Home Featured வணிகம் ‘நாசி லெமாக் ஐஸ்கிரீம்’ சாப்பிட்டிருக்கிறீர்களா? – பினாங்கு பெண்ணின் புதிய முயற்சி!

‘நாசி லெமாக் ஐஸ்கிரீம்’ சாப்பிட்டிருக்கிறீர்களா? – பினாங்கு பெண்ணின் புதிய முயற்சி!

687
0
SHARE
Ad

ice_cream.transformedஅலோர் ஸ்டார் – ‘நாசி லெமாக்’ மலாய்க்காரர்களின் பாரம்பரிய உணவு. ஆனால் மலேசியாவில் பல்லினத்தவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடும் காலை உணவாக இருந்து வருகின்றது.

மலேசியர்களிடம் காலை உணவு என்னவென்று கேட்டால் சட்டென யோசிக்காமல் ‘நாசி லெமாக்’ என்பார்கள். காரணம், தேங்காய் பால், இஞ்சி, பாண்டான் சேர்ந்த கலவையில் வெந்த சோறுடன், காரசாரமான சம்பல், பொறித்த கடலை மற்றும் நெத்திலி அதன் ருசியே தனி தான்.

இப்படிப்பட்ட, பிரபலமான சுவை மிகுந்த ‘நாசி லெமாக்’ உணவை கொஞ்சம் மாற்றி யோசித்த பினாங்கைச் சேர்ந்த மெலிசா டான் சியா ஹுய் என்ற 25 வயதுப் பெண், ‘நாசி லெமாக் ஐஸ்கிரீம்’ என்ற பெயரில் புதிய உணவு வகை ஒன்றை உருவாக்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

லண்டன் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் வரைகலை படிப்பில் படித்து பட்டம் பெற்றவரான மெலிசா, புதிய தயாரிப்புகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதன் படி, ‘ஸ்கிரீம் சாஃப்ட்செர்வ்’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதன் மூலம் மக்களுக்கு வித்தியாசமான சுவையை அளிக்க முடிவு செய்தார்.

கிட்டத்தட்ட 3 மாதங்கள் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகே, ‘நாசி லெமாக் ஐஸ்கிரீம்’ என்ற புதிய உணவை மெலிசா உருவாக்கியுள்ளார்.

இது குறித்து பெர்னாமாவிற்கு மெலிசா அளித்துள்ள நேர்காணலில், “இது வித்தை கிடையாது. அதோடு, நான் கவனம் ஈர்ப்பதற்காக எதையும் செய்பவளும் இல்லை. கொஞ்சம் வித்தியாசமான சுவையை உருவாக்க வேண்டும், அதனை மக்கள் விரும்ப வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த நாசி லெமாக் ஐஸ்கிரீம் உருவாக்கப்பட்டது”

“இதில் அரிசி பயன்படுத்தப்படவில்லை. ஆனால் நாசி லெமாவில் முக்கிய அங்கம் வகிக்கும் கடலை, நெத்திலி, சம்பல், முட்டை மற்றும் வெள்ளரித் துண்டு ஆகியவை நாசி லெமாக் ஐஸ்கிரீம் மேல் தூவப்பட்டிருக்கும்”

“செராய் மற்றும் தேங்காய் பால் கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் அது நாசி லெமாவைப் போலவே சுவை கொண்டதாக இருக்கும். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் உடனக்குடன் பெறக்கூடியவை. மாறாக எந்த ஒரு பொருளும் இரசாயனத்தால் கெடாமல் பாதுகாக்கப்பட்டவை அல்ல” என்று மெலிசா தெரிவித்துள்ளார்.

Nasilemak icecreamவிற்பனைக்கு வந்த முதல் நாள், 30 கப்கள் மட்டுமே விற்பனையான ‘நாசி லெமாக் ஐஸ்கிரீம்’, நேற்று முன்தினம் 144 கப்கள் விற்பனை ஆகியுள்ளது. இதன் விலை 10 ரிங்கிட் ஆகும்.

“நட்பு ஊடகங்களில் எனக்கு எதிராகப் பலரும் விமர்சித்து வருகின்றனர். நான் பைத்தியக்காரத்தனமாக எதையோ செய்வதாகவும், என்னுடைய தயாரிப்பு அறுவெறுப்பாக இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால் நான் கேட்பது என்னவென்றால், நீங்கள் ஏன் இதை ஒருமுறை ருசித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லக்கூடாது?” என்று கேள்வி எழுப்புகிறார் மெலிசா.

தொகுப்பு: செல்லியல்

தகவல்: பெர்னாமா