Home நாடு “செல்லினம், ​செல்லியல், அ​ஞ்சல் – புதிய பரிமாணம்” – சிங்கை அழகிய பாண்டியனின் பாராட்டு!

“செல்லினம், ​செல்லியல், அ​ஞ்சல் – புதிய பரிமாணம்” – சிங்கை அழகிய பாண்டியனின் பாராட்டு!

1158
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 24 – (எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி ‘முரசு அஞ்சல்’ 30 ஆண்டு கால விழா, மற்றும் செல்லினம், செல்லியல் செயலிகளின் தொழில் நுட்ப மேம்பாடுகள் அறிமுக விழா என – தமிழ் தொழில்நுட்ப விழாவாக மலரவிருக்கும் ‘இணைமதியம்’ விழாவை முன்னிட்டு, உலகம் எங்கிலும் இருந்து சிறப்புக் கட்டுரைகளை பல பிரமுகர்கள் எழுதி வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில்  சிங்கப்பூர் தமிழ் வானொலி 96.8-இன் தலைவராக 2005ஆம் ஆண்டில் பணியாற்றியவரும், தற்போது, சிங்கை தமிழ் முரசு தமிழ் நாளிதழின் துணை ஆசிரியருமான, து.அழகிய பாண்டியன் (படம்)எழுதியுள்ள கட்டுரை இன்று இடம் பெறுகின்றது)

Alagia Pandiyan Singapore

வரலாறு எனக்குப் பிடிக்கும். வாழ்வின் எந்த நிகழ்வையும் வரலாற்றோடு ஒப்பிட்டுப் பார்ப்பது நமது எதிர்காலத்துக்குப் பலம் சேர்க்கும் என்பதால்.

#TamilSchoolmychoice

செல்லினம், ​செல்லியல், அ​ஞ்சல் ஆகியவை புதிய பரிமாணம் பெறும் நிகழ்வில் கலந்துகொள்ள நண்பர் திரு முத்து நெடுமாறன் அழைத்தபோது, என் நினைவுகள் பத்தாண்டுகள் பின்னோக்கிப் பயணித்தன.

2005ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று எனது ஐந்து ஆண்டு கால வானொலிப் பயணத்தின் முக்கியமான நிகழ்வுகளுள் ​ஒன்று நிகழ்ந்தது. கன்னித் த​மிழ் மீது என்னை மயக்கம் கொள்ளச் செய்த கவிப்பேரரசு வைரமுத்துவுடனும், கணினித் தமிழை நான் கம்பீரமாகக் கையாளச் ​செய்த திரு முத்து நெடுமாறனுடனும் நான் ஒரே மேடையில்!. அது எப்படி    சாத்​தியமானது என்று இன்று நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது

அந்த மேடையில் செல்லினம் என்ற தமிழ்ச் செயலியை முதன் முதலாக உலகுக்கும், பொதுப்பயன்பாட்டுக்கும் அறிமுகம் செய்தோம். அதுவரை குறுஞ்செய்தியை ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்பிப் பழக்கப்பட்ட தமிழ் உலகம் அன்று முதல் குறுஞ்செய்தியை தமிழிலும் கோர்த்து அனுப்பும் சூத்திரத்தைக் கற்றுக் கொண்டது; அந்த சூத்​திரத்துக்குச் சொந்தக்காரரான திரு முத்து​ நெடுமாறனிடமிருந்து செல்லினம் என்ற அட்சயப் பாத்திரத்தைப் பெற்றுக் கொண்டது.

நேற்றுவரை ​மூன்று தமிழ்

இன்றுமுதல் நான்கு தமிழ்

இதோ கைத்தொலைபேசியில்

கணினித் தமிழ்!

– என கவிப்பேரரசு வைரமுத்து மேடையிலேயே தீட்டிய கவிதை, உடனே செல்பேசியில் செல்லினத்தின் வழி தமிழில் கோர்க்கப்பட்டு, வானொலி நிலையத்திற்குக் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டது.

sellinam_launch photo

செல்லினம் தொடக்க விழாவின்போது கவிப் பேரரசு வைரமுத்து, முத்து நெடுமாறன், அழகிய பாண்டியன்….(கோப்புப் படம்)

உலகின் முதுமொழிகளில் ஒன்றான தமிழை ஆக அண்மையத் தொழில்நுட்பத்திலும் எளிதாகக் கையாள முடியும் என்று செய்து காட்டியதுதான் அன்றைய சாதனை. ஆனால் அந்தச் சாதனையை​ச் சாத்தியமாக்க திரு முத்து சந்​தித்த சோதனைகள் பல.

Alagia Pandiyan 2 Singaporeதொ​ழில்நுட்பத்தின் ஆழ அகலத்தை கரைத்துக் குடித்தவர் முத்து. எனவே பிரசவ வேதனை என்று எதுவும் இல்லாமல் அவரால் செல்லினம் என்ற குழந்தைக்கு உயிர் கொடுக்க முடிந்தது என்றே நம்புகிறேன்.

ஆனால் அந்தக் குழந்தையை தமிழ் உலகம் தத்தெடுத்துக் கொள்ள தொலைபேசி நிறுவனங்கள் என்ற இடைத்தரகர்களின் அனுமதியும் அங்கீகாரமும் தேவையாய் இருந்தது. அந்த அனுமதியையும் அங்கீகாரத்தையும் பெற சிங்கப்பூரின் ​மூன்று தொலைபேசி நிறுவனங்களின் வாசல்களில் ​திரு முத்து சளைக்காம​ல் ஏறி இறங்கிய தருணங்கள் பல. ஒவ்வொரு முறையும் பற்பல காரணங்களைக் கூறி திரு முத்துவின் நம்பிக்கையைக் குலைக்கப்​ பார்த்தன அந்த நிறுவனங்கள்.

லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட அந்த நிறுவனங்கள் கைபேசியில் தமி​ழின் பயன்பாடு அதிகமாக இருக்காது என்ற அனுமானத்​தில் பல நொண்டிச் சாக்குகளைக் கூறியிருக்கலாம்.

ஆனால் தமிழின் மீதும், தனது தகவல் தொழில்நுட்ப அறிவின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த திரு முத்து, மனம் வைத்தால் எந்த மலையையும் அ​சைத்து விடலாம் என்ற துணி​வுடன் செயல்பட்டார். பிரச்சினைகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்ற ஒரு தருணத்தில் அவர் கூறியது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.

If Mohammed will not go to the mountain, the mountain must come to Mohammed.

அந்தத் துணிவுடன், தொலைபேசி நிறுவனங்களின் அத்தனை சந்தேகங்களையும் களைந்து, கட்டுப்பாடுகளுக்கு ஈடுகொடுத்து, நிபந்தனைகளையும் நிறைவேற்றி பத்தாண்டுகளுக்கு முன்பு அந்தப் பொங்கல் நிகழ்வைச் சாத்தியமாக்கினார் திரு முத்து.MURASU 30 years 600 x 600

செல்லினத்தைப் பல்லாயிரம் பேருக்குக் கொண்டு செல்ல வானொலி என்ற சக்திமிகுந்த ஒரு தளத்தை அமைத்துக் கொடுத்த சிறிய பங்கு மட்டுமே என்னுடையது.

தகவல் தொழில்நுட்ப உலகில் தங்கத் தமிழ் கம்பீர நடை பயில வேண்டும் என்ற ஒரு நோக்கம் மட்டுமே திரு முத்துவையும் என்னையும் அந்த மேடை மீது​ நிறுத்தியிருந்தது. பொருளாதார லாபம் எங்களின் நோக்கமாக இருந்ததில்லை. தமிழின் உயர்வே எங்களின் லாபம்.

செல்லினம், செல்லியல், அஞ்சல் ஆகிய முக்கனிகளை புதிய சுவையுடன் இன்று பந்தி வைக்கிறார் நண்பர் முத்து​ நெடுமாறன். அவரது சீரிய பங்களிப்பு தொடரும்வரை அவரது பெயருக்கேற்ப தமிழ் நெடு​ந்தொலைவு பயணிக்கும்; தகவல் தொழில்நுட்ப உலகில் முத்துப் போல் ஜொலிக்கும்.

-து அழகிய பாண்டியன்

துணை ஆசிரியர், தமிழ் முரசு
(2005ல் ஒலி 96.8ன் தலைவர்)