சுப்ரா தனது உரையில், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களுக்கும், நூல் வெளியீட்டு விழாக்களுக்கும் மஇகா தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் என அறிவித்தார்.
நாட்டில் பல தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் வெளியீட்டு விழாக்களுக்கு மஇகா தலைவர்கள் தனிப்பட்ட முறையிலும், நேரில் கலந்து கொண்டும் தொடர்ந்து மலேசியத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்காக ஆதரவு தெரிவித்து வந்திருக்கின்றனர்.
இருந்தாலும், இனி அதிகாரபூர்வமாக, முதல் கட்டமாக மாதம் ஒருமுறை ஒரு தமிழ் நூல் அச்சு வடிவில் வெளியிடப்பட்ட மஇகா உதவி செய்யும் என்பதோடு, அந்த நூல் வெளியீட்டு விழா மஇகா தலைமையகக் கட்டிடத்தின் நேதாஜி அரங்கத்திலேயே வெளியிடப்பட வசதிகள் செய்து தரப்படும் என்றும் சுப்ரா அறிவித்தார்.
முத்தரசன் நாவல் குறித்து சுப்ரா கருத்து
இரா.முத்தரசனின் ‘மண்மாற்றம்’ என்ற நாவலைப் படித்ததாகக் கூறிய டாக்டர் சுப்ரா, அந்த நாவலின் சில பக்கங்களை தனது உரையின்போது வாசித்தும் காட்டினார். குறிப்பாக, நாவலில் ஒரு சம்பவமாக வரும் ஒரு மஇகா தலைவர் குறித்தும், அந்தத் தோட்டத்தில் உள்ள மஇகா கிளை குறித்தும் எழுதப்பட்ட பகுதிகளை வாசித்துக் காட்டிய சுப்ரா, அதுபோன்று மீண்டும் நடக்காமல் இருக்க மஇகாவிலும் மாற்றங்கள் கொண்டுவரத் தான் பாடுபட விரும்புவதாகவும் தெரிவித்தார்.