Home Featured தமிழ் நாடு பாலமுரளி கிருஷ்ணா மறைவு – ஜெயலலிதா இரங்கல்!

பாலமுரளி கிருஷ்ணா மறைவு – ஜெயலலிதா இரங்கல்!

563
0
SHARE
Ad

balamurali_krishnaசென்னை – கர்நாடக இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனது இரங்கல் அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

“பிரபல கர்நாடக இசை விற்பன்னரும் திரைப்பட பின்னணிப் பாடகருமான டாக்டர் எம். பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் இன்று (22.11.2016) உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.”

#TamilSchoolmychoice

jayalalitha“தனது ஆறாவது வயதில் இசைப் பயணத்தை தொடங்கிய டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள், கஞ்சிரா, மிருதங்கம், வயலின் போன்ற இசைக் கருவிகளை வாசிப்பதிலும் வல்லவராக திகழ்ந்தார். கர்நாடக இசையை முறையாக கற்று, தனது எட்டாவது வயதில் முரளிகிருஷ்ணா என்ற பெயருடன் முழுமையான இசைக் கச்சேரியை நடத்தி தன்னுடைய இசைத் திறமையை வெளிப்படுத்தியதன் காரணமாக அன்று முதல் “பால” என்ற அடைமொழியுடன் பால முரளிகிருஷ்ணா என்று அழைக்கப்பட்டார்.”

“ஸ்ரீ பத்ராசலம் ராமதாஸ் மற்றும் ஸ்ரீ அன்னமாச்சார்யா கீர்த்தனைகளை பிரபலப்படுத்தியப் பெருமை இவருக்கு உண்டு.  வெளிநாடுகள் பலவற்றிற்கும் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்திய டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள், தன்னுடைய தாய் மொழியான தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், இந்தி, சமஸ்கிருதம், கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார். கலை மற்றும் பண்பாட்டை மேம்படுத்தும் விதமாக, விரிவான இசை ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், எம்கேபி டிரஸ்ட் என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை நிறுவியவர். இசையில் பல்வேறு ஆராய்ச்சிகளை புரிந்தவர் டாக்டர் பால முரளிகிருஷ்ணா அவர்கள்.”

“டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் திரைத்துறையிலும் காலடி பதித்து, பல திரைப்படங்களுக்குப் பின்னணி பாடியதோடு, பல்வேறு மொழிகளில் 400 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். திருவிளையாடல் திரைப்படத்தில் “ஒரு நாள் போதுமா, இன்று ஒரு நாள் போதுமா….”, கவிக்குயில் திரைப்படத்தில் “சின்னக் கண்ணன் அழைக்கிறான்….”, நூல்வேலி திரைப்படத்தில் “மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே…” போன்ற அவர் பாடிய பாடல்கள் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த அமரத்துவம் வாய்ந்த பாடல்கள் ஆகும்.”

“‘பக்த பிரகலாதா’ என்ற திரைப்படம் மூலம் நாரதராக நடித்த டாக்டர் பால முரளிகிருஷ்ணா அவர்கள் பல்வேறு படங்களில் தன்னுடைய நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார். சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது, சிறந்த இசையமைப்பாளருக்காக தேசிய விருது, சுவாதித் திருநாள் விருது, சங்கீத கலாநிதி, சங்கீத கலாசிகாமணி, சங்கீத கலாசாரதி, செவாலியே விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் என பல்வேறு விருதுகளுக்கும், பட்டங்களுக்கும் சொந்தக்காரர் டாக்டர் பால முரளிகிருஷ்ணா அவர்கள்.”

“டாக்டர் பால முரளிகிருஷ்ணாவின் 75-வது பிறந்த நாள் விழா மற்றும் செவாலியே விருது பெற்றதற்கான பாராட்டு விழா 2005 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற போது அந்த விழாவில் நான் கலந்து கொண்டு அவரை வாழ்த்திப் பேசியதும், அப்போது எனக்காக “ஜெய ஜெய லலிதே” என்ற ராகத்தை அவர்கள் அர்ப்பணித்ததும், அதே விழாவில் தமிழ்நாடு அரசின் சார்பில் “கந்தர்வ கான சாம்ராட்” என்ற பட்டத்தை நான் வழங்கியதும் இன்னும் என் மனதில் பசுமையாக உள்ளது.”

“இசைத் துறையில் அளப்பரிய பணி ஆற்றிய டாக்டர் பால முரளிகிருஷ்ணா அவர்கள் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்று விட்டார் என்பது கர்நாடக இசைக் கலைஞர்களுக்கும், இசைத் துறையினருக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகப் பெருமக்களுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கும் மிகப் பெரிய இழப்பு. இந்த இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது.  அவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.”

“டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இசை கலைஞர்களுக்கும், ரசிகப் பெருமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.”- இவ்வாறு முதலமைச்சர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.