Home நாடு நிபுணர்களைக் கொண்டு விமானப் போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும் – லியோவ்

நிபுணர்களைக் கொண்டு விமானப் போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும் – லியோவ்

417
0
SHARE
Ad

Liow-Tiong-Laiகோலாலம்பூர், மே 22 – தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்டு விமானப் போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும் எனப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் தெரிவித்தார்.

11ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் விமானப் போக்குவரத்துத்  துறையில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று குறிப்பிட்ட அவர், அத்துறையின் விரிவாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

“விமானப் போக்குவரத்துத் துறையைப்  பெரிய அளவில் விரிவுபடுத்தி நாட்டிற்குச் சேவை அளிப்பதில் போக்குவரத்து அமைச்சு கொண்டுள்ள திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல 11ஆவது மலேசியத் திட்டம் உதவும். மேலும் பயனீட்டாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் கைகொடுக்கும்,” என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய லியோவ் கூறினார்.

#TamilSchoolmychoice

விமானப் போக்குவரத்து ஆணைய மசோதா இந்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைச் சுட்டிக் காட்டிய அவர், அரசு இதழில் இதற்கான ஆணை வெளியிடப்பட்டதும் உடனடியாக ஆணையம் அமைக்கப்படும் என்றார்.

இந்த ஆணையத்தில் யாரெல்லாம் இடம்பெறுவர் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், ஆணையத்தின் தலைவர் பிரதமரால் நியமிக்கப்படுவார் என்றும், போக்குவரத்து அமைச்சு ஆணைய உறுப்பினர்களாக 6 பேரை நியமிக்கும் என்றும் தெரிவித்தார்.

“விமான உரிமம் வழங்குதல், விமான வழித்தடங்களை ஒதுக்குதல், விமான நிலைய வரி, தரைக்கட்டுப்பாட்டுப் பணிகள் மற்றும் பயனீட்டாளர் பாதுகாப்பு எனப் பல்வேறு பொறுப்புகளை இந்த ஆணையம் கையாளும். எனவே சுதந்திரமான மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த குழு தேவைப்படுகிறது. இது குறித்த மற்ற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்,” என்று லியோவ் மேலும் கூறினார்.