விஜய் நடிக்கும் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அவர்களுக்கு துணையாக அய்ங்கரன் நிறுவனம் செயல்படுகிறது. லைக்கா நிறுவனத்துக்கு இது முதல் தமிழ்ப் படம் கிடையாது.
ஏற்கெனவே வேறு பெயரில் “பிரிவோம் சந்திப்போம்” என்று படமெடுத்தார்கள். கரு பழனியப்பன், இயகுநர் சேரன் போன்றவர்கள் அதற்கு உதவியாக இருந்தார்கள்.
இந்த நிறுவனத்தின் விமான சேவைக்கு ராஜபக்சே தான் அனுமதியளித்தார். ராஜபக்சேவின் மருமகன் இந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்.
இப்படிப்பட்ட தொடர்புகளைக் கொண்ட லைக்கா நிறுவனத்தின் படத்தில், ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறிக் கொள்ளும் விஜய் நடிப்பதாக செய்தி வெளியானதுமே கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் போன்ற அமைப்புகளுக்கு கடிதங்களும் அளித்துள்ளன. இப்போது கத்தி படம் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகிறது.
ஆனால் இத்தனை பிரச்சனைகள் இருப்பதால் படத்தை வெளியிட விநியோகஸ்தர்களும், திரையரங்குகளும் தயக்கம் காட்ட ஆரம்பித்துள்ளன.
இதனால் படத்தை வெளியிட சுமூகமான சூழலை உருவாக்கும் வேலையில் மும்முரமாகியுள்ளார் முருகதாஸ். அவரும் அய்ங்கரன் கருணாவும் சேர்ந்து, தமிழ் இயக்கத் தலைவர்களைச் சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.
லைக்கா நிறுவனத்துக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தத் தலைவர்களிடம் விளக்கி வரும் முருகதாஸும் கருணாவும், படம் தீபாவளிக்கு சிக்கலின்றி வெளிவர உதவுமாறு கோரி வருகின்றனர்.