகுமானால்?

எனவே! மலேசிய அரசியலைப் பொறுத்த வரைக்கும் அம்னோவின் ஆதிக்க அரசியலே அதி முக்கியத்துவமாகியிருக்கிறது.

அந்த வகையில் நாட்டின் தேசத்தந்தை எனக் கருதப்பட்ட துங்குவின் அரசியல் வாரிசு யாருமே தலையெடுக்காமல் போய்விட்டனர் என்பது கவனிக்கப்பட வேண்டிய விசயமே!

Tan-Sri-Muhyiddin-Yassin3அதையடுத்து துன் ரசாக்கின் வாரிசு என்ற வகையில் நஜிப்பின் வருகை அமைந்து விட்டது.அதற்கு அடுத்து துன் உசேன் ஓன் வாரிசு என்றளவில் இசாமுடின் தலையெடுக்க வாய்ப்புண்டு. மொகிதீன் அடுத்த பிரதமர் என்பதற்கான சூழ்நிலை பெருமளவு இருள் மையமிட்டு இருப்பதாகவே தெரிகிறது.

ஏற்கனவே கபார் பாபா – மூசா ஈத்தாம் – அன்வார் ஆகியோர் துணைப் பிரதமர்களாயிருக்கும் போதே கழட்டி விடப்பட்டதால் அவர்களின் வாரிசுகளின் முகவரி அம்னோவிலிருந்து அகற்றப்பட்டு விட்டதாகவே கருத இடமளிக்கிறது.

அதேபோன்ற நிலைப்பாடு மொகிதீன் விசயத்திலும் எதிரொலிக்க சாத்தியம் உண்டு. இதற்கிடையில்தான் மகாதீரின் வாரிசு என்ற அடிப்படையில் முக்ரீஸ் முதலில் துணைப் பிரதமர், அடுத்து பிரதமர் என்றளவில் தனது பயணத்தைத் தொடர முடியுமா? என்பதுதான் கேள்வி?

ஏற்கனவே மகாதீர் இந்த விசயத்தில் அம்னோவின் மரபுரிமையை மீறி பிரதமராகும் வாய்ப்பை மூவருக்கு தடுத்திருப்பதால் தன்னை முன்னிறுத்தி தனது மகனுக்காக துணைப்பிரதமர-பிரதமர் வாய்பை பெறும் தகுதியை இழந்திருக்கிறார்.

எனவே! அம்னோவைப் பொறுத்தவரை இப்படியொரு வயதிலும் முதுமைச் சிங்கமாக வர்ணிக்கப்படும் மகாதீர்!

இனி எந்தெந்த வகையில் தனது குடும்ப வாரிசுக்காக அடுத்தடுத்து யாரையெல்லாம் பலி கொள்ளப்போகிறாரோ என்பதை சற்றுப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

-பெரு.அ.தமிழ்மணி

(இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளர் பெரு.அ.தமிழ்மணியின் சொந்த, தனிப்பட்ட கருத்துகளாகும். அந்தக் கருத்துகள் செல்லியலின் கருத்துகளோ, செல்லியலைப் பிரதிபலிக்கும் கருத்துகளோ அல்ல. கட்டுரையாளரின் கருத்துகளுக்கு செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.

இந்த கட்டுரையையோ, அல்லது அதன் பகுதிகளையோ மறுபிரசுரம் செய்ய வேண்டுமென்றால், கட்டுரையாளரை நேரடியாகத் தொடர்பு கொண்டு அனுமதி பெறவேண்டும்.

 தமிழ்மணியின் மற்ற எழுத்துப் படிவங்களை maravan madal tamil mani என்ற முகநூல் (பேஸ்புக்)  அகப்பக்கத்தில் காணலாம். அவரைப் பின்வரும் இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

 wrrcentre@gmail.com