Home Featured உலகம் அமெரிக்காவில் “புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு” – பின்புலம், நோக்கங்கள் என்ன?

அமெரிக்காவில் “புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு” – பின்புலம், நோக்கங்கள் என்ன?

1035
0
SHARE
Ad

International Tamil Academyசாந்தா கிளாரா (கலிபோர்னியா) – அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சாந்தா கிளாரா என்ற நகரில் இன்று வெள்ளிக்கிழமை விமரிசையாகத் தொடங்குகின்றது ‘புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு’.  இன்று முதல் மே 30ஆம் நாள்வரை 3 நாட்களுக்கு நடக்கும் இந்த அனைத்துலக மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து பலர் கலந்து கொள்கின்றனர்.

அமெரிக்கா, கனடா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பிரிட்டன், ஐக்கிய அரபு சிற்றரசு, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து திரளான அளவில் பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

மலேசியாவிலிருந்தும், கல்வியாளர்களையும், தமிழ் கற்பித்தலில் ஆர்வமும், ஆராய்ச்சி அணுகுமுறைகளையும் கொண்டிருக்கும் சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொள்கின்றனர். இந்தக் குழுவுக்கு முத்து நெடுமாறன், சி.ம.இளந்தமிழ் இருவரும் இணைந்து தலைமையேற்கின்றனர்.

#TamilSchoolmychoice

muthu-nedumaran

Elanthamiz-Uthamam-Slider

             முத்து நெடுமாறன்                                           சி.ம.இளந்தமிழ்

ஏன் இந்த ‘புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு’?

தமிழ் நாட்டிலிருந்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலட்சக்கணக்கான தமிழர்கள் பல நாடுகளுக்கு வணிகம், வேலைவாய்ப்பு தேடி செல்லத் தொடங்கினர். சில நாடுகளில் நிரந்தரமாகத் தங்கிவிட்டனர்.

சிங்கப்பூர், மலேசியா வந்த தமிழர்களுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தங்களின் தாய்மொழியான தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. தமிழ்ப்பள்ளிகள் தோட்டப்புறங்களில் உருவாக்கப்பட்டன.

மலேசியாவும், சிங்கப்பூரும், பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னரும், தமிழைத் தொடர்ந்து பயின்றுவர அந்த நாட்டு தமிழ் மக்களுக்கு தொடர்ந்து வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கின்றன. அதன் காரணமாக, இந்த இருநாடுகளிலும் தமிழ் இன்று வரை தழைத்து வாழ்ந்து வருகிறது – இன்னும் வளர்ந்து வருகின்றது.

இலங்கையிலும் ஏறத்தாழ இதேபோன்ற சூழ்நிலைதான் என்றாலும் அங்கு யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில், பூர்வீகமாக, பல நூற்றாண்டுகளாக, தமிழர்கள் அந்த மண்ணை தாய் மண்ணாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால், தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ், ரீயூனியன் போன்ற நாடுகளில் குடியேறிய தமிழர்களுக்கு அந்த நாடுகளில் தமிழைத் தொடர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக, இன்று அந்த நாடுகளில் தமிழ் மொழி ஏறத்தாழ அழிந்தே விட்ட சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

இதனைத் தொடர்ந்து 1960ஆம் ஆண்டுகளில், தமிழ் நாட்டிலிருந்து, நிபுணத்துவ பணிகளுக்காக ஆயிரக்கணக்கான தமிழர்கள் அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு குடியேறும் இன்னொரு சூழல் உருவாகத் தொடங்கியது.

இன்றும் மேற்கத்திய நாடுகளுக்கு தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து தமிழர்கள் பலர் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணியாற்றுவதற்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

ஆக, இன்று தமிழ் மொழியை மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டிய அவசியம் (survival) ஏற்பட்டிருக்கும் நிலையில், தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் தமிழை உயிர்ப்பிக்க வேண்டிய (revival) அவசியம் ஏற்பட்டிருக்கின்றது.

ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளிலோ, தங்களின் தொழில் உயர்வு, வருமானம் ஆகியவற்றுக்காக அங்கேயே வாழ வேண்டிய தமிழர்களுக்குத் தங்களின் பிள்ளைகள் தமிழை மறந்து விடாமல் இருக்க, தொடர்ந்து அவர்கள் தமிழ் மொழியைப் படிக்க வைக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை.

இதனால்தான், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால், கலிபோர்னியாவில் உள்ள தமிழர்கள் சிலர் இணைந்து கலிபோர்னியா தமிழ்க்கழகம் (California Tamil Academy) என்ற அமைப்பை உருவாக்கி, தங்களின் பிள்ளைகளுக்கு எவ்வாறு தமிழ் மொழியைக் கற்பதில் ஆர்வம் ஏற்படுத்துவது என்பது குறித்து சிந்திக்கத் தொடங்கினர்.

தமிழ் மொழி படிப்பதற்கான அத்தியாவசியம், ஊக்குவிப்பு இல்லாத ஒரு நாட்டில் – வேலைவாய்ப்பில் தமிழ் மொழிக்கு இடமில்லாத ஒரு சூழலில் – பள்ளிகளில் தமிழ் ஒரு பாடமாக இல்லாத பட்சத்தில் – அந்த மாணவர்களுக்கு, அவர்களுக்கு தமிழ் மொழி மீது பிடிப்பும், பிணைப்பும் ஏற்படுத்துவது எப்படி என்ற முயற்சிகளிலும் ஈடுபடத் தொடங்கினர்.

Vetri Selvi-USA-International Tamil Academyஉலகத் தமிழ்க் கல்விக் கழகத்தில் தலைவர் வெற்றிச் செல்வி இராஜமாணிக்கம்…

தங்களின் அனுபவங்களை, ஆய்வுகளை, அமெரிக்காவின் மற்ற பகுதிகளிலும், புலம் பெயர்ந்தோர் அதிகம் வாழும் மற்ற நாடுகளுடனும் பகிர்ந்து கொள்ளத் தொடங்கிய அவர்கள் அதன் காரணமாக தங்களின் அமைப்பை மேலும் விரிவாக்கி ‘உலகத் தமிழ்க் கல்விக் கழகம்’ எனப் பெயர் மாற்றம் கண்டனர். அன்று தொடங்கிய கலிபோர்னியா தமிழ்க் கழகம்தான் இன்று உலகத் தமிழ்க் கல்விக் கழகம் என உருமாற்றம் கண்டுள்ளது.

முதல் மாநாடும் 2016 மாநாடும்

புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வியை மேம்படுத்தவும், எளிதாக்கவும், வழி வகைகளை ஆராயவும் அனைத்துலக தமிழ் கல்விக்கழகம் முதன்முதலாக 2012 இல் ஒரு மாநாட்டை சிறப்பாக நடத்தியது. உலகெங்கும் இருந்தும் பல அறிஞர்களும் கல்வியாளர்களும் பங்கேற்று,  புலம்பெயர்ந்தோரிடையே தமிழ்க் கற்பித்தலில் இருக்கும் சவால்கள், நோக்குகள் மற்றும் சாத்தியங்கள் பற்றி தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.

அதன் தொடர்ச்சியாக நடத்தப்படும் இரண்டாவது மாநாடுதான் இன்று தொடங்குகின்றது.

International Tamil academy-logoஇந்த மாநாட்டில், தமிழ்க்கல்வி பற்றிய கருத்துகள், அணுகுமுறைகள் மற்றும் உத்திகள் பற்றி ஆராய திட்டமிடப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில்  ஆராயப்பட உள்ள மூன்று கருப்பொருட்களைப் பற்றிய சிறு குறிப்புகள்:

கருத்துகள்:

மொழி கற்றுக்கொள்வதில் இருக்கும் அடிப்படைத் தத்துவங்களை புரிந்து கொள்வது மொழியை கற்றுக்கொடுக்க மிகவும் இன்றியமையாதது. அவ்வகையில் மொழி கற்பதில் உள்ள வழிகள் பற்றி மொழி ஆராய்ச்சியாளர்களும் கல்வியாளர்களும் கூறும் வழிமுறைகளை ஆராய்வதே இக்கருப் பொருளின் நோக்கம்.

அணுகுமுறைகள்:

மேற்காணும் கற்கும் வழிகளை அறிந்து, அவற்றைச் செயல்படுத்த அணுக வேண்டிய வழிமுறைகளைப் பகிர்ந்து கொள்வதே இக்கருப் பொருளின் நோக்கம்.

உத்திகள்:

மேற்காணும் அணுகுமுறைகளை வகுப்பறைகளில்  செயல்படுத்த உதவும் உத்திகளை அறிந்துகொள்வதும், பயிலரங்கு மூலம் பயிற்சி அளிப்பதும் இக்கருப் பொருளின் நோக்கம்.

இம்மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் பகிர்தலும், பயிலரங்குகள்  மூலம் பயிற்சி அளித்தலும் மற்றும் தமிழ்ப் போட்டிகள், தமிழ்க் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்துலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் ‘புலம் பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு’ சிறப்புற, தனது நோக்கங்களில் வெற்றியடையும் வண்ணம் நடந்தேற, செல்லியல் குழுமத்தின் இனிய நல்வாழ்த்துகள்!

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசியக் குழுவினருக்கும் இனிய பயன்மிக்க தமிழ்ப் பயணம் அமைய எங்களின் நல்வாழ்த்துகள்!

மாநாட்டின் கூடுதல் விவரங்களை கீழ்க்காணும் இணையப் பக்கங்களில் காணலாம்:

Tamilconference.org

conference@catamilacademy.org.

-செல்லியல் தொகுப்பு

அடுத்து : புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாட்டில் படைக்கப்படவிருக்கும் “எல்லோருக்கும் எளிய தமிழ்” கட்டுரை சுருக்கம்