Home Featured நாடு ம.இ.காவின் 70-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் – ஆகஸ்ட் 6 முதல் தொடங்குகின்றன!

ம.இ.காவின் 70-ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்கள் – ஆகஸ்ட் 6 முதல் தொடங்குகின்றன!

1117
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 1946ஆம் ஆண்டில் தோற்றம் கண்ட மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் (மஇகா) 70 ஆண்டுகள் அரசியல் பயணத்தைக் கொண்டாடும் வகையில் மிகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.

MIC-CWC-19 july 2016நேற்றைய மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுப்ராவோடு, மஇகா தலைவர்கள்…

“ம.இ.காவின் 70-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடுவதற்கான தயார் நிலையிலான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 1946-ஆம் ஆண்டு தொடங்கி தற்சமயம் வரை கட்சி கடந்து வந்த பாதைகள், சமுதாயம் எதிர்நோக்கி வந்த சவால்கள், கட்சி என்னும் அடிப்படையில் இதுநாள்வரை எடுத்திருக்கக்கூடிய நடவடிக்கைகள், சாதனைகள் அனைத்தும் இந்த 70-ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதிபலிக்கக்கூடிய வகையில் பல நடவடிக்கைகளும் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என நேற்று நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்திற்குப் பின்னர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் டாக்டர் சுப்ரா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“ 70-ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் முத்தாய்ப்பாக வருகின்ற ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி பிரதமர் அவர்கள் கலந்து கொள்ளும் விருந்து நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, நாடு தழுவிய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். கட்சியில் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும், கட்சியின் கடந்த காலப் பாதையை இளைய சமுதாயமும், இன்றைய தலைமுறையினரும் புரிந்து கொள்வதற்கும், ம.இ.கா மீது புதிய உத்வேகமும் உணர்ச்சியும் மேலோங்குவதற்கும் இந்த 70-ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டம் சிறந்த தளமாக அமையும் என்ற நம்பிக்கையிலான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றும் சுப்ரா மேலும் கூறினார்.

14வது பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் மஇகா

MIC-logoஅடுத்ததாக, நாட்டின் 14வது பொதுத்தேர்தலை எதிர்கொள்வதற்காக தொடக்க கட்ட பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ள சுப்ரா, மாநில ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் இருக்கக்கூடிய தேசிய முன்னணி தலைவர்களோடு ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளைத் தான் ஆரம்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

“14வது பொதுத்தேர்தலில் ம.இ.காவுக்கு ஒதுக்கீடு செய்யக்கூடிய தொகுதிகள், இடங்கள் குறித்து ஆரம்பத்திலேயே கண்டறிந்து, தேர்தல் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னதாகவே தேர்தல் ஆயத்த வேலைகளும் தொடங்கப்படும். தேர்தல் வரும் காலத்தில் தயார் நிலையில் இருந்து கூடுதலான இடங்களில் வெற்றியடையக்கூடிய வாய்ப்பினை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்” என்றும் அவர் பத்திரிக்கையாளர்களிடம் குறிப்பிட்டார்.

“அதேநேரத்தில், முன்பு அறிவிப்பு செய்ததைப் போல் சமுதாயத்திற்கான 11 அம்சங்கள் அடங்கிய சமுதாய உருமாற்றத் திட்டங்கள் தொடர்ந்து அமலாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கல்வியிலும் பொருளாதாரத்திலும் நம் சமுதாயம் முன்னேற்றம் கண்ட சமுதாயமாக உருமாற வேண்டும். அரசாங்கம் வழங்கியிருக்கக்கூடிய பல்வேறு சலுகைகளைக் கொண்டு இவ்வாண்டு குறைந்தபட்சம் 8000 சிறு தொழில் வியாபாரிகளை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தை அடைவதற்கான ஒருங்கிணைப்பு வேலைகளை ம.இ.காவின் தேசிய இளைஞர் பிரிவினரும், மகளிர் பிரிவினரும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதன்மூலமாக, வெற்றிகரமான தொழில் முனைவர்களை உருவாக்க வேண்டும் என்பதே ம.இ.காவின் நோக்கமாகும்” எனவும் சுப்ரா தெரிவித்துள்ளார்.

கல்வித் துறையில் வளர்ச்சி – தமிழ்ப் பள்ளிகள் மேம்பாடு

Subra-Dr-briefed on Ampang Tamil School-kamalanathanஅண்மையில் அம்பாங் தமிழ்ப் பள்ளிக்கான இணைப்புக் கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் சுப்ரா – கல்வித் துணையமைச்சர் கமலநாதன்…

கல்வித் துறையில், இருக்கக்கூடிய தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக மாபெரும் திட்டங்கள் வகுக்கப்பட்டு, அமலாக்கத்திற்குக் கொண்டு வரப்படுகின்றன என்றும், மேலும், கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்களோடு நெருக்கமான தொடர்பு வைத்துக் கொண்டு, அந்தத் தொடர்பின் அடிப்படையில் அவர்களுக்கும் சமுதாயத்தைப் பற்றியும் சமுதாயப் போராட்டங்களைப் பற்றியும் விளக்கம் கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்ட சுப்ரா “இது அவர்களுடைய வளர்ச்சிக்கும் உதவியாக அமையும்” என்றார்.

“இவையனைத்தும், ஒட்டுமொத்த சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும் கட்சியைத் தொடர்ந்து வலுப்படுத்துவதற்காகவும், இதன்வழி, அரசியலில் வலு சேர்த்து இந்திய சமுதாயத்தின் நலனைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்பதே ம.இ.காவின் தலையாய நோக்கமாகும்” என்றும் சுப்ரா வலியுறுத்தியுள்ளார்.