நடைமுறையில் இருந்து வந்த பன்றி இறைச்சி ஜெலட்டினில் இருந்து தயாரிக்கப்படும் தடுப்பூசிகளுக்குப் பதிலாக, மாட்டிறைச்சி ஜெலட்டினிலிருந்து உருவான 10 தடுப்பூசிகள் இனி பயன்படுத்தப்படும் என அண்மையில் தேசியத் தடுப்பூசி திட்டம் குறித்து அறிக்கையை வெளியிட்டது சுகாதார அமைச்சு.
“மாட்டிறைச்சி சார்ந்த ஜெலட்டினைப் பயன்படுத்துவதால், மலேசியாவில் சில தரப்பு மக்கள் அதனை மறுக்க வாய்ப்புள்ளது. எனவே அரசாங்கம் அம்மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என மலேசிய இந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ்.மோகன் ஷான் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் பொதுச்செயலாளர் வி.ரிஷிகுமார் கூறுகையில், மாட்டிறைச்சி சார்ந்த ஜெலட்டின் தடுப்பூசிகளை மறுக்க இந்துக்களுக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், விலங்குகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளை, மலேசிய சுகாதாரத்துறை முறைப்படி முத்திரையிட்டு, அவற்றை வகைப்படுத்த வேண்டும் என்றும், இதன் மூலம் மருத்துவர்களும், நோயாளிகளும் கலந்துபேசி, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்று மருந்துகளைப் பயன்படுத்த முடியும் என்றும் மோகனும், ரிஷியும் கேட்டுக் கொண்டுள்ளனர்.