Home அவசியம் படிக்க வேண்டியவை திரைவிமர்சனம்: பாபநாசம் – வித்தியாசமான கதை, அசத்தலான நடிப்பு

திரைவிமர்சனம்: பாபநாசம் – வித்தியாசமான கதை, அசத்தலான நடிப்பு

706
0
SHARE
Ad

kamals-papanasam-movie-new-posterகோலாலம்பூர், ஜூலை 3 – மோகன்லால், மீனா நடிப்பில், ‘திரிஷ்யம்’ என்ற பெயரில் மலையாளத்தில் 2013-ல் எடுக்கப்பட்ட படம், அப்படியே கன்னடா, தெலுங்கு என இரண்டு மொழிகளில் முன்னணிk கதாநாயகர்களின் நடிப்பில் வெற்றி பெற்று, தற்போது தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன், கௌதமி நடிப்பில், ‘பாபநாசம்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது.

தென்காசி அருகே உள்ள பாபநாசத்தில் முற்றிலும் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில், ஒரு வீடு, டீக்கடை, போலீஸ் ஸ்டேஷன் இவைகளைச் சுற்றித் தான் கதை நகர்கிறது.

ஆனாலும், ரசிகர்கள் மத்தியில் ஒரு படம்  வெற்றியடைய பெரிய பெரிய செட்டுகளோ, வெளிநாடுகளில் படப்பிடிப்புகளோ தேவையில்லை. அதையெல்லாம் விட திருப்பங்களுடன் கூடிய விறுவிறுப்பான கதை தான் முக்கியம் என்பதை நடு உச்சியில் நங்கென்று குட்டி உணர்த்துவது போல் அமைந்திருக்கிறது பாபநாசம்.

#TamilSchoolmychoice

அப்படி ஒரு ஜனரஞ்சகமான கதையில், உலகநாயகனின் நடிப்பு கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளதால், பாபநாசம் கமல்ஹாசன் நடிப்பில் இன்னொரு ‘மகாநதியாக’ ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

மலையாளத்தில் திருஷ்யம் படத்தை இயக்கிய அதே ஜீத்து ஜோசப் தான் தமிழில் பாபநாசத்தையும் இயக்கியுள்ளார்.

கதைச் சுருக்கம்

தென்காசி அருகே ஓர் அழகான குடும்பம். 4ஆம் வகுப்பே படித்துள்ள சுயம்புலிங்கம், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் அந்த ஊரில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தனது திறமையாலும், சிக்கனமான வாழ்க்கையாலும் வீட்டைச் சுற்றி 5 ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரராகியிருக்கும் சுயம்பு, அந்த ஊருக்கே கேபிள் டிவி ஒளிபரப்புச் சேவை செய்து வருகிறார்.

papanasam

இப்படி மகிழ்ச்சியாகப் போய் கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடீரென ஒரு பிரச்சனை வெடிக்கிறது. எதிர்பாராதவிதமாக ஒரு கொலை. அந்தக் கொலையை மறைக்க குடும்பமே போடும் நாடகம், இறுதியில் அந்தக் குடும்பத்திற்கு என்ன நேர்ந்தது? இது தான் பாபநாசம் படத்தின் கதை.

நடிப்பு

சுயம்புலிங்கம் அண்ணாச்சியாகக் கமல்ஹாசன், நடிப்பில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார். கேபிள் டிவி உரிமையாளராக, டிவிஎஸ் எக்ஸலில் அந்த ஊரையே வலம் வருவது. வேட்டி சட்டை, மணமணக்க குட்டிக்கூரா பவுடர், நெத்தியில் சுருண்ட முடி என அண்ணாச்சி தோரணையே ரசிக்க வைக்கிறது.

“ஏலேய்.. பாசமலர் பாத்து அழுகாதவன் மனுசனா? கட்டமீசக்காரன் ஹிட்லரு கூட அழுதிருக்காவ தெரியும்முல்ல?” என்று எகிறுவது, நள்ளிரவில் கொஞ்சம் அப்படி, இப்படியான பாட்டைப் பார்த்துவிட்டு, வீட்டுக்குச் சென்று மனைவியைத் தாஜா செய்வது என ஒரு சராசரி மனிதரின் கதாபாத்திரம் கொண்ட கதையில், சுயம்பு கதாபாத்திரத்திற்காகத் தனது ஹீரோயிசமெல்லாம் ஒரு ஓரமாகத் தூக்கிப் போட்டுவிட்டு தன்னை முழுவதுமாக அப்படியே ஒப்படைத்திருக்கிறார் கமல்ஹாசன்.

பல வருடங்களுக்குப் பிறகு படத்தில் கமலுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார் கௌதமி. சொந்த வாழ்க்கையில் பல போராட்டங்களைக் கடந்து வந்தாலும், அவரது நடிப்பில் இன்னும் அதே உயிர்ப்பு இருக்கின்றது.

Papanasam7

“தம்பி குருவிக் கூடு மாரி இந்தக் குடும்பத்தைச் சேர்த்து வச்சிருக்கம். அதக் கலச்சிராதீக தம்பி” என்று வருண் கதாபாத்திரத்தின் காலில் விழுந்து கெஞ்சுவது, “ஆகஸ்ட் 2 அன்னிக்கி நாங்க யாரும் ஊர்லியே இல்லையே. தென்காசிக்குல போயிருந்தோம்” என்று அப்பாவியாகப் போலிஸிடம் உளறிக் கொட்டுவது என மலையாளத்தில் மீனா நடித்ததை விட சிறப்பாகவே நடித்திருப்பதாகத் தோன்றுகிறது. மகள்களாக நடித்திருக்கும் நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர் அனில் ஆகிய இருவரும் நடிப்பும் அபாரம்.

இதுதவிர, படத்தில் எம்எஸ் பாஸ்கர், கலாபவன் மணி, இளவரசு, ஆஷா சரத், ஆனந்த் மகாதேவன், டெல்லி கனேஷ் என பல முன்னணி நட்சத்திரங்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒளிப்பதிவு மற்றும் இசை

சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவில் தென்காசியும், பாபநாசமும் அவ்வளவு பசுமை. மலைகளுக்கு நடுவே அழகான வீடு, சாலைகள், டீக்கடை என மிகவும் ரசிக்க வைத்தது.

ஜிப்ரானின் பின்னணி இசை பல காட்சிகளில் இனிமை. குறிப்பாகக் கமல்ஹாசன் போடும் ஒவ்வொரு திட்டங்களின் போதும் வரும் பின்னணி இசை சிறப்பு.

படத்தில் உள்ள இரண்டு பாடல்களும் காட்சிகளுடன் பார்ப்பதற்குச் சிறப்பாக வந்துள்ளன. ஆனால் தனியாகப் பாடலைக் கேட்டால் அவ்வளவு ஈர்ப்பதில்லை. ஒருவேளை கேட்கக் கேட்கத் தான் பிடிக்குமோ?

Papanasam4

மற்றபடி, படத்தில் ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. குறிப்பாகக் குடும்பத்தையே உட்கார வைத்துப் போலீஸ் விசாரணை நடத்தும் பொழுது, படம் பார்க்கும் நாம் சீட்டின் நுனிக்கே வந்து விடுகின்றோம். அந்த அளவிற்கு அற்புதமான நடிப்பு.

ஆனால் ஒரு விசயம், ஏற்கனவே நீங்கள் மலையாளத்தில் ‘திரிஷ்யம்’ பார்த்துவிட்டீர்கள் என்றால்,சில காட்சிகளில் ‘பாபநாசம்’ உங்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தலாம்.

இதுவரை வேறு எந்த மொழிகளிலும் இந்தப் படத்தை பார்த்ததில்லை. தமிழில் தான் முதன் முறையாகப் பார்க்கிறீர்கள் என்றால், படம் உங்களைக் கட்டாயம் மகிழ்ச்சிப்படுத்திப் புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.

மொத்தத்தில் பாபநாசம் – வித்தியாசமான கதை, அசத்தலான நடிப்பு!

ஃபீனிக்ஸ்தாசன்