Home இந்தியா ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரம்: நேரில் ஆஜராக மாறன் சகோதரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரம்: நேரில் ஆஜராக மாறன் சகோதரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு!

843
0
SHARE
Ad

sun_brothersபுதுடெல்லி, பிப்ரவரி 6 – ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும், ‘சன்’ தொலைக்காட்சி நிறுவனருமான கலாநிதி மாறன் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2004-ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன். 2007-ஆம் ஆண்டு வரை அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில்,

ஏர்செல் நிறுவன பங்குகளை அதன் நிறுவனர் சிவசங்கரன், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க நெருக்குதல் கொடுத்ததாகவும், பங்குகள் விற்பனை மூலம் ‘சன்’ குழுமத்தின் பங்குகளின் விலை உயர்ந்ததாகவும் கூறப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐயிடம் சிவசங்கரன் புகார் தெரிவித்தார். இதையடுத்து, தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் நேரில் ஆஜராக டெல்லி உச்ச நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யுமாறு மாறன் சகோதரர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவை விசாரிக்க மறுத்து உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. வரும் மார்ச் 2-ஆம் தேதி மாறன் சகோதரர்கள் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், 2ஜி வழக்கில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிக்கை போதுமானதாக இருப்பதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.