Home Featured இந்தியா வெள்ளத்தால் கடும் சேதம்: மத்தியக் குழுவை விரைவாக அனுப்ப ஜெயலலிதா கோரிக்கை!

வெள்ளத்தால் கடும் சேதம்: மத்தியக் குழுவை விரைவாக அனுப்ப ஜெயலலிதா கோரிக்கை!

409
0
SHARE
Ad

jayalalitha1சென்னை- கடந்த 5 தினங்களாக பெய்து வரும் பலத்த மழையானது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைப் புரட்டிப் போட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்தியக் குழுவை விரைந்து அனுப்புமாறு மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொலைபேசி வழி தொடர்பு கொண்டு பேசிய ஜெயலலிதா, தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள் குறித்து விவரித்துள்ளார்.

முன் எப்போதும் இல்லாத அளவில் பெய்த மழை மற்றும் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் கடுமையான சேதங்களை சந்தித்திருப்பதாகவும், குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“மக்களின் துயர் துடைக்கவும், முன்னெச்சரிக்கையாகவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக விரிவான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன,” என்று ஜெயலலிதா மத்திய உள்துறை அமைச்சரிடம் கூறியதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மழை வெள்ளச் சேத விவரங்களை நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்யவும், தாமதமின்றி மத்திய உதவியைப் பெற பரிந்துரை செய்யவும், மத்தியக் குழு ஒன்றை விரைவாக தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அப்போது முதல்வர் ஜெயலலிதா, மத்திய அமைச்சரை கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, மத்திய குழு மிக விரைவாக தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று உறுதியளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மழை சேத விவரங்கள் தொடர்பான தமிழக அரசின் அறிக்கைக்காக தமது அமைச்சு காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.