“என்னைப் பச்சைத் தமிழனாக்கியது நீங்கள்தான்” – ரஜினி கூறுகிறார்!

rajini-19052017-

சென்னை – கடந்த 5 நாட்களாக தனது இரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வந்த நடிகர் ரஜினிகாந்த், இன்று வெள்ளிக்கிழமை தனது அரசியல் பிரவேசம் குறித்து மேலும் சில சூசகமான தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

கடந்த சில நாட்களாக, சமூக வலைத் தளங்களில் ரஜினி தமிழனில்லை என சிலர் தாக்கி எழுதி வந்ததைக் குறிப்பிட்டிருக்கும்  ரஜினி “அரசியலுக்கு எதிர்ப்புதான் மூலதனம். எதிர்ப்புகள் இருந்தால்தான் அரசியலில் வளர முடியும்” என பலத்த கரவொலிக்கிடையில் கூறினார்.

“எனக்கு இப்போது 67 வயதாகிறது. நான் 23 வருடங்கள்தான் கர்நாடகாவில் இருந்தேன். அதன்பின்னர் இங்கே தமிழ் நாட்டில் உங்களோடுதான் இருந்தேன். வளர்ந்தேன். எனக்கு ஆதரவு, புகழ், பொருள் எல்லாம் கொடுத்து என்னைப் பச்சைத் தமிழனா ஆக்கியதே நீங்கள்தான். நான் பச்சைத் தமிழன். எனது அப்பா, மூதாதையர்கள் எல்லாம் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர்கள்தான் என ஏற்கனவே நான் தெரிவித்திருக்கிறேன்” என்றும் ரஜினி பலத்த ஆரவாரத்துக்கிடையில் இரசிகர்களைப் பார்த்துக் கூறினார்.

“இப்போது என்னைத் தூக்கி தமிழ் நாட்டை விட்டு வெளியே வீசினால் நான் இமயமலையில் போய்த்தான் விழுவேனே தவிர, வேறு எந்த மாநிலத்திலும் போய் விழமாட்டேன்” என்றும் ரஜினி கூறியிருப்பதைத் தொடர்ந்து தனது எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவும், உரிய முறையில் பதிலளிக்கவும் ரஜினி தயாராகிவிட்டார் என்பதை இன்றைய நடப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.

மேலும், புதிய அரசியல் கட்சி தொடக்கம் குறித்தும் ரஜினி கூறியிருக்கிறார்.

“அந்தக் காலத்து ராஜாக்கள் தங்களுக்கென சொந்த படைகள் வைத்திருப்பார்கள். மக்கள் மற்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால், போர் என்று வரும்போது அனைத்து மக்களும் போருக்குத் தயாராவார்கள். அதுபோல் இப்போது நீங்கள் இல்லங்களுக்கு திரும்பி சென்று உங்களின் வேலைகளைப் பாருங்கள். நேரம் வரும்போது போருக்குத் தயாராவோம். அப்போது வாருங்கள்” என்ற முழக்கத்துடன் தனது இரசிகர்களுடனான சந்திப்பை ரஜினி நிறைவு செய்திருக்கிறார்.

-செல்லியல் தொகுப்பு

 

Comments

Leave a comment

You must be Logged in to post comment.

Recent Posts