Home கலை உலகம் திரைவிமர்சனம்: “ஆ” – பேயை தேடி மிரட்டலான பயணம்

திரைவிமர்சனம்: “ஆ” – பேயை தேடி மிரட்டலான பயணம்

886
0
SHARE
Ad

aaaah-movie-stills-8கோலாலம்பூர், நவம்பர் 28 – பேய் இருக்கா? இல்லையா? …. இது தான் காலங்காலமாக மனிதர்களுக்கிடையே எழுப்பப்பட்டு வரும் கேள்வி. இந்த கேள்விக்கு இதுவரை இரண்டு விதமான பதில்களே வழக்கத்தில் இருந்து வருகின்றன.

“நிச்சயமாக   இருக்கிறது. நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்” என்று ஒரு சிலரும், “பேய்ன்னு ஒன்னு இந்த உலகத்தில இல்லவே இல்ல. எல்லாம் சும்மா கட்டுக்கதை” என்று ஒரு சிலரும் ஆங்காங்கே உலகின் பல்வேறு இடங்களில் இது பற்றி விவாதம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அப்படியாக பேய் இருப்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க அதைத் தேடி மூன்று நண்பர்கள் பயணம் செய்வது தான்  “ஆ” படத்தின் கதை. ‘ஓர் இரவு’ மற்றும் ‘அம்புலி’ என இரண்டு வெற்றிகரமான திகில் படங்களை இயக்கிய ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாரயண்  ஆகிய இரட்டை இயக்குநர்கள் இயக்கும் மூன்றாவது படம்.

#TamilSchoolmychoice

கதைப்படி, கல்லூரி நண்பர்களான பாபி சிம்ஹா, கோகுல்நாத், பால சரவணன் மற்றும் மேக்னா ஆகிய நால்வரும் நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கின்றனர். அப்போது அவர்களுக்குள் பேய் பற்றிய விவாதம் வருகின்றது. aaaah-movie-stills-7

பந்தயம் கட்டி வெற்றி பெறுவதையே தொழிலாகக் கொண்டிருக்கும் சிம்ஹா, கல்லூரி நாட்களில் கோகுலிடம் தான் பந்தயம் கட்டி இழந்த யமஹா பைக்கை மீட்க மீண்டும் ஒரு பந்தயம் கட்டுகிறார்.

அதாவது பேய் இருப்பதை கோகுல், பால சரவணன் மற்றும் மேக்னா ஆகிய மூவரும் தகுந்த ஆதாரத்துடன் நிரூபித்துவிட்டால், தனது சொத்தில் பாதி 60 கோடியை எழுதிக்கொடுத்துவிடுவதாகவும், தோற்றுவிட்டால் தன்னிடம் இருந்து பெற்ற யமஹா பைக்கை திரும்பக் கொடுத்துவிட வேண்டும் என்றும் சிம்ஹா கூறுகிறார்.

முதலில் மறுக்கும் கோகுல் பின்னர் தனது நண்பர்கள் மூளை சலவை செய்ய ஒப்புக்கொள்கிறார்.  மூவரும் பேய் இருப்பதை வீடியோ ஆதாரத்துடன் நிரூபிக்க பல்வேறு இடங்களுக்குச் செல்கின்றனர்.

இறுதியில் பேய் இருப்பது நிரூபிக்கப்பட்டதா? பந்தயத்தில் யார் ஜெயித்தார்கள் என்பது தான் கதை.

5 வெவ்வேறு சம்பவங்கள்

aaaah-movie-stills-10

கதைக்குள் கதை என்பது போல், பேயை தேடிச் செல்லும் பயணத்தில் 5 வித்தியாசமான உள் கதைகளை வைத்திருக்கும் இயக்குநரின் திரைக்கதை வடிவமைப்பு தமிழுக்கு புதியது. இது போன்ற ஆந்தாலஜி (Anthology) கதையம்சம் கொண்ட பேய் படங்கள் தாய்லாந்து மற்றும் கொரிய திரையுலகில் ஏராளம் உள்ளன.

அதே பாணியை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கும் விதம் ரசிக்க வைக்கின்றது. வங்கக்கடலில் மந்திக்குழியில் படகுடன் காணாமல் போன காதலர்கள், ஜப்பானில் மருத்துவமனையில் உலவும் பேய், துபாயில் பாலைவனத்தில் பங்களாவில் வசிக்கும் ஏசானியா பெண் பூதம், வங்கி ஏடிஎம் சம்பவம் மற்றும் காரில் உள்ள டிவிடி பேய் என ஒவ்வொரு கதையும் மிரட்டல்.

குறிப்பாக பாலைவன பேய் மற்றும் எம்எஸ் பாஸ்கர் நடிப்பில் அந்த ஏடிஎம் சம்பவம் ஆகிய இரண்டு கதைகளும் படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பு சேர்க்கின்றன.

கோகுல்நாத், மேக்னா ஆகிய இருவரும் இயல்பாக நடித்திருக்கின்றனர். அசாத்திய துணிச்சலுடன் முதலில் களம் இறங்குவது, பின்னர் சிக்கலில் மாட்டிக்கொண்டு உதவி கேட்பதுமாக கோகுல்நாத் நடிப்பு அற்புதம்.

aaaah-movie-stills-6வெள்ளை வெளேறென்று நெய் பனியாரமாக இருக்கும் கதாநாயகி மேக்னாவிற்கு படத்தில் செர்ரி என்று பெயரிட்டிருக்கிறார்கள். பேயை கண்டவுடன் மிரளுவதும், மலேசியாவிலிருக்கும் காதலரிடமிருந்து போன் வந்தவுடன் வெட்கத்தில் புன்னகைப்பதும், சிம்ஹா தவறான வார்த்தைகள் பேச அழுவதுமாக செர்ரி நடிப்பில் இனிக்கிறார்.

பாலைவன மோகினியின் அழகில் மயங்கி பின்னால் செல்வதும், “மலேசியாவிலும் பொண்ணுகளுக்கு பசங்க தான் ரீசார்ஜ் பண்றாய்ங்களா?” என்று அப்பாவியாக கேட்பதுமாக ‘பண்ணையாரும் பத்மினியும்’ புகழ் பால சரவணன் காட்சிகளில் கலகலப்பு சேர்த்திருக்கிறார்.

இவர்களுடன் எம்எஸ் பாஸ்கர், பாஸ்கி ஆகியோரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.

எம்எஸ் பாஸ்கரை ஏடிஎம் மையத்தில் பேய் மிரட்டும் பொழுது அங்குள்ள கணிப்பொறி திரையில், “எடுத்த பணத்தை திரும்ப வைக்கவும்” என்று காட்டுவதும், துண்டித்த தலையின் பார்வையில் இருந்து வீடியோ காட்சிகள் வருவதும் அபாரம்.

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை

aaaah-movie-stills-5

சதிஷ்.ஜி ஒளிப்பதிவு ஓகே ரகம் தான். கடல் காட்சிகள், ஜப்பான், துபாய் பாலைவனக் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. கிளைமாக்ஸ் காட்சிகளில் ஒளிப்பதிவில் இன்னும் கூடுதல் உழைப்பு கொடுத்திருக்கலாம்.

கே.வெங்கட்பிரபு சங்கர் இசையில் கானா பாலா பாடும் ‘கண்ணாடி’ பாடல் கேட்கும் ரகம்.

சாம்.சி.எஸ் -ன் பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ற சுவாரஸ்யம் சேர்த்தாலும், படம் பார்ப்பவர்களை இருக்கையின் விளிம்பிற்கு கொண்டு வரத் தவறிவிட்டது.

மற்றபடி திகில் பட ரசிகர்களுக்கு ‘ஆ’ திரைப்படம் நிச்சயம் பயம் கலந்த ஓர் புதிய பயணம் தான்.

– ஃபீனிக்ஸ்தாசன்

http://www.youtube.com/watch?v=23U_AeojvxA