Home Featured உலகம் பிரசல்ஸ் தாக்குதலில் பலியான தமிழர் ராகவேந்திரன் கணேஷ் – நல்லுடல் இன்று சென்னை வந்தடையும்! 40...

பிரசல்ஸ் தாக்குதலில் பலியான தமிழர் ராகவேந்திரன் கணேஷ் – நல்லுடல் இன்று சென்னை வந்தடையும்! 40 நாட்களுக்கு முன்புதான் தந்தையானார்!

673
0
SHARE
Ad

பிரசல்ஸ் – பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்சில் நடத்தப்பட்ட இரட்டைத் தாக்குதல்களைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டவர் இன்போசிஸ் நிறுவனத்தின் மென்பொறியாளர் ராகவேந்திரன் கணேஷ்.

நேற்று பெல்ஜியம் அதிகாரிகள் டிஎன்ஏ எனப்படும் மரபணு பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்திய தகவல்களின்படி அந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ராகவேந்திரனும் (படம்) ஒருவர் என பெல்ஜியத்திலுள்ள இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

Ragavendran-ganesh-deceased - brussels attackசென்னையைச் சேர்ந்த ராகவேந்திரன் பிரசல்சில் பணியாற்றி வந்தார். அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என அவரது தாயார் தெரிவித்திருந்ததைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.

#TamilSchoolmychoice

அவரைத் தேடும் பணிகளில் மும்முரமாக கவனம் செலுத்த வேண்டுமென தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

கைத்தொலைபேசி கடைசி எண்ணைக் கொண்டு புலனாய்வுகள்

ராகவேந்திரனின் கைத்தொலைபேசி எண்களைக் கொண்டு அவர் கடைசியாக தொடர்பு கொண்ட எண்ணை அடையாளம் கண்டு, புலனாய்வுகள்  மேற்கொண்டதில் அவர் பிரசல்ஸ் மெட்ரோ ரயிலில் கடைசியாகப் பயணம் செய்து கொண்டிருந்தார் என்பது கண்டறியப்பட்டது.

கடைசியாக அவர் மும்பையிலிருக்கும் அவரது பெற்றோர்களுடன் ஸ்கைப் எனப்படும் காணொளித் தொடர்பு மூலம் பேசிக் கொண்டிருந்தார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

Deaths reported after explosions at Brussels airport, subwayபிரசல்ஸ் தாக்குதலின் போது மக்கள் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட காட்சி….

நேரப்படி பிரசல்ஸ் விமான நிலைய வெடிகுண்டுத் தாக்குதல்கள் முதலில் நிகழ்த்தப்பட்டு அதற்குப் பின்னர்தான் மெட்ரோ தாக்குதல்கள் தொடர்ந்தன. விமான நிலையத் தாக்குதல் தகவல் வெளிவந்ததும், ராகவேந்திரன் உடனடியாக தனது பேஸ்புக் பக்கத்தில் தான் நலமாக இருப்பதாக பதிவிட்டிருந்தார்.

ஆனால், அதன்பிறகுதான் ஏறத்தாழ ஒரு மணி நேரம் கழித்து, அவர் மெட்ரோ இரயில் நிலையத் தாக்குதலில் பலிகொள்ளப்பட்ட சோகம் நிகழ்ந்திருக்கின்றது.

வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களை அவர்களின் சிதறிய உடல்களைக் கொண்டு அடையாளம் காணும் பணியை பெல்ஜியம் அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். அப்போதுதான், உயிரிழந்தவர்களில் ராகவேந்திரன் கணேஷும் ஒருவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, பெல்ஜியத்தில் உள்ள இந்தியத் தூதரகமும் உறுதி செய்தது.

ராகவேந்திரன் கணேஷ் காணாமல் போனதை அடுத்து அவரது குடும்பத்தினர் சில நாட்களுக்கு  முன்பு பிரசல்ஸ் சென்று சேர்ந்தனர்.

40 நாட்களுக்கு முன்பு தந்தையான ராகவேந்திரன் – நல்லுடல் இன்று சென்னை கொண்டு வரப்படலாம்

ராகவேந்திரனின் இளைய சகோதரர் சந்திரசேகரும், பெற்றோர்களும் தற்போது பிரசல்சில் உள்ளனர். அவர்களிடம் ராகவேந்திரனின் நல்லுடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ராகவேந்திரனின் நல்லுடல் இன்று சென்னை வந்தடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில் மறக்க முடியாத மற்றொரு சோகம் என்னவென்றால், கடந்த நான்கு ஆண்டுகளாக இன்போசிஸ் நிறுவனம் சார்பாக பிரசல்ஸ் நகரில் பணியாற்றி வந்த ராகவேந்திரனுக்கு கடந்த மாதம்தான் – 40 நாட்களுக்கு முன்புதான் மகன் பிறந்திருக்கின்றான். அவரது மனைவி வைசாலியும், மகனும் தற்போது சென்னையில் உள்ளனர்.

பிரசல்சில் கடந்த மார்ச் 22ஆம் தேதி விமான நிலையத்திலும், மெட்ரோ ரயில் நிலையத்திலும் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களில் இதுவரை 35 பேர் பலியாகியுள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.