Home கலை உலகம் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார்!

லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார்!

857
0
SHARE
Ad

actor-ss-rajendranசென்னை, அக்டோபர் 24 – கடந்த சில நாட்களாக நுரையீரல் தொற்று நோயால் அவதிப்பட்டு வந்த பழம்பெரும் நடிகர் ‘எஸ்.எஸ்.ஆர்.’ எனப்படும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86.

நடிகர் சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி திரைப்படத்தின் மூலமாகவே எஸ்.எஸ்.ராஜேந்திரனும் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். முதல் படம் தொடங்கி, பல்வேறு படைப்புகளில் திராவிட இயக்க கருத்துக்களை வெளிப்படுத்தும் வசனங்களைப் பேசி நடித்ததால், ‘லட்சிய நடிகர்’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

SS.Rajendran Old Photo

#TamilSchoolmychoice

இலட்சிய நடிகரின் இளவயதுத் தோற்றம்…

‘முதலாளி’, ‘மனோகரா’, ‘ரத்தக்கண்ணீர்’, ‘பராசக்தி’, ‘சிவகங்கை சீமை’, ‘ராஜா தேசிங்கு’, ‘குமுதம்’, ‘ஆலயமணி’, ‘காஞ்சித் தலைவன்’, ‘மணி மகுடம்’, ‘பூம்புகார்’, ரத்தக் கண்ணீர், ரங்கூன் ராதா, சிவகங்கைச் சீமை, பூம்புகார், மறக்க முடியுமா, பார் மகளே பார், குங்குமம், பச்சை விளக்கு, கைகொடுத்த தெய்வம், சாரதா உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து, தனி முத்திரை பதித்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.

திரைத்துறையில் இருந்து அரசியல் துறையிலும் கால்பதித்த அவர் தொடக்க காலத்தில் திமுகவில் இணைந்து செயல்பட்டார். பின்னர் அதிமுகவில் இணைந்தார்.

SS Rajendran with Rajnikanth 600 x 400

அண்மையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்துடன், எஸ்.எஸ்.இராஜேந்திரன்…

கடந்த 1962ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள தேனி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.  இதன்மூலம், இந்திய அளவில் தேர்தல் களம் கண்டு வெற்றி பெற்ற முதல் நடிகர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது.

அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், சென்னையில் தனது மனைவி தாமரைச்செல்வி மற்றும் மகன் கண்ணனோடு வாழ்ந்து வந்தார். இரு தினங்களுக்கு முன்னர் வீட்டில் மயங்கி விழுந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 11 மணி அளவில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார்.  நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த அவருக்கு தமிழ்த் திரையுலகத்தினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.