இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதும், கைது செய்யப்படும் போதும் அதை வன்மையாக கண்டிக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா, இதை மத்திய அரசு தடுத்து நிறுத்தக்கோரி அவ்வப்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதங்களும் எழுதி வருகிறார்.
இதை கேலி செய்யும் வகையிலும், முதலமைச்சர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையிலும் இலங்கை ராணுவ அமைச்சகத்தின் இணையதளத்தில் சமீபத்தில் அவதூறாக ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.
இந்த பிரச்சனையை முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதைத்தொடர்ந்து, இணையதளத்தில் வெளியான கட்டுரைக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு இலங்கை ராணுவ அமைச்சகம், அந்த கட்டுரையை உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கியது.
இந்த பிரச்சனையை அ.தி.மு.க. நேற்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் கிளப்பியது. முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறான கட்டுரை வெளியிட்ட இலங்கை அரசை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் வற்புறுத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து, வெளியுறவுத்துறை அமைச்சகம் டெல்லியில் உள்ள இலங்கை தூதர் சுதர்சன் சேனவிரத்னேயை நேரில் அழைத்தது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இலங்கை விவகாரங்களை கவனிக்கும் இணைச் செயலாளர்,
அவதூறு கட்டுரை தொடர்பாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வெளிப்படுத்திய கோபத்தையும் கவலையும் சுதர்சன் சேனவிரத்னேயிடம் எடுத்துக்கூறி, இந்தியாவின் கண்டனத்தை தெரிவித்தாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறின.
இந்த அவதூற் கட்டுரை பற்றி அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை கூறுகையில்,”120 கோடி மக்கள் தொகையை கொண்ட இந்தியாவை அவர்கள் (இலங்கை) அவமதிப்பது ஆச்சரியமாக உள்ளது.
மேலும் இலங்கை அரசை வன்மையாக கண்டித்து ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என தம்பிதுரை கூறினார்.
பின்னர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், உறுப்பினர்களின் கவலையில் தான் பங்குகொள்வதாகவும், இந்த பிரச்சனை தொடர்பாக மத்திய அரசின் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.
அத்துடன், இலங்கை தூதரை அழைத்து இந்த பிரச்சனை தொடர்பாக சபையில் உறுப்பினர்கள் வெளிப்படுத்திய உணர்வுகள் அவரிடம் தெரிவிக்கப்படும் என்றும் அப்போது அவர் உறுதியளித்தார்.