Home Featured நாடு அரசியல் பார்வை; மஇகா துணைத் தலைவர் தேர்தல் : சரவணன் ஏன் தோல்வியடைந்தார்?

அரசியல் பார்வை; மஇகா துணைத் தலைவர் தேர்தல் : சரவணன் ஏன் தோல்வியடைந்தார்?

1098
0
SHARE
Ad

Devamany-saravananகோலாலம்பூர் – சில நாட்களுக்கு முன்னால் வழக்கு ஒன்றிற்காக, நீதிமன்றம் வந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தன்னைச் சுற்றியிருந்தவர்களைப் பார்த்து, ‘என்ன ஆயிற்று சரவணனுக்கு? ஏன் தோல்வியுற்றார்?” எனக் கேட்டதாக, மலேசியா கினி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

சிறைக்குள் இருந்த அன்வார் இப்ராகிம் மனதிலேயே எழுந்த அதே கேள்விதான், மஇகா மறுதேர்தல்கள் நடந்த நவம்பர் 6ஆம் தேதி முதல்,  மஇகாவின் அனைத்துத் தரப்புத் தலைவர்களையும், அரசியல் ஆர்வம் கொண்ட பொதுமக்களையும் ஆட்டிப் படைத்து வருகின்றது.

காரணம், இறுதி நிமிடம் வரை பொதுவான பார்வையில் மஇகாவில் துணைத் தலைவர் தேர்தலில் வெல்லக்கூடிய ஆற்றலும், ஆதரவுத் தளத்தையும் கொண்டவராகவும், தேசியத் தலைவருக்கு அடுத்த நிலையிலான பலம் வாய்ந்த தலைவராகவும் டத்தோ எம்.சரவணன்தான் பார்க்கப்பட்டாரே ஒழிய, திடீரென்று போட்டியில் குதித்த தேவமணி அல்ல!

#TamilSchoolmychoice

பின் நடந்தது என்ன? ஏன் இந்த எதிர்பாராத தோல்வி?

MIC 67 assembly - Subra votingமஇகா மறுதேர்தல்களின் வாக்களிப்பின்போது சுப்ரா-சரவணன்-தேவமணி…

நவம்பர் 6ஆம் தேதி தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் பின்னர் பல மஇகா பேராளர்களையும், முக்கியத் தொகுதித் தலைவர்களையும் சந்தித்துக் காரணம் கேட்டதில், சரவணன் தோல்விக்கான சில நியாயமான காரணங்களை ஓரளவுக்கு ஒன்று திரட்ட முடிந்தது.

மனம் திறந்து ஒரு சிலர் கூறிய கருத்துக்களை வைத்துப் பார்க்கும்போது,

சரவணனுக்கு எதிராக விழுந்த எதிர்ப்பு வாக்குகள்கள்தான் அவரைத் தோற்கடித்ததே தவிர –

தேவமணி சரவணனை விட சிறந்த தலைவர் என்ற ரீதியிலோ, சரவணனைவிட கூடுதலான ஆதரவை தேவமணி கொண்டிருந்தார் என்ற ரீதியிலோ பேராளர்கள் வாக்களிக்கவில்லை என்பதைக் கணிக்க முடிந்தது.

தேசியத் தலைவரின் நடுநிலை காரணமா?

Datuk Seri Dr S.Subramaniamசரவணனின் பின்னடைவுக்கு முதல் காரணமாகப் பார்க்கப்படுவது தேசியத் துணைத் தலைவர் தேர்தலில் யாரையும் ஆதரிக்க மாட்டேன், நடுநிலை வகிப்பேன் என தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் எடுத்த முடிவுதான் என்கின்றார்கள் ஒரு சிலர்.

இதன் மூலம் இருதரப்பும் சரிசமமாக களத்தில் இறங்கி பிரச்சாரத்தை மேற்கொள்ள முடிந்தது என்பதால் அதன் காரணமாக, பலன் அடைந்தவர் தேவமணிதான்.

அதுவரையில் தேசியத் தலைவருக்கு அடுத்த நிலையில், இரண்டாவது தலைவராக சரவணன் பார்க்கப்பட்ட போதிலும், திடீரென தேவமணி உள்ளே புகுந்து, இரண்டே வார பிரச்சாரங்களின் வழி முன்னேற முடிந்ததற்கான காரணம், தேசியத் தலைவரின் நடுநிலை அறிவிப்பினால் அவருக்குக் கிடைத்த நுழைவாயில்தான் என்கின்றன மஇகா வட்டாரங்கள்!

இருப்பினும் கட்சிக்கு இந்தக் கால கட்டத்திற்குத்  தேவையான, ஆரோக்கியமான ஒரு முடிவாக, தேசியத் தலைவரின் நடுநிலை அறிவிப்பை, பெரும்பாலான பேராளர்கள் பார்த்தார்கள். அந்தப் பேராளர்களின் மனோநிலையை சரியாக ஆராய்ந்து அதைத் தனக்குச் சாதகமாக சரவணனும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற குறைகூறலும் முன்வைக்கப்படுகின்றது.

Samy Vellu and Palanivelகடந்த காலங்களில் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு, தனது அரசியல் எதிரியான டான்ஸ்ரீ சுப்ராவைத் தோற்கடிக்க, பழனிவேலுவை முன்னிறுத்தி,

பேராளர்களிடத்தில் வலுக்கட்டாயமாக, பழனிவேலுவுக்கே வாக்களியுங்கள் என நெருக்குதல் தந்து கட்சியில் செய்த “துணைத்தலைவர் திணிப்பு” பிற்காலத்தில் கட்சிக்கு எத்தகைய பாதிப்புகளை கொண்டுவந்தது என்பதை மஇகா பேராளர்கள் கண்கூடாக அனுபவித்திருந்தார்கள்.

பொருத்தமில்லாத தலைவனை, ஆற்றல் இல்லாத தலைவனை, தேசியத் தலைவர் ஒருவர் தனக்கு வேண்டியவன் என்பதற்காக மட்டும், தன் சொல்படி கேட்டு நடப்பான் என்ற நம்பிக்கையோடு மட்டும் –

தனக்குப் பிறகு இவர்தான் என நியமித்துச் சென்றதால், கடந்த 5 ஆண்டுகளாக கட்சி எவ்வாறு செயலிழந்து, சீர் இழந்து, சிறப்பழிந்து கிடந்தது என்பதையும் –

நீதிமன்றம், சங்கப் பதிவகம் என இழுத்தடிக்கப்பட்ட, 70 ஆண்டுகால பழம் பெருமை வாய்ந்த கட்சி, பதிவு ரத்தாகும் அவல நிலைக்கே கொண்டு செல்லப்பட்ட காட்சிகளையும் பேராளர்கள் இப்போதுதான் பார்த்து, அனுபவித்து முடித்திருந்தார்கள்.

Saravanan-Subra-nominations-nov 2015இந்நிலையில், டாக்டர் சுப்ராவும், சரவணனை முன்னிறுத்தி இவர்தான் எனது அடுத்த தேசியத் துணைத் தலைவர் என்றோ –

அல்லது தேவமணிதான் எனக்குத் துணைத் தலைவராக வரவேண்டும் என்றோ – கூறியிருந்தால்,

அதனால் கட்சியில் மீண்டும் பிளவுகளும், பூகம்பமும் வெடித்திருக்கும். அணிகள் உருவாகியிருக்கும். பேராளர்களிடமிருந்து எதிர்ப்புகள்தான் கிளம்பியிருக்கும்.

எனவேதான், அடுத்த துணைத் தலைவரைப் பேராளர்களிடத்தில் திணிக்கும் அணுகுமுறைகள் இனிவேண்டாம், பேராளர்களே முடிவு செய்யட்டும் என டாக்டர் சுப்ரா எடுத்த முடிவு, காலத்திற்கேற்ற ஒன்றாகவும், பேராளர்களின் முடிவுகளுக்கு மதிப்பளிக்கும் ஒன்றாகவும் பார்க்கப்பட்டது.

சுப்ரா யாருக்காகவும் பிரச்சாரம் செய்யவில்லை

சுப்ராவும், தான் எடுத்த நிலைப்பாட்டிற்கேற்ப, மறந்தும் கூட துணைத் தலைவர் தேர்தலில் எந்த ஒரு பேராளரிடமும் “இவருக்கு ஓட்டுப்போடுங்கள், இவரை ஆதரியுங்கள்” எனக் கூறியதாக இதுவரை எந்தவிதக் குற்றச்சாட்டும் யாராலும் முன்வைக்கப்படவில்லை.

சரவணனே, செல்லியலுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில், “தேசியத் தலைவரின் நடுநிலை முடிவு சரியானது. வரவேற்கின்றேன். பேராளர்களின் ஆதரவோடுதான் நானும் வெற்றி பெற்று வர விரும்புகின்றேன்” எனக் கூறியிருந்தார்.

சுப்ராவின் அத்தகைய நடுநிலை முடிவினால்தான் – அதைத் தொடர்ந்து, பேராளர்களே தங்களின் முடிவுகளை சுயமாக எந்தவித நெருக்குதலும் இன்றி செய்த காரணத்தால்தான்,

தேசியத் துணைத் தலைவர் தேர்தல் முடிவுற்ற பின்னரும் கட்சி பிளவுபடாமல் இன்னும் வலுவான தோற்றத்தோடு வலம் வருகின்றது என்பது சில அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

எனவே, காலத்திற்கேற்ற, சூழ்நிலைக்கு ஏற்ற தேசியத்தலைவரின் முடிவை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பிரச்சாரத்தில் தீவிரம் காட்டாமல் போனதுதான் சரவணனுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது என்ற கருத்து நிலவுகின்றது.

தளபதியாகப் பார்க்கப்பட்டவர் தலைவனாக ஏன் பார்க்கப்படவில்லை?

Saravanan-speech-branch-chairmen-convention-பழனிவேலுவுக்கு எதிரான கட்சிப் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து போராட்டக் களத்தில் டாக்டர் சுப்ராவுக்கு முன்னணியில் நின்ற, முதல் நிலைத் தளபதியாக சரவணன்தான் பார்க்கப்பட்டார் – செயல்பட்டார்.

“தலைவனாக இரு! அல்லது தலைவனோடு இரு” என்பது சரவணன் மேடைகளிலும், ஆதரவாளர்களிடத்தில் பேசும்போதும் அடிக்கடி உதிர்க்கும் அரசியல் வாசகம்.

ஆனால், முன்னணித் தளபதியாக பரிணமித்தவர், அடுத்த தேசியத் துணைத் தலைவராக தன்னைக் காட்டிக் கொள்வதில், முன்னிறுத்திக் கொள்வதில்,

டாக்டர் சுப்ராவுக்கு அடுத்த நிலையில் தலைமையை ஏற்கக்கூடிய தகுதிகள் படைத்தவன் நான் என்பதை பேராளர்களுக்கு எடுத்துக் காட்ட சரவணன் தவறி விட்டார் என்பதுதான் பரவலான பேராளர்களின் பார்வையாக இருக்கின்றது.

கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களில் தனக்கென ஓர் ஆதரவாளர் கூட்டத்தைக் கொண்டிருந்தவர் சரவணன் என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், அந்த ஆதரவாளர் கூட்டம், தான் அடுத்த தலைமையை ஏற்கும் போட்டியில் இறங்கும்போது தன்னோடு இணைந்து கட்சியை வழிநடத்தக் கூடிய,

ஆற்றலாலும், அறிவாலும், அனுவத்தாலும், செயல்பாட்டாலும் தனது தலைமைக்குத் துணை நிற்கக் கூடிய கூட்டம் – என்ற தோற்றத்தை சரவணன் ஏற்படுத்தினாரா என்றால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும்.

Saravanan 8“மஇகா கூட்டரசுப் பிரதேசத் தலைவராக இருந்த காலத்தில் தனக்குப் பக்கபலமான தொகுதித் தலைவர்களையும் பொறுப்பாளர்களையும் சரவணன் கொண்டிருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. அதனால்தான் மஇகா கூட்டரசுப் பிரதேசத் தலைவர் பதவியிலிருந்து அவர் பழனிவேலுவால் நீக்கப்பட்ட பின்னரும் அந்தப் பதவியை விட்டுக் கொடுக்காமல் அவரால் கைப்பற்றித் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. ஆனால், மஇகா கூட்டரசுப் பிரதேசத்தில் அவர் உருவாக்கி வைத்திருந்த தொகுதித் தலைவர்கள், அவருக்குப் பின்னால் நின்ற ஆதரவாளர்கள் எத்தனை பேர் துணைத் தலைவர் போட்டி என்று வரும்போது அவருக்காக களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்யக் கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருந்தார்கள்?” என்ற கேள்வியை முன்வைக்கின்றார், கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத தொகுதித் தலைவர் ஒருவர்.

கல்வித் தகுதி ஒரு காரணமா?

Samy velluநிகழ்ச்சி ஒன்றில் சாமிவேலுவுடன் பேராசிரியர் டான்ஸ்ரீ மாரிமுத்து….

சரவணன் தோல்விக்கு ஒரு காரணமாக முன்வைக்கப்படுவது அவருக்கும், தேவமணிக்கும் இடையிலான கல்வித் தகுதி ஒப்பீடுகள்.

ஆனால், ஒரு மூத்த மஇகா தலைவர் இது குறித்து பின்வருமாறு கூறுகின்றார்:

“சாமிவேலு-சுப்ரமணியம் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட காலத்திலும் இது போன்ற ஒரு நிலைமை இருந்தது. சாமிவேலு இலண்டனில் கட்டிடக் கலைஞர் தொழில்முறைக் கல்வி கற்றவர் என்றாலும் சுப்ரா போன்று பல்கலைக்கழக படிப்பு இல்லாதவர் என்ற குறைகூறலும் ஒப்பீடும் அடிக்கடி கூறப்பட்டன. ஆனால், சாமிவேலு 1977 போட்டியின் போதும் அதற்குப் பின்னர் தனது தலைமைத்துவக் காலத்திலும் சிறந்த கல்விப் பின்னணியும், ஆற்றலும் கொண்டவர்களைத் தன் பக்கம் வைத்துக் கொண்டு அவர்களை முன்னிறுத்தி இதுபோன்ற பிரச்சாரங்களை முறியடித்தார். சுப்ரா மலாயாப் பல்கலைக் கழகத்தின் எம்.ஏ. பட்டதாரியாகப் பார்க்கப்பட்டாலும், சாமிவேலுவுக்குப் பின்னால், டாக்டர் மாரிமுத்து போன்ற கல்விமான்களும், டி.பி.விஜேந்திரன், டத்தோ முத்து பழனியப்பன், டத்தோ சுப்பையா (பினாங்கு), போன்ற வழக்கறிஞர்களும் அவருக்குப் பக்கபலமாக முன்னிறுத்தப்பட்டனர். இதன்மூலம், தான் தலைமை ஏற்றால், தனக்கு துணை நிற்கக் கூடிய ஆற்றல் மிக்க படை இருக்கின்றது என்பதை சாமிவேலுவால் காட்ட முடிந்தது. ஆனால், அதுபோல் சரவணனால் காட்ட முடியவில்லை”

அதிலும், சொந்தக் கல்வித் தகுதிகளோடு, ஸ்ரீ முருகன் கல்விநிலையத்தின் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்த தேவமணி களத்தில் இறங்கும்போது என்னைச் சுற்றி எப்படிப்பட்ட ஆற்றல் மிக்க படித்த ஆதரவாளர்கள் இருக்கின்றார்கள் பாருங்கள் என பேராளர்களிடத்தில் காட்டுவதில் சரவணன் இன்னும் முனைப்பு காட்டியிருக்க வேண்டும் என்கின்றனர் சிலர்.

பலவீனமாக தேவமணி பார்க்கப்பட்டதால் சரவணன் பிரச்சாரத்தில் மந்தமா?

MIC 67 Assembly-Devamany-Najibசரவணனும் அவருடைய பிரச்சார அணியினரும் செய்த மற்றொரு தவறு, தொடக்கம் முதலே தேவமணியை பலவீனமாகப் பார்த்துதான்.

“கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போக ஆசைப்பட்டானாம்” என்ற பழமொழிக்கேற்ப,

2013 தேசியத் உதவித் தலைவருக்கான தேர்தலிலேயே 6 வேட்பாளர்களில் 332 வாக்குகள் மட்டுமே பெற்று – ஆகக் குறைந்த வாக்குகள் பெற்ற உதவித் தலைவராகத் தோல்வியடைந்த தேவமணியால் –

எப்படி 716 வாக்குகள் பெற்று இரண்டாவது உதவித் தலைவராக வெற்றி பெற்ற சரவணனை வெற்றி கொள்ள முடியும் என்றுதான் அனைவரும் பார்த்தார்கள்.

அதுவும் முதலாவது உதவித் தலைவராக வெற்றி பெற்ற சோதிநாதனை விட ஒரே வாக்கு வித்தியாசத்தில்தான் சரவணன் இரண்டாவதாக வந்தார் என்பதும் சரவணனுக்கு சாதகமான அம்சமாகப் பார்க்கப்பட்டது.

MIC Assembly-Najib-New leaders electedஆனால், மூன்று உதவித் தலைவர் பதவிகளுக்கு ஆறு வேட்பாளர்கள் என்று வரும்போது போடப்படும் அரசியல் கணக்குகள் –

ஒரே பதவிக்கு இருவர் மட்டும் நேரடிப் போட்டி என்று வரும்போது மாறும் என்பதையும், ஒப்பீடுகள் வேறுபடும் என்பதையும் சரவணனும், அவரது குழுவினரும் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர் என்றே படுகின்றது.

இந்த முறை பேராளர்கள் சரவணன்-தேவமணி இருவருக்கும் இடையிலான குறை, நிறைகளை மட்டும் முன்நிறுத்திப் பார்த்தார்களே தவிர, 2013 தேர்தல் முடிவுகள் எந்த விதத்திலும் வாக்களிக்கும்போது அவர்களின் எண்ண ஓட்டத்தைப் பாதிக்கவில்லை.

இதைச் சரியாக உணராத சரவணன், தொகுதித் தலைவர்களிடம் மட்டும் தொடர்புகள் வைத்துக் கொண்டு அவர்களை மட்டும் நம்பி பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்றும் ஆனால், தேவமணியும் அவரது குழுவினரும்,  நேரடியாக ஒவ்வொரு பேராளராகச் சென்று சந்தித்தனர் – தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர் என்றும் – இதுதான் பிரச்சார அணுகுமுறையில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது என்றும் சில மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒருசில தொகுதித் தலைவர்களையே தேவமணி இறுதி வரை அணுகி வாக்குக் கேட்கவில்லை என்கின்றன மஇகா வட்டாரங்கள். ஆனால், தொகுதியின் மற்ற பேராளர்களை தேவமணி குழுவினர் நேரடியாக சந்தித்துப் பிரச்சாரம் செய்வது மட்டும் தொடர்ந்தது.

தேவமணிக்குப் பின்னணியில் பிரச்சாரம் செய்வதிலும், வியூகங்கள் வகுத்ததிலும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தைச் சேர்ந்த ஆற்றல் மிக்க சில முக்கியப் புள்ளிகள் செயல்பட்டனர் என்றும் கூறப்படுகின்றது.

இளைய சமுதாய வாக்காளர்களில் பலர் – குறிப்பாக புத்ரா, புத்திரி பிரிவுகளில் இருந்து வந்தவர்களில் சிலர் – ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் வழிவந்தவர்கள் என்பதும் தேவமணிக்கு சாதகமாக அமைந்தது.

நடுநிலை வாக்காளர்களைக் கவர முடியாத சரவணன்

Saravanan-deputy election-ballotingமஇகா பேராளர்களில் ஏறத்தாழ 20 சதவீதத்தினர் எப்போதுமே நடுநிலையோடு, மனசாட்சிப்படி வாக்களிப்பவர்களாக இருப்பார்கள். கட்சியின் மீது பற்றும் பாசமும் விசுவாசமும் கொண்டவர்கள் இவர்கள். கட்சிக்கு யாரால் நல்லது நடக்கும் – யார் சிறந்த முறையில் வழிநடத்துவார் என்று மட்டும்தான் இவர்கள் பார்ப்பார்களே ஒழிய, ஜாதி, கல்வி போன்ற அம்சங்களையும், வேட்பாளர் அமைச்சரா, பணக்காரரா, ஏழையா என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள். பணம், பதவிகளாலும் அலைக்கழிக்கப்படமாட்டார்கள் இவர்கள்.

இன்றைக்கு டாக்டர் சுப்ரா, பழனிவேலுவை வீழ்த்தி கட்சித் தலைமையைக் கைப்பற்றத் துணை நின்றதும் இதுபோன்ற நிடுநிலையாளர்களின் ஆதரவுதான் என்றால் அது மிகையாகாது.

இந்த நடுநிலை வாக்காளர்களின் ஆதரவைப் பெற முடியாமல் போனதும் சரவணனின் தோல்விக்கு மற்றொரு காரணமாகப் பார்க்கப்படுகின்றது.

நன்கு படித்த, ஆற்றல் மிக்க தேசியத் தலைவரின் சரியான இணையாக இந்த நடுநிலையாளர்கள் தேவமணியைப் பார்த்தார்களே தவிர, அந்த இடத்தில் சரவணனைப் பொருத்திப்பார்க்க இவர்கள் முன்வரவில்லை. இந்த நடுநிலையாளர்களின் ஆதரவைப் பெறுவதிலும் சரவணன் முனைப்பு காட்டவில்லை.

சுப்ராவுக்கு நெருக்கமான, ஒரு சில ஆதரவாளர்கள்  சரவணன் வென்று வந்தால் அடுத்து சுப்ராவின் தலைமைத்துவம் தொடர்வதற்கு இடையூறாக இருப்பார் – அதற்குப் பதிலாக தேவமணி வென்று வந்தால் அத்தகைய தலைமைத்துவ போட்டி இருக்காது – என்ற கண்ணோட்டத்திலும், சரவணனுக்கு வாக்களிக்காமல் தவிர்த்து விட்டனர் என்று கூறப்படுகின்றது.

ஆக மொத்தத்தில், தேவமணி பலவீனமானவர் எப்படியும் தோற்றுவிடுவார் என்ற ரீதியிலேயே துணைத் தலைவர் தேர்தல் பார்க்கப்பட்டதும் – அதன் காரணமாக சரவணன் அணியினர் பிரச்சாரங்களில் மெத்தனம் காட்டியதும்தான் சரவணனை தோல்வி முனைக்கு இட்டுச் சென்றன.

தேவமணி வரவேண்டும் எனப் பேராளர்கள் விரும்பியதை விட, சரவணன் வரக் கூடாது என்ற ரீதியிலான பிரச்சாரங்கள்தான் இறுதியில் பேராளர்களிடத்தில் எடுபட்டன.

தேர்தலுக்கு முந்தைய இரண்டு நாட்களில், தேவமணி பிரச்சாரம் சூடு பிடித்திருக்கின்றது, பல பேராளர்கள் சரவணனுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்ற அரசல் புரசலான பேச்சுக்கள் கிளம்பியபோதுகூட – அதனால் வாக்கு வித்தியாசம்தான் குறையும் – சரவணன் எப்படியும் தோற்றுவிட மாட்டார் என்றுதான் பலர் பேசிக்கொண்டார்கள்.

ஆனால், இறுதியில் 18 வாக்குகளில் தேவமணி வெற்றி பெற்றார்!

தேர்தல் முடிவுகளுக்கு வேறு சில காரணங்களும் இருந்தன. அரசியல் பார்வை என்ற விதத்தில் எல்லாவற்றையும் பகிரங்கமாக எழுதிவிடவும் முடியாது என்பதும் வாசகர்கள் அறிந்ததுதான். பேராளர்களிடத்தில் வலம் வந்த சில எண்ணங்கள், சில பிரச்சாரங்கள் சரவணனின் வெற்றியைப் பறிப்பதற்கான காரணங்களாக அமைந்தன.

மஇகா தேசியத் துணைத் தலைவர் தேர்தல் முடிவுகள், சரவணனுக்கும் தேவமணிக்கும் மட்டுமல்லாது, மற்ற தலைவர்களுக்கும்,

எதிர்காலத்தில் மஇகா தலைமையைக் கைப்பற்ற கனவு கண்டு கொண்டிருப்பவர்களுக்கும் – பல புதிய, நுணுக்கமான, அரசியல் பாடங்களை கற்றுத் தந்துவிட்டுச் சென்றிருக்கின்றது.

-இரா.முத்தரசன்