Home 13வது பொதுத் தேர்தல் பாசீர் மாஸ் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட இப்ராகிம் அலி முடிவு

பாசீர் மாஸ் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட இப்ராகிம் அலி முடிவு

1051
0
SHARE
Ad

Ibrahim Aliகோத்தா பாரு, ஏப்ரல் 11 – பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ இப்ராகிம் அலி, எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் தனது நடப்பு நாடாளுமன்ற தொகுதியிலேயே போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

மேலும், இன்று முதல் பொதுத்தேர்தல் முடியும் வரை, பெர்க்காசா கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து தான் விலகி இருக்கப்போவதாகவும், தனக்கு பதிலாக பெர்க்காசாவின் துணைத்தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் பக்கர், அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளப் போவதாகவும் இப்ராகிம் அலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இப்ராகிம் மேலும் கூறுகையில், “ நான் எந்த கட்சியின் சார்பாக பாசீர் மாஸ் தொகுதியில் போட்டியிடப்போகிறேன் என்பது வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் தேதியிலோ அல்லது அதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் தெரியவரும். ஆனால் தேசிய முன்னணியைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், தொடர்ந்து எனது தொகுதி மக்களுக்கு சேவை செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாசீர் மாஸ் நாடாளுமன்ற தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அம்னோ வேட்பாளர் அகமத் ராஸ்டி மகமத்தை விட 8, 991 வாக்குகள் பெரும்பான்மை பெற்று இப்ராகிம் அலி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாசீர் மாஸ் – கடந்த கால வரலாறு

2004 பொதுத் தேர்தலில் அன்றைய பிரதமர் அப்துல்லா படாவியின் தலைமைத்துவத்தில் இப்ராகிம் அலிக்கு பாசீர் மாஸ் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து அம்னோவிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிட்ட இப்ராகிம் அலி 6,198 வாக்குகள் பெற்று தோல்வி கண்டார். இருப்பினும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை சுயேச்சையாக நின்று பிரித்த காரணத்தால், அங்கு அவருக்கு பதிலாக நிறுத்தப்பட்ட அம்னோ கட்சி வேட்பாளர், பாஸ் கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

அதன்பின்னர், 2008 பொதுத் தேர்தலில் இப்ராகிம் அலி மீண்டும் சுயேச்சை வேட்பாளராக பாசீர் மாஸ் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்த முறை பாஸ் கட்சியிடம் அவர்  செய்து கொண்ட தனிப்பட்ட ஒப்பந்தம் காரணமாக அவரை எதிர்த்து பாஸ் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தவில்லை.

மாறாக, இப்ராகிம் அலியை பாஸ் கட்சி ஆதரித்தது. அதனால், அம்னோ வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

இந்த முறை கண்டிப்பாக பாஸ் கட்சி அவரை ஆதரிக்கப் போவதில்லை.

அவர் அம்னோவிலும் இன்னும் சேரவில்லை. ஆனால், பிரதமர் நஜிப் தேசிய முன்னணி சார்பாக வெளியிலிருந்து ஆதரவு தரும் சில வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என கோடி காட்டியிருந்தார்.

அந்த வகையில் பார்த்தால், இப்ராகிம் அலி மீண்டும் நிற்பதாக அறிவித்துள்ள பாசீர் மாஸ் தொகுதியில் இந்த முறை அம்னோ போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டு, இப்ராகிம் அலிக்கு ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.