Home Featured கலையுலகம் இசையும் இசையும் – ஈப்போவில் மின்னலின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி!

இசையும் இசையும் – ஈப்போவில் மின்னலின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி!

741
0
SHARE
Ad

minnal3கோலாலம்பூர் – கடந்த ஆண்டு மின்னலின் ‘இசையும் இசையும்’ நிகழ்ச்சிக்கு மக்களிடையே கிடைத்த மாபெரும் வரவேற்பினையடுத்து, இந்த ஆண்டும் நேயர்களை மகிழ்ச்சிபடுத்த, அதை விட இன்னும் சிறப்பான ஏற்பாடுகளுடன் களமிறங்குகிறது மின்னல் பண்பலை. அதற்கு பேராதரவு கொடுத்திருக்கிறது எண்ட்ரிகோஸ் நிறுவனம்.

இம்முறை ஈப்போவில், வரும் அக்டோபர் 2-ம் தேதி, இரவு 7 மணியளவில், ஈப்போ மாநகராட்சி சதுக்கத்தில் (Dataran Majlis Bandraya Ipoh) மிகப் பிரம்மாண்டமான முறையில் அரங்கேறவுள்ளது.

இந்த இசைக் கொண்டாட்டத்தில் 80ம், 90ம் ஆண்டுகளில் வெளிவந்த இளையராஜா பாடல்களும், ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களும் இடம்பெற்று ரசிகர்களை மெய்மறந்து ரசிக்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

minnal1ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நேயர்களை வசியப்படுத்த நமது உள்ளூர் கலைஞர்கள் சந்தேஷ், ஜீவா, லோகேஷ்வரன், ஜோதி, பிரித்தா பிரசாத், சாருமதி,ஷாமினி ஆகியோரின் படைப்புகள் அதிர வைக்கப் போகின்றன. அதே நேரத்தில்,அண்மைய காலமாக தமிழ் திரை உலகில் அதிக பாடல்களைப் பாடி ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்து வரும் முன்னணி பின்னணி பாடகர் சத்யபிரகாஷ் அவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து நேயர்களை மகிழ்ச்சிப்படுத்தப் போகின்றார். இளையராஜா,ஏ.ஆர் ரஹ்மான் இசையில் இவர் பாடிய அனுபவத்தையும் நேயர்களோடு பகிர்ந்துக்கொள்ளப் போகிறார்.

அதோடு, ராப் இசையில் இன்று உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ள, மலேசியாவின் ஸ்ரீ ராஸ்கோல், ராப் சொல்லிசை பாடகர் ஏடிகே ஆகியோரும் ஈப்போ நேயர்களை இசை மழையில் நனைய வைக்கப்போகிறார்கள்.

நேயர்களுக்குப் பரிசு

minnal2இசையும் இசையும் நிகழ்ச்சி தொடர்பாக, மின்னல் பண்பலை அண்மையில் நடத்திய போட்டிகளில், 30 விநாடிகளுக்கு இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களைப் பாடி, அதைக் காணொளியாகப் பதிவு செய்து மின்னல் பண்பலைக்கு அனுப்பி வைத்திருந்த நேயர்களில் சிறப்பாகப் பாடிய இரண்டு நேயர்கள் தேர்வு செய்யப்பட்டு, இசையும், இசையும் மாபெரும் மேடையில் சத்யாபிரகாஷுடன் சேர்த்து பாடும் வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது மின்னல்.

அதோடு, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானின் புகைப்படங்களை கோலாஜ் (Collage) செய்யும் போட்டியில், பங்கேற்ற போட்டியாளர்களில் வெற்றி பெற்றவர்களுக்கு அம்மேடையில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

செய்தியாளர் சந்திப்பு

இதற்கான அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பு நேற்று முன்தினம் புதன்கிழமை காலை தலைநகரில் நடைபெற்றது. அதில் மின்னல் பண்பலை நிர்வாகி எஸ்.குமரன், இசையும் இசையும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் தெய்வீகன் தாமரைச் செல்வன், எண்ட்ரிகோஸ் நிறுவனத்தின் தலைவர் எஸ்.கே.சுந்தரம் மற்றும் மின்னல் அறிவிப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி குறித்து அதன் தயாரிப்பாளர் தெய்வீகன் பேசுகையில், “கடந்த ஆண்டு இந்நிகழ்ச்சிக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியால் தான் இந்த ஆண்டு மீண்டும் உருவாகியுள்ளது. பினாங்கிலிருந்து இந்த ஆண்டு ஈப்போவிற்கு வருகிறோம். ரொம்ப அதிரடியாக, வித்தியாசமாக, பல தொழில்நுட்ப வசதிகளோடு இந்த இசைக் கொண்டாட்டம் அமையப் போகிறது. கடந்த ஆண்டு பினாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பினாங்கு மக்கள் மட்டுமல்ல, ஜோகூர் உட்பல பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பேருந்துகளில் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதே போல் இந்த ஆண்டும் மிகப் பெரிய மக்கள் கூட்டத்தை எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.

minn6அதனையடுத்து, மின்னல் பண்பலையின் நிர்வாகி எஸ்.குமரன் பேசுகையில், “கலைஞர்களோடு, நமது அறிவிப்பாளர்களின் வெற்றிக் கூட்டணியில் வருகின்ற அக்டோபர் 2-ம் தேதி, ஈப்போவில் இந்த இசைக்கொண்டாட்டம்  நடைபெறுகின்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்து வரும் ‘ஆனந்தத் தேன்காற்று’ நிகழ்ச்சியில் 80-ம், 90-ம் ஆண்டு பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. அந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெறக் காரணம், வேலை முடிந்து மனஉளைச்சலில் வீட்டுக்குச் செல்லும் மக்கள் இதில் இடம்பெறும் பாடல்களைக் கேட்கும் போது அப்படியே தமது கவலைகளையெல்லாம் மறந்துவிடுவார்கள். அதனால் அந்நிகழ்ச்சி மக்களுக்கு ஒரு மருந்தாகவே அமைகின்றது.”

“ஒருகட்டத்தில் எண்ட்ரிகோஸ் நிறுவனம் அந்நிகழ்ச்சியை வாங்குவதற்காக வந்தார்கள். அவர்கள் வந்தவுடன் அந்நிகழ்ச்சி இன்னும் சிறப்பாகச் சென்றது. அதன்பின்னர் 2015-ம் ஆண்டு அவர்கள் இசை நிகழ்ச்சி செய்வோம் என்று சொன்னார்கள். அதன் படி, முதல் முறையாக இசை நிகழ்ச்சி செய்தோம். சுமார் 12,000 மக்கள் கலந்து கொண்டார்கள். மக்களிடம் கிடைத்த மிகப் பெரிய ஆதரவு காரணமாக, இம்முறை ஈப்போவில் மீண்டும் ஒரு இசை நிகழ்ச்சியைப் படைக்கவுள்ளோம்” என்று தெரிவித்தார்.

minn5அதோடு, இந்த பிரம்மாண்ட நிகழ்வில் கலந்து கொள்ள இலவச அனுமதி என்பதோடு, அரங்கிற்கு வெளியே சிறிய கடைகள் போட்டுக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் எஸ்.குமரன் தெரிவித்தார்.

மின்னல் நடத்தும் இந்நிகழ்ச்சியில் எங்குமே கட்டணங்கள் அளிக்கத் தேவையில்லை என்றும், இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எஸ்.குமரன் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய எண்ட்ரிகோஸ் நிர்வாகி எஸ்.கே.சுந்தரம், மக்களுக்கு மருந்தாக இருக்கும் பாடல்களை ஒலிபரப்பி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வரும் மின்னல் பண்பலை அறிவிப்பாளரையும், நிர்வாகி எஸ்.குமரனையும் பாராட்டியதோடு, பொதுமக்கள் பெருந்திரளாக ஈப்போவில் நடைபெறும் இசைக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு மகிழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆகவே, இதுவரையில் நீங்கள் பார்த்திராத அளவில் மிகப் பிரமாண்டமாக இசை நிகழ்ச்சியாக இது அமையப் போகின்றது. பேராக் மாநிலத்தைச் சேர்ந்த நேயர்கள் தங்களது அபிமான மின்னல் அறிவிப்பாளர்களையும், கலைஞர்களையும் கண்டுகளிக்க இது சிறந்த வாய்ப்பாக அமையவுள்ளது.

ஈப்போவில், வரும் அக்டோபர் 2-ம் தேதி, இரவு 7 மணியளவில், ஈப்போ மாநகராட்சி சதுக்கத்தில் (Dataran Majlis Bandraya Ipoh) மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ள இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழுங்கள்.