Home வணிகம்/தொழில் நுட்பம் வரி ஏய்ப்பு விவகாரம் – இந்தியாவுடன் சுமூகமாகச் செல்ல நோக்கியா முடிவு!

வரி ஏய்ப்பு விவகாரம் – இந்தியாவுடன் சுமூகமாகச் செல்ல நோக்கியா முடிவு!

608
0
SHARE
Ad

Nokiaபுது டெல்லி, ஜூன் 19 – நோக்கியா நிறுவனம் அதன் இந்திய வர்த்தகத்தில் அரசுடன் ஏற்பட்ட வரி ஏய்ப்பு தொடர்பான பிரச்சனைகளைச் சுமூகமான முறையில் தீர்த்துக் கொள்ள முன்வந்துள்ளது.

ஃபின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம், இந்தியாவில் அதன் செல்பேசி வர்த்தகத்தினைப் பல வருடங்களாக நடத்தி வந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவை வாங்கிய பிறகு படிப்படியாக இந்திய வர்த்தகத்தைக் குறைத்துக் கொள்ளத் துவங்கியது. இதற்கிடையே செல்பேசி விலைகளைக் குறைத்துக்காட்டி, வரிஏய்ப்பு செய்ததாக இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் நோக்கியா மீது குற்றம் சாட்டினர். இது தொடர்பாக அந்நிறுவனத்திற்கு நீதிமன்றம் சம்மன் ஒன்றையும் அனுப்பியது.

நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருக்கும் இந்த விவகாரத்தை முடிவிற்குக் கொண்டு வர நோக்கியா தலைமை தற்போது முடிவு செய்துள்ளது. 20,000 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகக் கூறப்படும் இந்த விவகாரத்தில் அந்நிறுவனம் இந்தியாவுடன் சுமூகமாகத் தீர்க்க பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கி உள்ளது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் துணைத்தலைவர் பேரி பிரஞ்ச் கூறுகையில், “இந்தியாவில் எங்களது வர்த்தகம் சிறப்பானதாக இருந்தது. இந்த வரி விவகாரத்தைத் தவிர்த்து அங்கு நாங்கள் பல்வேறு சிறந்த அனுபவங்களைப் பெற்றோம். வரி தொடர்பாக இந்தியாவிற்கும் எங்கள் நிறுவனத்திற்கும் இடையே நடைபெற்று வரும் பிரச்சனைகளைச் சுமூகமாகத் தீர்க்க நாங்கள் விரும்புகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

நோக்கியா மீது வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டு காரணமாக சென்னையில் செயல்பட்டு வந்த நோக்கியா ஆலையை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மாற்ற விடாமல் இந்திய அரசு, நீதிமன்றங்கள் மூலமாகப் பல்வேறு முட்டுக் கட்டைகளை விதித்தது. இது தொடர்பாக நோக்கியா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வர்த்தகத்தில் வரி தொடர்பாக எங்களது நிலைப்பாட்டை நாங்கள் விளக்கி  உள்ளோம். இந்த விவகாரத்தில் இந்தியா நடந்து கொண்ட விதம் பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அரசு உடன்பட்டால் விரைவில் இந்த விவகாரம் முடிவிற்கு வந்துவிடும்” என்று தெரிவித்துள்ளது.