Home Featured தமிழ் நாடு கச்சத்தீவு விவாதம்: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதிலடி!

கச்சத்தீவு விவாதம்: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதிலடி!

507
0
SHARE
Ad

karunanidhi-jayalalithaசென்னை – தமிழக சட்டமன்றத்தில் நேற்று கச்சத்தீவு விவகாரம் குறித்து அதிமுக பொதுச்செயளாரும், முதலமைச்சருமான செல்வி.ஜெயலலிதாவுக்கும், எதிர்கட்சித் தலைவரும் திமுக பொருளாருமான மு.க.ஸ்டாலினுக்கும் இடையில் ஏற்பட்ட காரசாரமான விவாதத்திற்கு இன்று திமுக தலைவர் மு.கருணாநிதி பதிலடி கொடுப்பது போல் அறிக்கை விடுத்துள்ளார்.

“கச்சத் தீவை இந்தியா தாரை வார்த்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நான் இருந்ததாகச் சொல்கிறாரே, நான் தெரிவித்த எதிர்ப்பை ஆதார பூர்வமாக எடுத்துச் சொன்னால் எழுதியது தவறு என்று மன்னிப்பு கேட்க ஜெயலலிதா தயாராக இருக்கிறாரா?” என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

#TamilSchoolmychoice

“கச்சத் தீவைப் பொறுத்தவரையில், அதனைத் தாரை வார்க்க நான் எந்தக் காலத்திலும் ஒப்புக் கொண்டதும் இல்லை; உடன்பட்டதும் இல்லை. தமிழகத்தின் முதல் அமைச்சர் என்ற முறையில் என்னுடைய எதிர்ப்பை நான் அப்போதே தெரிவித்திருக்கிறேன். உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து அவர்களிடம் கருத்தறிந்திருக்கிறேன்.”

“ஆனால் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒரே ஒரு முறையாவது தமிழ்நாட்டிலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்து கச்சத் தீவை மீட்பது பற்றி கலந்தாலோசனை நடத்தியது உண்டா? நான் முதலமைச்சராக இருந்த காலத்தில், எந்த அளவுக்கு கச்சத் தீவினை மீண்டும் பெறுவதற்காகப் போராட முடியுமோ, வாதாட முடியுமோ அந்த அளவுக்கு போராடியிருக்கிறேன், வாதாடி இருக்கிறேன். ஆனால் எந்தப் பிரச்சினையிலும் இரட்டை வேடம் போடும் ஜெயலலிதா, கச்சத் தீவுப் பிரச்சினையில், “கச்சத் தீவை மீட்பது விரைவில் நடக்கக் கூடிய ஒன்றாகத் தெரியவில்லை” என்றும், “கச்சத் தீவைப் பிரித்துக் கொடுத்தது, இரு நாடுகளுக்குமிடையே நல்லுறவு வேண்டும் என்பதற்காகத் தான்” என்றும்; “கச்சத்தீவில் இலங்கை நாட்டுக்குள்ள இறையாண்மையை ஏற்றுக் கொள்ளலாம்” என்றும்; சொன்னவர் என்பது பதிவாகி இருக்கிறது.”

“எனவே ஜெயலலிதா அவ்வப்போது நினைத்துக் கொண்டு என் மீது வசைபுராணம் பாடுவதை இனியாவது நிறுத்திக் கொள்வது நல்லது!” என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.